Home » » கட்..கட..... கட்..கட:-கடைசி நாளில் ஜெராக்ஸ் எடுக்க படிவம் ஒன்றுக்கு ரூ50/- சென்னையில்!

கட்..கட..... கட்..கட:-கடைசி நாளில் ஜெராக்ஸ் எடுக்க படிவம் ஒன்றுக்கு ரூ50/- சென்னையில்!





கட்..கட.....கட்..கட.....கட்..கட.....

தந்தி சேவையின் கடைசி நாளான கடந்த ஜூலை 14ஆம் தேதி, சில நண்பர்களுக்கு தந்தி கொடுத்து "வரலாற்றில் இடம் பிடிக்கும்' ஆர்வத்தோடு மதியம் சுமார் இரண்டு மணிக்கு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மத்திய தபால் அலுவலகத்திற்கு (ஜி.பி.ஓ.) சென்றேன்.

அங்கு அதிக ஆள் நடமாட்டம் இல்லை. அங்கிருந்த ஒருவரிடம் "தந்தி அனுப்பும் படிவம் வேண்டும்' என்று கேட்டேன். அவர் "தந்தி அலுவலகம் பக்கத்து தெருவில் இருக்கிறது' என்றார். பக்கத்து தெருவுக்கு விரைந்து சென்றேன்.

அங்கிருந்த பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் ஒரு பகுதியில் இருந்த தந்தி அலுவலகத்தில் தொடங்கிய மக்கள் வரிசை அந்தத் தெருவின் பாதி வரை நீண்டிருந்தது.

"படிவம் எங்கு கிடைக்கும்' என்று வரிசையின் கடைசி நபரிடம் கேட்டேன். அவர் "தந்தி அலுவலகத்தின் உள்ளே தந்தி புக் செய்யும் ஜன்னலில்தான் படிவம் கிடைக்கும்' என்றார்.

அந்த வரிசையைக் கடந்து ஒருவழியாக ஜன்னலை நெருங்கினால் அங்கு படிவம் வாங்குவதற்கென்றே தனியாக ஒரு சிறிய வரிசை இருந்தது. அந்த வரிசையில் நின்று ஜன்னலை நெருங்கி "ஆறு ஃபார்ம்' என்று குரல் கொடுத்தபடி நான் கைநீட்ட என் கையில் ஒரு படிவம் திணிக்கப்பட்டு, "ஒருத்தருக்கு ஒரு ஃபார்ம்தான், தேவைப்பட்டால் ஜெராக்ஸ் எடுத்துக்கங்க' என்று சொன்னார் அலுவலர். படிவத்தோடு தெருவுக்கு நான் வந்தபோது மணி 2.30.

ஜெராக்ஸ் கடையைத் தேடி விரைந்து நடந்தேன். அந்தத் தெருவில் இருந்த இரண்டு ஜெராக்ஸ் கடைகளும் மூடப்பட்டிருந்தன.

பக்கத்துத் தெருவிலிருந்த ஒரு கடையும் திறக்கப்படவில்லை (அன்று ஞாயிற்றுக்கிழமை). மூன்றாவது தெருவில் இருந்த ஒரு ஜெராக்ஸ் கடை வாசலில் நீண்ட வரிசையில் ஆட்கள் நின்றிருந்தார்கள். நானும் போய் நின்று கொண்டேன். அந்தக் கடையில் அதுவரை அவ்வளவு ஜெராக்ஸ் எடுக்கப்பட்டிருக்காது என்பது அந்த கடைக்காரர் ஜெராக்ஸ் எடுக்கும் விதத்திலேயே தெரிந்தது.

என் முறை வந்ததும் படிவத்தைக் கொடுத்து "ஐந்து காப்பி இரண்டு பக்கமும்' என்று சொன்னேன். உடனே அவர் "ஐம்பது ரூபாய்' என்று சொன்னார். அதிர்ச்சியடைந்து "ஐம்பதா' என்று நான் கேட்டதும் "ஆமா சார் ஒரு பக்கத்துக்கு அஞ்சு ரூபா' என்று நிதானமாகச் சொன்னார். பொதுவாக ஒரு பக்கத்திற்கு ஜெராக்ஸ் எடுக்க ஒரு ரூபாய் அல்லது ஒரு ரூபாய் ஐம்பது காசுதான்.

வேறு வழியில்லாமல் ஐம்பது ரூபாய் கொடுத்து ஐந்து காப்பி எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்து நான் நிற்கும்போது முன்பு பாதித் தெருவரை இருந்த ஆட்களின் வரிசை இப்போது முக்கால் தெரு ஆகியிருந்தது. மணியும் 4.00 ஆகியிருந்தது.

ஒரே ஒரு கவுண்டரில் இருக்கும் ஒரே ஒரு அலுவலர் ஒவ்வொருவரிடமும் படிவத்தை வாங்கி சரிபார்த்து, தவறு இருந்தால் திருத்தச் சொல்லி (பலர் முதல் முறையாக தந்தி கொடுப்பவர்கள்), உரிய தொகையை வாங்கி, ரசீது டைப் செய்து கொடுத்து - இடையிடையே வருபவர்களுக்கு தந்திப் படிவம் கொடுத்து - இப்படி எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்ததால் ஆட்கள் வரிசை மிக மிக மெதுவாக நகர்ந்தது.

