Home » » தமிழ்நூல் காப்பகத் தந்தை பல்லடம் மாணிக்கம் முனைவர். ,மு.இளங்கோவன்

தமிழ்நூல் காப்பகத் தந்தை பல்லடம் மாணிக்கம் முனைவர். ,மு.இளங்கோவன்


பல்லடம் மாணிக்கம்
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கு நடைபெறும் கல்வி நிறுவன வளாகங்களில் பேராசிரியர் மெய்யப்பன் ஐயாவுடன் இணைத்துப் பார்க்கும் அறிஞராகப் பல்லடம் மாணிக்கம் ஐயா அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தெரிந்தார்கள். அதுபோல் நூல்கள் வெளியீடு காணும் இடங்கள்,புத்தகக் கண்காட்சிகள், இலக்கியச் சந்திப்புகளிலும் பல்லடம் மாணிக்கம் ஐயாவைக் கண்டு மகிழ்வேன்.யாரிடமும் உரிமை பாராட்டிப் பேசும் இயல்புடையவர்.படபடப்பும் சுறுசுறுப்பும் நிறைந்து சொற்களை வாரி வீசிப் பேசும் ஆற்றல் கொண்டவர்.அன்பால் அனைவரையும் கட்டிப்போட்டு விடுவார்கள்.

விரிக்கப்பட்டிருக்கும் புத்தக அரங்குகளில் புதியதாக வெளிவந்துள்ள புத்தகங்களைக் கண்டுகாட்டி வாங்குவார்கள்.கங்காரு தன்குட்டியைச் சுமந்தபடி இருப்பதுபோல் புத்தகமும் கையுமாக இருப்பார்.புத்தகம் வாங்கிவரும் நடையில் ஒரு மாணவனின் ஆர்வம் தெரியும்.

தாம் வாங்குவதுடன் நல்ல நூல்களை அருகில் இருக்கும் நமக்கும் பரிந்துரைப்பார்.பல நேரங்களில் அவர் செலவில் வாங்கி அன்பளிப்பாக வழங்குவதும் உண்டு.இளைஞர்கள் எழுதும் புத்தகங்களைக் கூடுதல் படிகள் வாங்கி ஊக்குவிப்பதும் உண்டு.சிலர் நூல் வெளியிடத் தவிக்கும்பொழுது பண உதவி யாருக்கும் தெரியாமல் நடப்பதும் உண்டு.என் நூல்கள் வெளிவந்த உடன் ஐயாவுக்கு வழங்குவேன்.அவர்கள் வழங்கும் தொகை மாணவப் பருவத்தில் எனக்கு வழிசெலவுக்கு ஆவதும் உண்டு.ஆண்டுதோறும் நூல்கள் வெளிவர வேண்டும் என என் பேராசிரியர் க.ப.அறவாணருக்கு அடுத்துப் பல்லடம் ஐயாதான் அன்புக்கட்டளை போடுவார்கள்.

தமிழகத்தின் அறிஞர்கள் அனைவரும் நம் பல்லடம் ஐயவின் அன்புக்குரிய நண்பர்களாகவே இருப்பார்கள்.அறிஞர்கள்
 பொற்கோ,இ.சுந்தரமூர்த்தி,மெய்யப்பன்,ச.வே.சு,க.ப.அறம், கி.நாச்சிமுத்து உள்ளிட்டவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்(இந்தப்பட்டியல் நீளும்).
இத்தகு பெருமைக்குரிய பல்லடம் ஐயா வள்ளுவம் என்ற இதழை மிகத் திறம்பட நடத்தினார்கள்.கண்கவர் வண்ண அச்சில் இதுபோல் தமிழ் ஏடு வந்து யான் கண்டதில்லை.

தமிழ்நூல் காப்பகம் என்ற பெயரில் நூலகம் தொடங்கப்பட்டுள்ள விவரம் அடிக்கடி நண்பர்கள் வழியாகக் கிடைக்கும்.ஐயாவும் பார்க்க வரும்படி அழைப்பார்கள்.என் இடைவிடாத சுற்றுச் செலவில் இயலாமல் இருந்தது.

நேற்று இரவு என் உயிர்த்தோழர் இரத்தின. புகழேந்தியுடன் செல்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தபொழுது பல்லடம் ஐயாவின் பக்கம் பேச்சுத் திரும்பியது.ஐயாவுக்குச் சிறிது உடல் நலமில்லை என்று புகழ் சொன்னார்.நாளை காரிக் கிழமை விடுமுறைதான்.நாளை திருமுதுகுன்றம் வருகிறேன்.இருவரும் தமிழ்நூல் காப்பகத்தையும் அதன் காப்புத்தந்தை பல்லடம் மாணிக்கம் ஐயாவையும் காண்போம் என்று திட்டமிட்டோம்.

அவ்வகையில் நேற்று(04.04.2009) மாலை ஐந்து மணிக்குத் தமிழ்நூல் காப்பக மாளிகைக்குச் சென்றோம்.

ஐயா அவர்கள் எங்களைக் கண்டதும் அன்புடன் வரவேற்று உரையாடினார்கள்அப்பொழுது செம்மண் இதழாசிரியர் கோ.அரங்கநாதன் அவர்களும் உடன் இருந்தார்.வழக்கமாக நலம் வினவி, உடல்நலம் போற்றும்படி வேண்டிக்கொண்டோம்.பின்னர்த் தமிழ்நூல் காப்பகத்தின் உள்ளே ஐயா அழைத்துச் சென்று ஒவ்வொரு வரிசையாக நூல்களின் இருக்கை முறையை விளக்கினார்கள்.அரிய நூல்களை எடுத்துக்காட்டினார்கள்.நாங்கள் சென்ற சிறிது நேரம் மின்சாரம் இல்லை.எனினும் இயற்கை வெளிச்சத்தில் பார்த்தோம்.பிறகு மின்சாரம் வந்தது. உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களுக்கு இந்தச் செய்தியை அறிவிக்கக் காப்பகத்தைப் பல கோணங்களில் படமாக எடுத்துக்கொண்டோம்.இவ்வகையில் என் நண்பர் புகழ் உதவினார்.


பல்லடம் மாணிக்கம்,மு.இளங்கோவன்

நூல்கள் எப்படிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கும் எவ்வாறு தொகுக்கவேண்டும் என்பதற்கும் இந்த நூலகம் நல்ல சான்றாக விளங்குகிறது.சற்றொப்ப ஒரு இலட்சம் நூல்கள்,இதழ்கள்,ஆய்வேடுகள் இங்குத் தொகுத்துவைக்கப்பட்டுள்ளன.முனைவர் பட்ட ஆய்வேடுகள் பல முனைவர் பொற்கோ உள்ளிட்ட அறிஞர் பெருமக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.அதுபோல் முனைவர் பட்டம் பெற்று நூலாக வெளிவந்த நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

கம்பராமாயணத்தில் பத்துக்கும் மேற்பட்ட பதிப்புத் தொகுப்புகள் உள்ளன.திருக்குறள் சார்ந்த மொழிபொயர்ப்புகள்,பதிப்புகள்,ஆய்வுகள் 1500 மேல் உள்ளன. சங்க இலக்கியத்தின் பல முதல் பதிப்புகள் உள்ளன.இராமாயணம், நான்கு வேதங்கள், உபநிடதங்கள்,பன்னிரு திருமுறைகள்,சாத்திர நூல்கள்,அவை குறித்த ஆய்வுகள் நூல்களாக உள்ளன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்களும் உள்ளன.மகாபாரதம்,காந்திய நூல்கள்,மார்க்சிய நூல்கள்,அம்பேத்காரிய நூல்கள் உள்ளன.

தமிழில் வெளிவந்த அரிய பெப்ரிசியசு அகராதி(1786) எங்கும் கிடைத்தற்கு அரியது பாதுகாப்பாகப் பார்வையிடும்படி உள்ளது.இலக்கிய இதழ்கள்,நாளிதழ்களின் இணைப்பு மலர்கள்,கிழமை இதழ்கள்,மாத இதழ்கள் பல பாதுக்காக்கப்படுகின்றன.புதினம்,சிறுகதை எனத் தமிழின் அனைத்து வடிவ நூல்களும் உள்ளன.

மறைமலையடிகள்,தெ.பொ.மீ,வையாபுரிப்பிள்ளை,மு.வ,பாவாணர்,ந.சி.கந்தையா உள்ளிட்டவர்களின் முழுத்தொகுப்புகளும் உள்ளன.

ஆயிரக்கணக்கான கர்நாடக,இந்துத்தானி,மேற்கத்திய இசை ஆகியவற்றின் இசைப்பேழைகள், குறுந்தகடுகள் உள்ளன.மேலும் விருதுபெற்ற உலகத் திரைப்படங்களின் குறுந்தகடுகளும் உள்ளன.இலக்கியச் சந்திப்புகள் நிகழ்த்த வாய்ப்பான அரங்கும் அனைத்து வசதிகளுடன் முதல் தளத்தில் உள்ளது.தமிழுக்கும் தமிழ் நூல்களுக்கும் தமிழர் ஒருவர் தன்னந்தனியாக இவ்வளவு தொகை செலவிட்டிருப்பது அறிஞர் பல்லடம் மாணிக்கம் ஐயாவாகவே இருப்பார்கள்.

திருமுதுகுன்றம்(விருத்தாசலம்) மணிமுத்தாற்றங்கரையில் அரை ஏக்கர் அளவு நிலத்தில் எட்டாயிரம் சதுர அடியில் இந்த நூலக மாளிகை அமைந்துள்ளது.நூல்கள் முற்றாக வரிசைப்படுத்தப்பட்டு,கணிப்பொறியில் தரவுகள் உளிட்டப்பெற்று உலகத் தரத்திற்குப் பாதுகாக்கப்பட உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஐயா அவர்களுக்கு இயன்ற வகையில் உதவலாம்.

பல்லடம் மாணிக்கம் ஐயாவின் தமிழ் வாழ்க்கை
கோவையை அடுத்த பல்லடத்திற்கு அருகில் உள்ள சிற்றூரில் சாமியப்பா,வள்ளியம்மா ஆகியோரின் மகனாக 23.11.1936 இல் பிறந்தவர்.சிற்றூரில் தொடக்கக் கல்வியை
முடித்து,பல்லடத்தில் உயர்நிலைக் கல்வி கற்றவர்.புலவர் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்(1962).ஆயிரம் பூ என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டவர்.இந்நூல் பாவேந்தர்,கா.அப்பாத்துரையார் வாழ்த்துப் பெற்ற நூல்.

சென்னையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.1962 முதல் 1975 வரை இத் தமிழாசிரியர் பணி நீடித்தது.1972 இல் விருத்தாசலத்தில் திலகவதி அம்மாவைத் திருமணம் செய்துகொண்டு இரண்டு மக்கட் செல்வங்களைப் பெற்றார்.

தேவி திரைப்படத்தில் திரைப்பாடல்கள் எழுதிப் புகழ்பெற்றவர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தத்துவக் கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கில் சிறப்புடையன.இசைமேதை தட்சணாமூர்த்தி அவர்கள் இப்படத்திற்கு இசையமைப்பாளர்.இப்படத்திற்குத் துணை இசையமைப்பாளராக விளங்கியவர் திரு.சேகர்(இசையமைப்பாளர் இரகுமான் அவர்களின் தந்தையார்).டி.எம்.சௌந்தரராசன் பல பாடல்களைப் பாடினார்.இப்படத்தில் சோ நடித்துள்ளார்.இப்படப் பாடல்கள்,இலங்கை,சிங்கப்பூர் வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்பப்படுவது உண்டு.

தேவி தேவி உன்னைத்தேடி அலைகிறேன்...
தித்திக்கும் முத்தமிழே...

என்னும் பாடல்கள் சிறப்புடையன.

நடிகர்கள் ம.கோ.இராமச்சந்திரன்,சிவாசி கணேசன், இயக்குநர் சிறீதர் உள்ளிட்டவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.

தமிழாசிரியர் பணியை விடுத்து விருத்தாசலத்தில் செங்கல் சூளை,வேளாண்மைத்தொழிலில் ஈடுப்பட்டவர்.படித்த காலத்தில் நல்ல நூல்களை வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.அதன் பிறகு தாம் படித்த நூல்களைப் பாதுகாக்கும் எண்ணம் உண்டானது.அதன் பிறகு பலருக்கும் பயன்படப் பாதுகாப்போமே என நினைத்துப் பல நூல்களை வாங்கத் தொடங்கினார்.நண்பர்கள் தங்களிடம் உள்ள முதன்மையான நூல்கள், ஆய்வேடுகளை வழங்கினர் இவ்வகையில் இந்த நூலகம் இன்று இலட்சக்கணக்கான அறிவுச்செல்வங்களைத் தாங்கி நிற்கின்றது.

பழமலைநாதரையும் அருள்மிகு கொளஞ்சியப்பரையும் வழிபடச் செல்வோர் தமிழ் நூலகத்தையும் பார்த்து வரலாம்.பேருந்து,தொடர்வண்டி இந்த ஊருக்கு உள்ளது.

தொடர்பு முகவரி

பல்லடம் மாணிக்கம் அவர்கள்
தமிழ்நூல் காப்பகம்,
சேலம் நெடுஞ்சாலை,
தமிழ்நகர்,விருத்தாசலம்-606 001
செல்பேசி: + 91 9443042344

தொலைபேசி :
+ 91 4143 231611
+ 91 4143 230411


0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger