Home » » ஜனாதிபதி லிங்கன், தன்மகனுக்காகப் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

ஜனாதிபதி லிங்கன், தன்மகனுக்காகப் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்



 
அவன் படிக்கவேண்டும். ஆம், படிக்கத்தான் வேண்டும். எனக்குத் தெரியும். எல்லா மனிதர்களும் நேர்மையானவர்கள் அல்லர்; எல்லாரும் உண்மையாக நடப்பவர்கள் அல்லர் என்பது. அவனுக்கு சொல்லித்தாருங்கள் - ஒவ்வொரு முரடனுக்கும் சவால்விடும் வகையில் ஒரு ஹீரோ இருப்பான் என்று. ஒவ்வோர் எதிரிக்கும் ஒரு நண்பன் கிடைப்பான் என்பதையும் சொல்லுங்கள்.

இதற்குச் சிறிது காலம் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் அவனிடம் கூறுங்கள், சுயமாகச் சம்பாதிக்கும் ஒவ்வொரு நாணயமும் மாற்று வழியில் கிடைக்கும் நூறு நாணயங்களை விடப் பெரிதென்று.

வெற்றியைக் கண்டு பூரிக்கும் சமயம், தோல்வி வந்தால் துவண்டு போகாமல், தன்னம்பிக்கையுடன் இருக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள். பொறாமையைக் கைவிட்டு, நேசத்தைக் கைக்கொள்ளச் சொல்லுங்கள்.

புத்தகங்கள் படிப்பதன் நன்மையை உணர்த்துங்கள். அதேசமயம், அவனைப் புத்தகப் புழுவாக்கிவிடாமல், வான்முட்டும் மலைச் சிகரங்கள், எழில் கொஞ்சும் சோலைகளை, ரசிக்கும் ரசனையையும் அவனிடம் ஏற்படுத்துங்கள். காப்பி அடித்து வெற்றி பெறுவதைவிட தேர்வில் தோல்வி அடைவதே மேலானது என்ற உண்மையைச் சொல்லுங்கள். தன் லட்சியங்களில் மற்றவர்கள் குறை கண்டாலும் மனம் தளராமல் முன்னேறும் வழியைப் போதியுங்கள். மற்றவர்கள் சொல்வதைப் பொறுமையுடன் கேட்கப் பழக்குங்கள். முடிவெடுக்கும் சமயம் நேர்மை வழியில் நின்று தன் மனத்திற்குச் "சரி' என்று பட்டதைத் தயங்காமல் செயல்படுத்தும் துணிவை அவனிடம் ஏற்படுத்துங்கள்.
துயரம் தரும் நேரத்தில் சிரிக்கும் மனவலிமையை அவனிடம் உண்டாக்குங்கள். தற்புகழ்ச்சிக்கு அடிமையாகாமல் முகஸ்துதிக்கும் மயங்காமல் இருக்கும் நடுநிலை உணர்வை அவனுக்குச் சொல்லித் தாருங்கள்.

 உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கேட்டுப் பெறும் உரிமையை அவனிடம் உணர்த்துங்கள். சோம்பேறித்தனமாக இருக்கும் ஆபத்தைப் பற்றியும் எச்சரியுங்கள். பொய்மையை எதிர்க்கும் துணிவை அவனிடம் உண்டாக்குங்கள். ஆத்திரப்படுவதற்குப் பதிலாகப் பொறுமையைக் கைக்கொள்வதன் மகத்துவத்தை அவனுக்குச் சொல்லுங்கள். எல்லாவற்றுக்கும் மேலான மனிதாபிமானத்தின் சக்தியையும் எந்த நிலையிலும் அவன் அதைக் கைவிடாமலிருக்கும் மன வலிமையையும் அவனிடம் உண்டாக் குங்கள். நான் ஆசைப்படுவது அதிகம்தான். அவன் என் ஆசை மகன்  அல்லவா? எனவே கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.
 அன்புடன்,
 ஆபிரகாம் லிங்கன்
 (தன் மகன் படித்த பள்ளி ஆசிரியருக்கு
 அமெரிக்க ஜனாதிபதி லிங்கன் எழுதிய கடிதம்)
நன்றி: நம்பு தம்பி - நம்மால் முடியும்
ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 21-07-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger