திருக்கோவிலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கபிலர் விழாவில், பரிசுகள் வழங்கி
பேருரையாற்றிய "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதனுடன் (வலமிருந்து 3-வது)
"கபிலவாணர்' பட்டம் பெற்ற தமிழண்ணல் (இடமிருந்து 4-வது), "கலைப்புரவலர்'
பட்டம் பெற்ற கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மேலாண்மை இயக்குநர் எம்.முரளி, "எழுத்துச்
சிற்பி' பட்டம் பெற்ற கவிஞர்கோ ஞா.மாணிக்கவாசகன் உள்ளிட்ட தமிழறிஞர்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில், திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் சார்பில் 38-ஆம் ஆண்டு கபிலர் விழா, ஸ்ரீசுப்பிரமணிய மஹாலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவின் 2-ஆம் நாளான சனிக்கிழமை இரவு, விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் முதுமுனைவர் தமிழண்ணலுக்கு "கபிலர்' விருதும், "கபிலவாணர்' பட்டமும், ஸ்ரீ கிருஷ்ணா சுவீட்ஸ் மேலாண்மை இயக்குநர் எம்.முரளிக்கு "கலைப்புரவலர்' பட்டமும், கவிஞர்கோ ஞா.மாணிக்கவாசகனுக்கு "எழுத்துச் சிற்பி' பட்டமும் வழங்கி "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியது:
பல நூற்றாண்டுகள் கடந்தும்கூட சங்ககாலப் புலவர்கள், மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சங்ககாலப் புலவர்கள் எழுதிய பாடல்கள் இல்லையென்றால், செம்மொழியே கேள்விக்குறியாகி இருக்கும். அப்படிப்பட்டப் புலவர்களைப் பாராட்டுவது தமிழைப் பாராட்டுவது, நமது மூதாதையர்களைப் பாராட்டுவது, நமது வேர்களைப் பாராட்டுவது போலாகும்.
சங்ககாலப் புலவர்களில் கபிலர் எழுதிய பாடல்கள்தான் மிக அதிக அளவில் கிடைத்துள்ளன. சங்ககாலப் புலவர்களில் முதன்மையானவர் கபிலர். இவருக்கு விழா எடுப்பது பாராட்டுக்குரியது.
ஆண்டுதோறும் நடக்கும் இவ்விழா, பழைய பெருமையை அடைய வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவிலூர் கபிலர் விழாவும், காரைக்குடி கம்பன் விழாவும் தமிழகத்திலுள்ள தமிழறிஞர்களும், தமிழார்வலர்களும் வந்து கூடும் தமிழ்த் திருவிழாக்களாகத் திகழ்ந்தன. அந்த நிலைமை மீண்டும் வர வேண்டும்.
தமிழகம் முழுவதும் இருந்தும் கபிலர் விழாவுக்கு தமிழ் ஆர்வலர்களும், புலவர்களும் கூடவேண்டும். கபிலர் விழாவிலும், கம்பர் விழாவிலும், சிலப்பதிகார விழாவிலும் தமிழகம் முழுவதிலும் இருந்து தமிழார்வலர்கள் கூட வேண்டும். அதிலும் குறிப்பாக, தமிழ் பயிலும் இளைஞர் கூட்டம் சங்கத் தமிழ்ப் புலவர்களுக்கு விழா எடுக்க வேண்டும். விழாக்களில் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.
திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் போல் பல்வேறு அமைப்புகள் ஆங்காங்கே செயல்பட்டால் அந்த நாள் வந்திடாதோ என்று காத்திருக்கத் தேவையில்லை. அந்த நாளும் வந்துவிடும்.
கபிலர் விழாவை தியாகராஜன் நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது ஆர்வம் பாராட்டுக்குரியது. திருக்கோவிலூரில் இருந்து நூறு இளைஞர்களைத் திரட்டி கபிலர் விழாவை தலைசிறந்த விழாவாகச் சிறப்பாக நடத்திக் காட்டி, தமிழகம் முழுவதும் இருந்து தமிழறிஞர்களைத் திரட்ட வேண்டும் என்றார் "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்.
விழாவில் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் தி.எஸ்.தியாகராஜன் வரவேற்றார். முடிவில் சீர்காழி சிவசிதம்பரத்தின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது
நன்றி :- தினமணி, 22-07-2013
0 comments:
Post a Comment