நான் என் கையிலிருந்த படிவங்களில், தந்தி கொடுப்பவர், பெறுபவர் விவரங்களையெல்லாம் எழுதிவிட்டு பொதுவாக வாழ்த்து தந்தியாக கொடுத்து விடலாம் என்று நினைத்து "அன்பான வாழ்த்துகள்' என்பதற்கான தந்தி குறியீட்டு எண் நினைவில்லாததால் சுற்றும் முற்றும் பார்த்தேன். தந்தி குறியீட்டு எண் பட்டியல் அங்கு இல்லை.

புதுமையான முறையில் எப்படி வாழ்த்து சொல்லலாம் என்று நான் விதவிதமாக யோசித்துப் பார்த்தேன். அதற்குள் என்னையறியாமலே நான் தந்தி கவுண்டர் அருகில் வந்து விட்டதால் அங்கிருந்த அலுவலரிடம் ஆறு படிவங்களையும் கொடுத்து "அன்பான வாழ்த்துகள்' என்பதற்கான எண்ணைக் குறித்துக் கொள்ளச் சொன்னேன். அப்போது அவர் என்னைப் பார்த்தது கண்களால் அல்ல; நெற்றிக் கண்ணால். ஒரு வழியாக பணத்தைக் கொடுத்து ரசீதைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்தபோது மாலை மணி 6.00.

தந்தி சேவை முடிவடைகிற நாளில் சிலருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்கிற எனது எண்ணம் நிறைவேறி விட்டாலும் மனதில் ஒரு அயற்சி ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக பொது மக்களின் பயன்பாட்டில் இருக்கும் ஒரு சேவையை நிறுத்த முடிவெடுத்தவர்கள் அதற்கு அத்துறையின் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்தது ஏனோ?

இதனால் சென்னையில், ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் ராஜாஜி சாலை, எத்திராஜ் சாலை ஆகிய இரண்டு தந்தி அலுவலகங்களில் மட்டுமே சேவை பயன்பாட்டில் இருந்தது.

அவை தவிர சென்னை தொலைபேசி வட்டத்தின் கீழ் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஐந்து தந்தி அலுவலகங்களும் 28 சேவை மையங்களும் தந்தி சேவையின் கடைசி நாளான
ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்ல அதற்கு முந்தைய நாள் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றும் மூடப்பட்டிருந்தன. சிறிய மற்றும் நடுத்தர ஊர்களில் இருக்கும் தந்தி அலுவலகங்களின் நிலையும் இதுதான்.

கடைசி முறையாக தந்தி அனுப்ப விரும்பியவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு தந்தி அனுப்பி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த விரும்பியவர்கள், தங்கள் பெயருக்கே தந்தி அனுப்பி, வருங்காலத் தலைமுறையினருக்காக ஒரு தந்தியை பாதுகாத்து வைக்க விரும்பியோர் ஆகியோரின் ஆசைகள் நிராசையாயின.

தந்தி சேவையின் இறுதி நாளன்று அதிகம் பேர் தந்தி அனுப்புவார்கள் என்பது பி.எஸ்.என்.எல். நிர்வாகத்திற்குத் தெரியாதா?

அன்று பெரும்பாலான தந்தி அலுவலகங்கள் விடுமுறையாகி விட்டதால், திறந்திருக்கும் ஒன்றிரண்டு அலுவலகங்களிலாவது ஒரு சிலரை சிறப்பு அலுவலர்களாக அன்று மட்டும் பணியமர்த்தியிருக்கக் கூடாதா?

போதிய அளவிலான தந்திப் படிவங்களைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டாமா?

தந்தி வாசகங்களுக்கான குறியீட்டு எண்களை வாடிக்கையாளர்களின் கண்களில் படும்படி வைத்திருந்தால் பலருக்கும் அது பெரிய உதவியாக இருந்திருக்குமே. இப்படியெல்லாம் என் மனம் யோசித்தது.

என்ன யோசித்து என்ன பயன்? தந்தி சேவைக்குத்தான் முற்றுப்புள்ளி விழுந்தாகி விட்டதே... கடைசி நாள் கடைசித் தந்தி கொடுத்தோம் என்கிற சாதனைப் பெருமூச்சுடன், மொபைல் போனை எடுத்தேன்.

"தந்தி சேவையின் கடைசி நாள். உனக்குத் தந்தி அனுப்பி இருக்கிறேன்' என்று நான்

தந்தி அனுப்பிய ஆறு நண்பர்களுக்கும் "குறுஞ்செய்தி' அனுப்பி என்ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டேன்.
------------------------------------------------------------------------------------------------------------

தந்திக்கு மாற்றாக A4 வடிவில்  எழுதப்பட்டுள்ள தகவலை குறைந்த செலவில்

அனுப்ப வசதிசெய்துள்ளதாக அஞ்சலக நிர்வாகம் அறிவித்துள்ளது. எல்லா

அஞ்சலகங்களிலும் இந்த வசதி உள்ளதா? போய்ச் சேரும் அஞ்சல்

அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வசதியுள்ளதா ? என்பதெல்லாம், நண்பர்

ராஜ்கண்ணன் போன்றோர்  களப்பணியாற்றிக் கட்டுரை எழுதி, அதனைத்

தினமணி அச்சேற்றினால்தான் தெரியவரும்.

--------------------------------------------------------------------------------------------------------------.

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger