Home » » தமிழ் இலக்கியத்தில் அறிவியல் - தில்லித் தமிழ்ச் சங்கத்தில் கருத்தரங்கம்

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் - தில்லித் தமிழ்ச் சங்கத்தில் கருத்தரங்கம்

கருத்தரங்கத்தில் பேசும் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ். 
உடன் (இடமிருந்து) 
தில்லித் தமிழ் சங்கப் பொதுச் செயலர் இரா. முகுந்தன், 
நெல்லை சு. முத்து, ஷாஜகான், பா. கிருஷ்ணன், 
அப்துல்காதர், வெங்கடேசன், சந்திரசேகர்.
 
"தமிழ் முகவரியை இழந்து ஆங்கிலத்தைத் தேடி எப்போது ஓட ஆரம்பித்தோமோ, அப்போதே நாம் நமது அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம்'

என்று  குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ் கவலை தெரிவித்தார்.

தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பில், "தமிழ் இலக்கியத்தில் அறிவியல்' என்ற தலைப்பில் திருவள்ளுவர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தில்லி தமிழ்ச் சங்கத் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி தலைமை வகித்தார்.

வி.பொன்ராஜ் பேசியதாவது:

குறுந்தொகையில் "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி' என்று தொடங்கும் பாடலில் கூந்தல் மணம் குறித்து விவாதம் வரும். அது அறிவியல் சிந்தனைதான்.

கண்ணப்ப நாயனார் சிவன் கண்ணில் ரத்தம் வழிவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் தன் கண்ணையே பெயர்த்து எடுத்துவைத்தார். அது மாற்றுக் கண் அறுவைச் சிகிச்சைக்கான அறிவியலின் தொடக்கம்.

அறிவியலையும், இலக்கியத்தையும் இணைத்தால் மனித குலத்துக்குப் பெரும் பயன் கிடைக்கும். ஆங்கில மோகத்தால் தமிழ் அறிவுச் செல்வங்களை இழந்துவிட்டோம் என்றார்.

பேராசிரியர் அப்துல்காதர்:

இலக்கியம் படிக்கும் போது அழகியல் உணர்ச்சிக்காக படிப்பது ஒரு வகை. கருத்துச் செறிவுகளுக்காக படிப்பது மற்றொரு வகை. இந்த இரண்டையும் அறிவியல் பார்வையுடன் சேர்த்து இலக்கியத்தைப் படிக்க வேண்டும். அந்தப் பார்வை நம்மிடம் அதிகரிக்க வேண்டும். வாழ்வியலோடு அறிவியலைச் சொல்லித் தர வேண்டும் என்றார். 

நெல்லை சு.முத்து (அறிவியல் எழுத்தாளர்):

ஆன்மிகமும் ஒருவகை அறிவியல்தான்.அறிவியல் அக வசதிகளையும், புற வசதிகளையும் ஏற்படுத்தித் தருகிறது. அக வசதியால் ஒருவருடைய ஆளுமை வளர்கிறது. புற வசதியால் தொழில்நுட்ப சாதனங்கள் பெற்றுப் பயன்படுத்துகிறோம். திருக்குறள் அற நூலாக பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. அதில் அதிகமான அறிவியல் கருத்துகள் உள்ளன என்றார்.

பா. கிருஷ்ணன் (கௌரவ விரிவுரையாளர்): தில்லித் தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தும் போது  அறிவியல் தமிழுக்கான அமர்வு இடம் பெற வேண்டும்.

திருக்குறளில் அறக் கருத்துகள் மட்டுமல்ல, அறிவியல் கருத்துகள், மேலாண்மை அறிவியல் கருத்துகள், அரசியல் அறிவியல் கருத்துகள் போன்றவை உள்ளன. அவற்றை படித்து நாம் பயன் பெற வேண்டும் என்றார். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சந்திரசேகர்,

அறிவியல் அறிஞர் வெங்கடேசன், தில்லித் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஷாஜகான் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். 

கருத்தரங்கின் தொடக்கத்தில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் வரவேற்றார். கருத்தரங்கத்தின் நோக்கத்தை டாக்டர் சுந்தர்ராஜன் விளக்கினார். தமிழ்ச் சங்கத்தின் இணைப் பொருளாளர் நரசிம்மமூர்த்தி நன்றி கூறினார்.

முன்னதாக, மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது.

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger