Home » » தினமணி - நெய்வேலி -முதற்பரிசு பெற்ற கதை -கலைச் செல்வி ( எஸ்.சுப்பிரமணியன், ஷன்மதி )

தினமணி - நெய்வேலி -முதற்பரிசு பெற்ற கதை -கலைச் செல்வி ( எஸ்.சுப்பிரமணியன், ஷன்மதி )



முதற் பரிசு பெறும் கலைச் செல்வி

 தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற கதை

முன்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது கல்யாணியின் உடல். ஆண்கள் கூட்டம் கூடத்திற்கு வந்து இறுதி மரியாதை செலுத்திய பிறகு வெளியே போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலுக்குள் ஐக்கியமாகியது. பெண்கள் ஆங்காங்கே இருந்த அறைகளில் பரவினர். நடுக்கூடத்தில் மாமியாரின் உடலருகே சூன்யத்தை வெறித்தபடியே உட்கார்ந்திருந்தாள் புவனேஸ்வரி. திருமணமாகி வந்த நாளிலிருந்தே அதிகாரங்கள் மையப்படுத்தப்படாததால் மாமியாருடன் சொல்லிக் கொள்ளும்படியான எந்த பிணக்கும் ஏற்பட்டதில்லை.

அம்மாவின் தோளில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்த காயத்ரியின் உதடுகள் தனியே விம்மியது. ஒரு கையால் பாட்டி கிடத்தி வைக்கப்பட்டிருந்த ஐஸ்பெட்டியின் கைப்பிடியை பிடித்திருந்தாள். அவளுக்குத்தான் திருமணம் நிச்சயமாகியிருந்தது. நேற்று வரை வருங்கால கணவனுடன் செல்போனில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தவள், இன்றைய நாளை பாட்டிக்காக அர்ப்பணித்திருந்தாள்.

அக்கம்பக்கம் வீடுகள் காலையிலேயே இழவு தண்டிவிட்டு அலுவலகம் சென்றிருந்தன. கல்யாணிக்கு நெருக்கமான வீட்டுப் பெண்மணிகள் கணவனை அலுவலகம் கிளப்பி விட்டு விட்டு முகத்தை மட்டும் அலம்பிக் கொண்டு வரவழைக்கப்பட்ட சோகத்தை ஏந்தியவர்களாக அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒரு வீட்டிலிருந்து காபி சப்ளை ஆகி கொண்டிருந்தது. திண்ணையில் தலையை குனிந்தவாறே அமர்ந்திருந்தான் சீனிவாசன். பிறந்ததிலிருந்து இன்று வரையிலான அம்பது வருடங்கள் அம்மாவுடனேயே இருந்தவன். திருமணத்திற்கு முன்பு வரை அம்மாவும் அவனும் மட்டும்தான் மொத்த குடும்பமே. புவனேஸ்வரி வந்த பிறகு மூவராகியது. காயத்ரியும் மனோவும் பிறந்த பிறகு மகன் சீனிவாசனுடன் சேர்ந்து கல்யாணியின் உலகமும் விரிந்தது.

மனோ அப்பாவின் அருகில் அமர்ந்திருந்தான். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவன். தோளில் சாய்ந்திருந்த மகனை நிமிர்த்தினான் சீனிவாசன்.
""மனோ.. அத்தை பெரியம்மா எல்லாத்தையும் பின்கட்டுக்கு அனுப்பிவுடுப்பா.. எல்லாரும் சுகரும் இரத்த கொதிப்புமா இருக்கறவங்க.. ரொம்ப நேரம் பட்டினி கெடக்க முடியாது.. பாட்டிய எடுக்க எப்டியும் சாயங்காலம் ஆயிடும்..'' மனோவின் தோழர்கள்   உறவினர்களை சத்தமின்றி வீட்டிற்கு பின் அழைத்து வந்து கலரோ, காபியோ கொடுத்தவண்ணமிருந்தனர்.

எனக்கொரு அப்பா இருந்திருந்தால் அவரும் இப்படிதான் என் தோளில் சாய்ந்து மனைவியின் சாவை எதிர்கொண்டிருப்பாரோ.. அப்பா.. நினைத்து பார்க்கவே புதியதான சொல்லாக இருந்தது சீனிவாசனுக்கு. இதுவரை வாழ்க்கையில் யாரையும் அப்பா என்றே அழைத்ததில்லை என்று தோன்றியது. அப்பா இறக்கும் போது அவன் ஐந்து மாத குழந்தையாக இருந்ததாக அம்மா சொல்வாள்.

பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவள் அம்மா கல்யாணி. கணவனின் இறப்பிற்குப் பிறகு மாமியாரும் இறந்து விட கொழுந்தன்மார்கள் இருவரின் மனைவியோடும் இருக்க முடியாமல் தாய் வீட்டிற்கே வந்து விட்டாள். ""எத்தனை நாளு எங்களோட கெடந்து மல்லாடுவ.. ஒன் செலவுக்கு நீ பாத்துக்க வேணாமா..'' அம்மா நாசுக்காக குடும்ப நிலையை சொன்னாள். நல்லவேளை அந்த ஊர் ஒரு சிறிய டவுனாக இருந்ததால் வேலை வாய்ப்புக்கு ஏதுவாக இருந்தது.

அப்பளம் வடாம் செய்து அக்கம்பக்கத்திற்கு கொடுத்ததில் சீனிவாசனை ஒரு சிறிய ஆங்கிலப் பள்ளியில் சேர்க்க முடிந்தது. வீட்டு வாடகைக்கும் மளிகை செலவுக்கும் பணமின்றி போக சமையல் வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்தாள் கல்யாணி. ஒழிந்த நேரங்களில் வீட்டில் தேங்காய் பர்பி செய்து பாக்கெட் பண்ணி கடைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தாள்.

""ஏம்மா.. ஒன் கையி இப்டி சொர சொரங்குது..'' இரவு நேரத்தில் அம்மாவின் மேல் காலை தூக்கிப் போட்டுக் கொண்டு அவள் கைகளுக்குள் தன் கைகளை நுழைத்துக் கொண்டே பேசுவான் சீனிவாசன்
.
""அம்மா தேங்கா துருவிக்கிட்டே இருக்குறனா.. அதான் கையெல்லாம் இப்டி ஆயிடுச்சு.. நீ படிச்சு வேலைக்கு போயி அம்மாவோட கைக்கு மருந்து வாங்கி போடுவியாம்.. அம்மாவோட கையி வழவழப்பா ஆயிடுமாம்..'' என்றவள், ""அங்க பாருப்பா வானத்த.. அம்மா துருவி போட்ட தேங்காய் பூ மாதிரி நட்சத்திரமெல்லாம் வானம் பூரா எறைஞ்சு கெடக்கு...'' காட்டினாள். ஒற்றை அறையும் நின்று கொண்டே சமைக்கும் அளவுக்கு ஒரு கிச்சனுமாக இருக்கும் வீட்டில் வெயில் காலங்களில் வெக்கை தாங்க முடிவதில்லை. கதவை ஒருகளித்தாற்போல் திறந்து வைத்தால்தான் உறங்க முடியும். ஸ்டோர் வீடு என்பதாலும்  பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்பதாலும்  இந்த வீட்டை காலி செய்யவும் விரும்பவில்லை.

அப்படியும் இப்படியுமாக பள்ளி இறுதி வரை வந்து விட்டான்
.
""அம்மா.. எங்க எச்.எம். கட்டாயமாக என்ன காலேஜ்ல சேர சொன்னாங்கம்மா.. நல்லா வருவேன்னு சொன்னாங்கம்மா..'' வெள்ளந்தியாக பேசும் மகனை பார்த்தாள். அப்பளம் வடாம் விற்பனை செய்யும் அந்த பிரபல டிபார்ட்மெண்ட் ஸ்டோரை அணுகினாள். அவளை பார்த்தவுடனேயே கடை சிப்பந்தி சொன்னான்... ""அம்மா.. சரக்க கோடவுன்ல எறக்கிட்டு பில்லு வாங்கிட்டு வந்துடுங்க..''

""சரக்கு கொண்டுட்டு வர்ல தம்பி.. நான் ஓனரை பாக்கணும்..'' ஒரு நிமிடம் அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஏசி அறை இருந்த பக்கமாக கையை காட்டினான்.

""சார்.. நான் உங்க கடைக்கு ரெகுலரா அப்பளம் வடாம் கொத்தவரை வத்தல் சுண்டைவத்தல்னு எல்லாம் சப்ளை பண்ணிக்கிட்டிருக்கேன் சார்..''

""தெரியும்மா.. என்ன விசயமா வந்துருக்கீங்க..'' கனிவாக தான் பேசினார் அந்த முதலாளி.

""சார்.. என் பையனை காலேஜ்ல சேக்கணும்க.. பணம் கொஞ்சம் கைய கடிக்குது.. அட்வான்சா குடுத்தீங்கன்னா சரக்க குடுத்து கழிச்சுக்குவேன்..''

 இறுதியில் சுவையான வடாம் அய்ட்டங்களை அந்த கடைக்கு மட்டுமே சப்ளை பண்ண வேண்டியதாயிற்று. இந்த கையில் சரக்கும் அந்த கையில் காசுமாக வாங்கும் போது வேலை செய்யும் அலுப்பே தெரியாதிருந்தது. எவ்வளவு சரக்குகள் விற்றாலும் கடன் மட்டும் அடைவதாக தெரியவில்லை. முன்பெல்லாம் சின்ன சின்ன கடைகளுக்கு போடும் போது லாபம் கூடுதலாக கிடைத்தாற் போலிருந்தது. இப்போது வேலை மட்டுமே அதிகரித்திருந்தது.

""அம்மா.. நீ படறபாட்ட என்னால பாக்க முடியிலம்மா..'' கல்லூரியிலிருந்து வரும் மகனை கூட கவனிக்க நேரம் இருப்பதில்லை அவளுக்கு. சீனிவாசன் படித்து முடிக்கவும் வட்டியோடு சேர்த்து கடனை அடைக்கவும் சரியாக இருந்தது. எலும்பும் தோலுமாக மெலிந்திருந்த அம்மாவை பார்த்தான்.
""அம்மா.. இனிமே நீ வேலை எதும் செய்ய வேணாம்.. நான் பாத்துக்குறேன் ஒன்னை..'' சினிமா ஹீரோ போல் பேசும் மகனின் தலையை தடவியவாறே மெலிதாக சிரித்தாள் கல்யாணி.

சீனிவாசன் ஏறி இறங்கிய கம்பெனிகளில் அவனுக்கு தருவதாக சொல்லப்பட்ட சம்பளம் அம்மாவின் வருவாயை விட குறைவாக இருந்தது. அம்மாவின் சிரிப்பிற்கு அர்த்தம் புரிந்தது அவனுக்கு. ஜெராக்ஸ் கடை வைத்தான். அந்த நட்டத்தையும் கல்யாணியே ஏற்க வேண்டியதாயிற்று. அம்மாவின் விற்பனை பிரதிநிதியானான். அந்த வேலையையும் அம்மாவே பார்த்துக் கொண்டிருந்ததால் புதிதாக வருவாய் ஏதுமில்லை.

""கொஞ்சம் நாள் பொறுத்துக்கோம்மா.. உன்னை ஒக்கார வச்சு சோறு போடுவேன்..'' மகனின் ஆத்மார்த்தமான அன்பு யார் காதில் விழுந்தததோ என்னவோ அரசாங்கத்தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தான்.

""நேத்து பொறந்ததுமாதிரி இருக்கு.. ஒன் மவனுக்குந்தா வயசு இருவத்து ஏழாயிடுச்சு. சட்டுபுட்டுன்னு அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சுட்டு நிம்மதியா இருக்குற வழிய பாரு..'' சொந்தபந்தங்கள் சொல்ல அரசாங்க உத்யோகஸ்தனுக்கு பெண் கொடுக்க நிறைய பேர் முன் வந்தனர். அரண்மனை உத்யோகமென்றாலும் கை நீளமாக இல்லாததால் அரை காசு சம்பாத்தியத்தில் மீண்டும் மூச்சு முட்டிப் போனது சீனிவாசனுக்கு. இந்த முறை உடல் உழைப்பை மருமகள் பகிர்ந்துக் கொண்டாள்.

""எல்லாரும் அப்டியே ஒக்காந்திருந்தா எப்படி.. எந்திரிங்கப்பா.. போய் நாலு கொடத்துல தண்ணி எடுத்துட்டு வந்து பாடிய குளிப்பாட்டிட்டு சடங்கு சாங்கியத்த ஆரம்பிக்க வேண்டியது தானே...''

""இது என்ன கிராமமா பெரியப்பா.. ஊர் பொதுக்கெணறு பொதுக்குளமெல்லாம் டவுன்ல இருக்காது.. எங்கயவாது பொது பைப் இருக்கான்னு பாக்கணும்..'' சீனிவாசன் கம்மலான குரலில் பேசினான்.

""மழை தான் தூறிக்கிட்டு இருக்கேப்பா.. நாலு கொடத்தை வெளியில வச்சோம்னா நிறைஞ்சுடும்ல்ல..'' மனோ பாட்டியின் கடைசிக் குளியலுக்கு உபாயம் சொன்னான். "அம்மா என்னைக்கு கஷ்டம் குடுத்துருக்கா..' எண்ணிக் கொண்டான் சீனிவாசன்.

""வரவேண்டியவங்க யாருமில்லையே சீனு..'' பெரியப்பா மறுதடவை கேட்டு நிச்சயப்படுத்திக் கொண்டார். சம்மந்தி வீட்டிலிருந்து துக்க காரியத்திற்கு வர வாய்ப்பில்லை.

காயத்ரியின் திருமணத்திற்கு ஜாதகத்தை கையில் எடுத்ததுமே கணவனிடம் வாதிட்டாள் ""புவனேஸ்வரி நகைநட்டு ஒண்ணும் சேக்கலையேங்க.. இன்னும் கொஞ்சநாள் போகட்டுமே..'
'
""எனக்கு இன்னும் எட்டு வருசந்தான் சர்விஸ் இருக்கு.. இப்ப கடனவொடன வாங்கினா தான் அடைக்கறதுக்கு செüரியமா இருக்கும்.. மனோவுக்கு வேற படிப்பு செலவு இருக்கு..''

 மனைவியின் வாயை அடைத்து விட்டான். கல்யாணமும் தகைந்து வர அப்படியும் இப்படியுமாக சேமிப்பெல்லாம் எடுத்தும் மூன்று லட்சம் துண்டு விழுந்தது. போனவாரம்  தான் தெரிந்த இடத்தில் சொல்லி மூன்று லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கியிருந்தான் சீனிவாசன். ""பாத்து புவனா.. பத்தரம்...'' பீரோவில் துணிகளுக்கடியில் நுழைத்து வைத்தாள் புவனா.

மறுநாள் அலுவலகத்தில் இருந்தான்.

""ஏங்க.. அத்தைக்கு ரொம்ப முடியலங்க... ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டுருக்கோம்..'' படபடப்பாக பேசினாள் புவனேஸ்வரி.

""சார்.. பேஷண்டுக்கு பர்ஸ்ட் எய்ட் கொடுத்திருக்கோம்.. ஐசியூல ஃபுல் அப்சர்வேஷன்ல இருக்காங்க.. இருந்தாலும் இன்னும் நாற்பத்துஎட்டு மணி நேரம் கழிச்சு தான் அஷ்யூரன்ஸ் கொடுக்க முடியும்..''  டாக்டரின் வார்த்தைகளை சுமந்துக் கொண்டு வட்டமான கண்ணாடி வழியே அம்மாவை பார்த்தான். அறுபத்துஎட்டு வயதான அம்மா நூறு வயதிற்கான உழைப்பை உழைத்திருக்கிறாள். நினைவு மட்டும் இருந்தால் அம்மா இப்படியா படுத்திருப்பாள்.. உடல் பூராவும் சுற்றியிருக்கும் ஒயர்களை தூர எறிந்து விட்டு வடாம் மாவோடு மொட்டை மாடிக்கு ஓடியிருக்க மாட்டாள்.. கண்ணீரூடே அம்மா மசமசத்து தெரிந்தாள்.

நாற்பத்து எட்டு மணி நேரம் யுகங்களாக கடந்தது. இரண்டு நாள் மருத்துவமனை செலவு கழுத்தைப் பிடித்தது. திடீர் செலவானதால் அலுவலக நண்பர்கள் புரட்டிக் கொடுத்திருந்த பணமும் வறண்ட தரையில் பட்ட நீர்த்துளியானது. மனோ தான் கூப்பிட்டான்.

""அப்பா.. உன்னை டாக்டர் வரச் சொல்றாருப்பா..''

""சார்.. இப்போதைக்கு பேஷண்ட் úஸஃப்பா இருக்காங்க.. ஒண்ணும் பயப்பட தேவையில்ல.. ஆனா உடனே ஆஞ்சியோகிராம் பண்ற மாதிரி இருக்கும்.. வால்வ்ல ப்ளாக் பர்சன்டேஜ் தெரிஞ்சுக்கிட்டா தான் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியும்.. ஆஞ்சியோபிளாஸ்டிலயே சரிபண்ண முடியும்னா ஆஞ்சியோகிராம் பண்ணும் போதே செஞ்சிடுவோம்.. ப்ளாக் அதிகளவு இருந்துச்சுன்னா ஒடனே பைபாஸ் பண்ற மாதிரி இருக்கும்..''

வியர்த்துப் போனது சீனிவாசனுக்கு. புவனேஸ்வரி தான் முதலில் சுதாரித்துக் கொண்டாள். ""எவ்ளோ செலவாகும் டாக்டர்...''

""ரெண்டரை லட்சம் ரெடி பண்ணிக்கங்கம்மா.. பைபாஸ் பண்ண தேவையில்லைன்னா செலவு பாதியா கொறையும்..''

 இப்போது சீனிவாசனுக்கு மாரடைப்பு வரும் போலிருந்தது.

விஷயம் கேள்விப்பட்டு சம்பந்தி வீட்டார் கல்யாணியை பார்க்க வந்தனர்.

""கவலப்படாதீங்க சம்பந்தி.. மாஸீவ் அட்டாக் ஒரு நிமிஷ நேரத்துல மனுசன காவு வாங்கீடுது.. இந்த மட்டும் அம்மா தப்பிச்சுட்டாங்கன்னு சந்தோசப்படுங்க.. மொதல்ல அம்மாவோட ஆப்ரேஷன நல்லபடியா முடிங்க.. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்குல்ல.. பர்சேஸ்லெல்லாம் அதுக்கு பிறகு வச்சுக்கலாம்..'' கையைப் பிடித்து ஆறுதல் சொல்லி விட்டுக் கிளம்பினர்.

கண்ணாடி வழியே அம்மாவைப் பார்த்தான். முதன்முதலாக அம்மாவின் துணையின்றி ஒரு பிரச்சனையை எதிர் கொள்ளப் போகிற பயம் அவன் கண்களில் தெரிந்தது. அவன் முதுகிற்கு பின்னால் நின்று எட்டிப் பார்த்தாள் புவனேஸ்வரி.

""என்ன செய்யறதுங்க.. டாக்டர் உடனே ஆப்ரேஷன் பண்ணனுங்கிறாரு.. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு.. பணத்துக்கு எங்க போறது...''

எப்போதோ மாதாந்திர சீட்டின் மூலம் வாங்கி போட்டிருந்த நிலம் ஞாபகத்துக்கு வந்தது. முனைந்து பார்த்ததில் அந்த ப்ளாட் இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை.

""உங்கிட்ட எத்தனை பவுன் இருக்கு..'' மனைவியிடம் கேட்டான்.

