Home » » ஒன்றுக்கும் மேற்பட்ட கபிலர்களும், கபிலர் மலையும்

ஒன்றுக்கும் மேற்பட்ட கபிலர்களும், கபிலர் மலையும்

தென்பெண்ணை ஆற்றில் உள்ள கபிலர் மலை

கபிலம்' என்னும் சொல் நிறத்தைக் குறிக்கும். கருமை கலந்த பொன்நிறமே "கபில' நிறமாகும். பசுக்களுள் "கபில நிறப்பசு' சிறந்தது என்பர். ஆகையால், கபில நிறப்பசுவைத் தமிழர்கள் தானமாகக் கொடுத்தனர். இச் செய்தியைப் புறப்பொருள் வெண்பாமாலை, ""கபிலை கண்ணிய புண்ணிய நிலை'' என்று குறித்துள்ளது. யானைகளுள் கபிலநிற யானைகளும், உருத்திராக்க மணிகளுள் கபிலநிற மணிகளும் உண்டென்பர். இதுவரை கபில நிறத்தைப் பற்றிச் சுருக்கமாக அறிந்தோம். இனி, கபிலர் என்னும் பெயர் பற்றி அறிவோம்.
 
 விநாயகப் பெருமானின் பல்வேறு பெயர்களுள் ஒன்று கபிலர் (கபிலாய நம:). "சாங்கியமதத் தத்துவங்களைக் கூறியவர் கபிலமுனி என்ற பெயருடையவர் ஆவார்' என்பதைச் சிவஞானமுனிவர் குறிப்பிட்டுள்ளார்.
 பகவத்கீதையில் கண்ணன், "சித்தனாம் கபிலோமுனி' என்ற சொற்றொடரால் "சித்தர்களுள் கபில முனியாக இருக்கிறேன்' என்ற கருத்தைப் புலப்படுத்தியுள்ளார். இத்தொடரால் கபிலர் என்ற பெயருடைய ஒருவர் சித்தர்களுக்கெல்லாம் தலைவராக இருந்தார் என்பது தெரிகிறது. கூர்மபுராணத்திலும் கபிலர் பற்றிய குறிப்பு உண்டென்பர். சகரரைத் தன்னுடைய கோபாக்கினியால் எரித்தவர் கபிலமுனி ஆவார்
.
தமிழிலக்கியங்களில் "கபிலர்' என்ற பெயரால் பலர் குறிக்கப் பெற்றுள்ளனர். இதில் சங்ககால கபிலர் தலைமையானவர். இவர் சங்க இலக்கியங்களில் மிகுதியாகப் பேசப்பட்ட புலவராவார்; மிகுதியாகவும் பாடியுள்ளார். இவரைப் "புலன் அழுக்கற்ற அந்தணர்' என்பர்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "இன்னாநாற்பது' என்னும் இலக்கியத்தை இயற்றியவரின் பெயரும் கபிலராகும்.

சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையிலுள்ள மூத்தநாயனார் திருஇரட்டை மணிமாலை, சிவபெருமான் இரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி ஆகிய முன்று சிற்றிலக்கியங்களையும் இயற்றியவர் கபிலதேவ நாயனார் ஆவார்.

இவரின்றிக் "கபிலரகவல்' என்னும் இலக்கியத்தை இயற்றியவரின் பெயரும் கபிலராகும். இவர் அந்தணர் அல்லாதவர் என்று அறியப்படுகிறது.

மேற்குறித்த தமிழ்நாட்டுக் கபிலர் பலருள் சங்க காலத்துக் கபிலரே சிறந்தவராவார் என்பதை சங்க இலக்கியங்கள் மெய்ப்பிக்கின்றன.

இக்கபிலர் வள்ளல்களாகிய காரி, பாரி காலத்தில் வாழ்ந்தவர். இவருடைய பெயரைப் பாரி தன் நெடுநகருக்குப் பெயராக வைத்திருந்ததை, "கபிலநெடுநகர்' என்று புறநானூற்றுத் (337) தொடர் குறிப்பிட்டுள்ளது.

 பாரி, கபிலரின் பெயரைத் தன் நாட்டிற்கு வைத்ததைப் போன்று, திருக்கோவலூருக்கும் கபிலர் பெயர் வைக்கப்பட்டது. இச் செய்தியை, தவத்திரு சிவசண்முக ஆறுமுக மெய்ஞ்ஞான சுவாமிகள் தாம் அருளிய "சதுர்லிங்க தசகோத்திர தசகம்' என்னும் நூலுள் ""கபிலர் அர்ச்சித்த இலிங்கமே கபிலபுரமென்க''(35) என்னும் அடியால் குறிப்பிட்டுள்ளார். மேலும், இக்குறிப்பின் வழியாகவும் வெவ்வேறு சான்றுகளின் வழியாகவும் நோக்கினால், திருக்கோவலூருக்கும் கபிலருக்கும் உள்ள பலவிதமான தொடர்புகள் புலப்படும்.


தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் உயர்திணைப்பெயர் ஈறுகெட்டு முடிந்ததற்குக் (தொகை மரபு, நூற்பா.11) கபிலபரணர்  என்கின்ற தொடர் இளம்பூரணர் உரையில் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது.

 தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் ஆறாம் வேற்றுமையில் வரும் தெரிந்த மொழிச் செய்திக்கு, (வேற்றுமையியல், நூற்பா.76) கபிலரது பாட்டு என்னும் தொடர் இளம்பூரணர் உரையில் காட்டப்பெற்றுள்ளது. அதே அதிகாரத்தில் வேற்றுமை மயங்கியலில், வினை செய்தான் பெயர் சொல்ல, அவன் செய்பொருளை அறிய நிற்றல் பகுதிக்குத் (நூற்பா.110)

தொல்காப்பியமும் கபிலமும்  என்ற தொடர் சான்றாக உள்ளது. இத்தொடர் வழி, தொல்காப்பியத்தைப் போல கருதத்தக்க இலக்கண நூல் ஒன்றைக் கபிலர் செய்துள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மேற்கண்ட சொல்லதிகாரத்தில் எச்சவியலில், உம்மைத் தொகையில் (நூற்பா.115) பலர் சொன்னடைத்து வருவதற்குக் கபிலபரணர் என்ற தொடர் சான்றாக வந்துள்ளது.

இதுகாறும் கூறியவற்றைக் கூர்ந்து நோக்கின், "கபிலர்' என்ற பெயர் பல காலங்களில், பல புலவர்களால், பல இலக்கியங்களிலும் பதிவு செய்யப் பெற்றுள்ளமையை நன்கு உணர முடிகிறது.

நன்றி :- முனைவர் அ.சிவபெருமான் , தமிழ்மை, தினமணி, 21-07-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger