எனக்கு வயது 54. சில வருடங்களுக்கு முன் தினம் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 1/4 - 1/4 - 1/4 பிராந்தி குடிப்பேன். இதனால் வலது பக்க மூளை நரம்பு பாதிக்கப்பட்டு இடது கால், இடது கை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இழுத்து இழுத்து நடந்து வருகிறேன். பஸ்ஸிலிருந்து வழுக்கி விழுந்து இடது காலில் காயம் ஏற்பட்டு ஆறாமல் இருக்கிறது. காயத்தில் ஈக்கள் மொய்க்கின்றன. இப்போது ஒரு வேளை மட்டும் 90 மி.லி. மது அருந்துகிறேன். படுத்து எழும்போது தலை சுற்றல் ஏற்படுகிறது. பணமில்லாமல் கடந்த கால பழக்கங்களை நினைத்து மனம் வருந்துகிறேன். இந்த உபாதை தீர வழி இருக்கிறதா?
எஸ்.ஜவஹர் டேனியல், சென்னை-19.
மதுபானம் உடலில் சூடு ஒரே சீராக அதிகமாகப் பரவச் செய்யும். ஊடுருவும் தன்மையுடையது. மிக நுண்ணிய உடல் ஓட்டைகளின் வழியே கூடப் பரவும். வழியிலுள்ள அடைப்புகளை அகற்றி பாதையைச் சீராக்கும். பாதையிலுள்ள கசிவை வறளச் செய்து தடையை நீக்கும். வேகமாகச் செயலாற்றும். முதலில் உடலில் பரவி அதன் பிறகே ஜீரணமாகும்
பூட்டுகளில் உள்ள கட்டுகளை நெகிழ்த்தி காற்றில் பறப்பது போல உடலை லேசாக்கும். ஆனால் மிகவும் சூட்டை உடலில் ஏற்படுத்துவதால் குளிர்ச்சியான பொருட்களின் உபசாரம் அதிகம் தேவைப்படும். ஊடுருவும் தன்மையுடையதால் மன ஓட்டம் பாதிக்கப்படும். உடலிலுள்ள கபப் பூச்சு காயும். உடலின் உட்புறம் வளர்ச்சியடையும். பிசுபிசுப்பும் நீர்ப்புமுள்ள தாதுக்கள் வலிமையிழக்கும். வறட்சி மிகுந்து வாயுவால் நரம்பு வலி அதிகமாகும்.
பரபரப்பு மிகுதியும், வலிவின் அடிப்படையில் எழாததும், வெறும் நரம்பு முறுக்கால் ஏற்படுவதுமான மனக் களிப்பு போன்ற போலிநிலையும் ஏற்படும். உடல் வசீகரம், ஒளி, மனத்திருப்தி, தைரியம், பராக்ரமம் இவை அளவுடன்
முறையுடன் தகுதியறிந்து மதுபானம் செய்வதால் கிட்டலாம்.
ஆனால் முறையும் தன் தகுதியும் அறியாதவன், வேறு நோய்வாய்ப்பட்டவன், புஷ்டியான உணவின்றி, அளவுக்கு மீறிக் குடிக்கும்போது, வயிற்றிலுள்ள நெருப்பம்சம் உள்ள ஜீரணத் திரவங்களுடன் சேர்ந்த மது நெருப்பாக மாறித் திமிரைத் தரும்.
மனமும் புத்தியும் பொறிகளும் தடுமாறும்போது தன் உள்ளக் கிடக்கைகளை வெளியிடாமல் இருக்க முடியாதவனாக, வலிவும் எதிர்ப்புச் சக்தியும் உறுதியும் தளர்ந்து பிதற்றலும் நினைவிழத்தலும் உண்டாகிச் சமுதாயத்தால் இளக்காரமாகப் பார்க்கப்படுகிறான் என்று ஸுச்ருதர் எனும் ஆயுர்வேத முனிவர் குறிப்பிடுகிறார்.
மதுபானத்தின் தொடர் சேர்க்கையால் உங்களுடைய மூளைப் பகுதியிலுள்ள நரம்புகள் வறட்சியினால் பாதிக்கப்பட்டு, பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளது. க்ஷீரபலா 101, தான்வந்திரம் 101 போன்ற நரம்புகளை வலுப்படுத்தும் மூலிகை நெய் மருந்துகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீராவியில் உருக்கி, மூக்கினுள் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தும் சிகிச்சைமுறை நல்லது. தலையில் எண்ணெய்யை நிறுத்தி வைக்கும்
சிரோவஸ்தி எனும் சிகிச்சைமுறையும் நல்லதே. உடல் நரம்புகளை வலுப்படுத்தும் மூலிகை எண்ணெய் தேய்ப்பு, மூலிகை இலைகளால் இதமான சூட்டில் ஒத்தடம் கொடுப்பது,
மதுபானத்தால் ஏற்பட்டுள்ள நச்சுத்தன்மையை ஆஸன வாய் வழியாகச் செலுத்தப்படும் எனிமா (வஸ்தி) சிகிச்சை முறை, நவர அரிசியை சித்தாமுட்டி வேர் கஷாயம் கலந்த பாலுடன் வேக வைத்து, உடலெங்கும் தேய்த்துவிடுதல் போன்ற சிகிச்சைமுறைகள் தங்களுக்கு நன்மை தரக் கூடும்.
உங்களால் 90 மி.லி. மதுபானம் சாப்பிடுவதை விட முடியவில்லை. திடீரென்று அறவே நிறுத்திவிடவும் கூடாததுதான். அதனால் மதுவில் சுமார் 2% குறைத்து, அந்த அளவில் நற்குணங்களைக் கொண்ட ஆஸவாரிஷ்ட ஆயுர்வேத மருந்துகளை அந்த 98% மதுவுடன் சேர்த்து முதலில் சாப்பிட்டு, பிறகு நாளுக்கு நாள் மதுவின் அளவை கிரமமாக 2% வீதமாய் மேலும் மேலும் குறைத்து, அந்த அளவில் நல்ல ஆஸவாரிஷ்டத்தைச் சேர்த்துச் சாப்பிடவும்.
இப்படிச் செய்து கொண்டே வந்தால் இறுதியில் மதுபானம் முற்றிலும் ஒழிந்து, அந்த அளவுக்கு நல்ல திரவத்தின் பானம் வந்துவிடும். மதுபானத்தினால் ஏற்படும் இன்னல் எதுவும் வராது. அதன் மீதுள்ள இச்சையும் தொடராது. மதுபானத்தை நிறுத்த விரும்பும் நபர்களும் இந்த முறையைப் பின்பற்றினால், மதுப்பழக்கத்திலிருந்து விரைவில் விடுபடலாம்.
துவர்ப்புச் சுவையை உடைய திரிபலை, கருங்காலிக் கட்டை போன்றவற்றால் காய்ச்சப்பட்ட நீரை புண்ணின் மீது விட்டு கழுவி வந்தால், விரைவில் புண் ஆறிவிடும். ஈக்கள் மொய்க்காதவாறு பஞ்சு வைத்துக் கட்டிக் கொள்ளவும்.
அஸவ்கந்தாரிஷ்டம் எனும் ஆயுர்வேத மருந்தைச் சுமார் 30 மி.லி. காலை, இரவு உணவுக்குப் பிறகு, சாப்பிட்டு வந்தால், உங்களுக்கு ஏற்பட்டுள்ள தலைச்சுற்றல் உபாதை குறைந்துவிடும்.
நன்றி :- தினமணி கதிர், 21-07-2013
0 comments:
Post a Comment