""கழுத்துல போட்டுருக்க தாலிக்கொடிதாங்க இருக்கு.. சம்பந்தி வேறு அவ்வப்போது நலம் விசாரிக்கும் சாக்கில் நகைகளை ஞாபகப்படுத்துகிறார்''

""சார்.. கல்யாணியோட அட்டெண்டரை டாக்டர் வர சொல்றாரு..'' ஐசியூவிலிருந்து வெளியே வந்த நர்ஸ் சத்தமாக அழைத்தாள். பதட்டத்துடன் முன்னே வந்தான் சீனிவாசன். ""மிஸ்டர் சீனிவாசன்.. உங்க மதரோட கன்டிஷன் பத்தி ஏற்கனவே தெளிவா சொல்லிட்டோம்.. நீங்க பைபாஸ் செய்ற மாதிரி இருந்தா ஹாஸ்பிடல்ல இருக்கட்டும்... இல்லேன்னா டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம்.. பட் பர்ஸனலி ஐ சஜஸ்ட் கோ ஃபார் ய ஆபரேஷன் இஸ் ய பெட்டர் சாய்ஸ்..'' கண்களை கூர்ந்து பார்த்தார்
.
""ஓகே சார்.. நீங்க ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ணுங்க.. நான் பணத்த கட்டிடறேன்..'' சட்டென்று எழுந்த வேகத்தில் சொல்லி விட்டு வெளியே வந்தான். ""பணம்...'' இழுத்தாள் புவனா.

""பாத்துக்கலாம் புவனா.. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு.. அதுக்குள்ள அம்மா எழுந்திரிச்சு வந்து ஏதாவது ஒரு வழி சொல்லாமயா போயிடுவாங்க...''

நாளை மறுநாள் ஆபரேஷன். அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இரத்தக்கொதிப்பும் சர்க்கரையும் நார்மலாக இருந்தது.

""கவுண்டர்ல ஒன் தேர்ட் டோக்கன் அட்வான்ஸ் இப்பவே பே பண்ணிடுங்க சார்..'' நர்ஸ் ஒருவர் வந்து போகிறபோக்கில் சொல்லி விட்டுச் சென்றாள்.

""புவனா.. நான் போய் பணம் எடுத்துட்டு வந்துடுறேன்..'' வீட்டிற்கு கிளம்பினான் சீனிவாசன். வெயிலுக்கு இதமாக கறிவேப்பிலை போட்டு ஒரு டம்ளர் நிறைய மோரை நிறைத்துக் கொடுத்தாள்  காயத்ரி. செல்போனை சார்ஜருக்குள் சொருகி விட்டு குளியலறை நோக்கி நடந்தான் சீனிவாசன். போன் அடித்தது. அவசரமாக வெளியே வந்தான்.

"" ஏம்மா.. போன் அடிக்குது எடுக்கலாம்ல..'' என்றபடியே காதில் வைத்தான். மறுமுனையில் புவனா தான் படபடவென்று பேசினாள்.

""ஏங்க.. அத்தைக்கு இன்னோரு அட்டாக் வந்துடுச்சாம்.. சீரியஸô இருக்காங்கன்னு டாக்டர் சொல்றாரு.. கொஞ்சம் சீக்கரம் வாங்க..'' குரலின் படபடப்பு நிலைமையை உணர்த்தியது.

பீரோவை திறந்து கடனாக வாங்கி வைத்திருந்த பணத்தில் ஐம்பதாயிரத்தை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் சொருகினான். வண்டி தடதடத்து வேகமெடுத்தது.

""அப்பா.. மெதுவா போப்பா...'' காயத்ரியின் குரல் முதுகில் ஒலித்து தேய்ந்தது. சீனிவாசன் உள்ளே நுழைவதற்குள் கல்யாணி உலகை விடுப்பதற்கும் சரியாக இருந்தது. புவனாவுடன் சேர்ந்து மனோவும் அழுதுக் கொண்டிருந்தான்.

கல்யாணியின் உயிரற்ற உடல் வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்தது. இரு ஆண் செவிலியர்கள் உடலை ஸ்டெச்சரில் வைத்து தள்ளியப்படி ஐசி யூனிட்டிற்கு வெளியே கொண்டு வந்தனர். மனசு படபடவென்று அடித்துக் கொண்டது சீனிவாசனுக்கு. காலுக்கு கீழே ஏதோ ஒன்று கழன்று இயக்கமிழந்தது போல் அப்படியே நின்றிருந்தான். அனிச்சையாக கண்களில் நீர் திரையிட்டிருந்தது.

கல்யாணியின் உடல் நெருங்கி வந்தது. முகம் மட்டும் திறந்திருந்தது. சீனிவாசன் அருகில் வந்ததும் தயங்கி நின்றது.

""சார்.. உள்ள கையெழுத்து போட்டுட்டு பாடிய வாங்கிக்கோங்க..''

அம்மாவின் முகத்தை உற்று பார்த்தான் சீனிவாசன். கண்களை அங்குமிங்கும் விலக்கவில்லை. ட்யூப்களின் நச்சரிப்பிலிருந்து விடுப்பட்ட அவளின் முகம் நிர்மலமாக இருந்தது. ஏதோ சாதித்தாற்போன்ற தோற்ற பொலிவு கூட அதில் தெரிந்தது. கண்களின் நீர்த்திரை மறைந்து முழுமையான பார்வையில் தெரிந்த அந்த முகத்தில் பரவியிருந்த நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக இவனுக்குள்ளும் இறங்கியது. அப்படியே நிலைத்தும் போனது.

வாய் விட்டு அழுதுடு சீனு.. துக்கத்த அடைச்சு வச்சுக்காத.. அலுவலக நண்பர் யாரோ சொன்னார்.

""பாவம்.. ஒத்த ஆளா நின்னு மகன வளர்த்து ஆளாக்கினாங்க.. எத்தன கஷ்டமிருந்தாலும் மகன்ட்ட கொண்டு போறதேயில்ல.. சிரிச்சுக்கிட்டே சமாளிப்பாங்க மகராசி.. பேத்தி கல்யாணத்த பாத்துட்டு போறதுக்கு தான் குடுப்பினை இல்லாம போச்சு..'' கூட்டம் சலசலத்தது.

ஊர்வலம் புறப்பட்டது. சுடுகாட்டில் சாம்பாலாகி போனாள் கல்யாணி. குளித்து விட்டு உறவு சனங்களின் மத்தியில் அமர்ந்தான் சீனிவாசன்.

""கூடுன கல்யாணத்த நிறுத்த வேண்டாம்.. பெரிய சாவு நடந்து போயிருக்கு.. சுபகாரியமெல்லாத்தையும் மூணு மாசத்துக்கு தள்ளி போடணும்.. இதெல்லாம் இந்த காலத்துல யாரு பாக்குறா.. மூணாம் நாளு கரும காரியத்த நடத்திட்டு ஆகற வேலய பாக்க வேண்டியதுதான்..'' ஆளுக்கு ஒரு கருத்து எழுந்தது. இறுதியில் சம்பந்தி வீட்டாரின் சம்மதத்தோடு மூன்றாம் நாள் கருமாதியும் குறித்த தேதியில் திருமணமும் நடைபெற முடிவானது.

ஒரு வார காலத்தில் என்னவெல்லாம் நடந்து விட்டது.. டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தான் சீனிவாசன். பக்கத்தில் செல்ஃபோன் சிணுங்கியது. சம்பந்திதான்.

""சம்பந்தி.. நாளைக்கு நாள் நல்லாயிருக்கு.. நாளைக்கே முகூர்த்தப்புடவை எடுத்துடலாமா..''

சம்பந்திக்கு சம்மதத்தை சொல்லி விட்டு மனைவியை அழைத்தான்.
""நாளைக்கு காலைல பத்து மணிக்கு முகூர்த்த புடவை எடுக்க வரச்சொல்லியிருக்காரு சம்மந்தி..  அதுக்கு முன்னாடி நகைய எடுத்துடலாம்... நீ குளிச்சிட்டு சீக்கிரம் கெüம்பு.. காயத்ரி நீயும்தாம்மா...'' மனைவியையும் மகளையும் அவசரப்படுத்தினான் சீனிவாசன்.

பீரோவின் துணிகளுக்கிடையே கையை விட்டு துழாவினான் சீனிவாசன். எப்போதும் பணத்தை அங்கு வைப்பது தான் வழக்கம். ஆயிரம் ரூபாய் கட்டுகள் இரண்டையும் ஐநாறு ரூபாய் கட்டு ஒன்றையும்  உருவினான். டாக்டர்  ஆபரேஷனுக்கு கட்ட சொன்ன தொகையும் இதுதான்.

ஏதோ புரிய வாய் அழுகையில் கோணியது. ""அம்ம்மா....''

சத்தம் கேட்டு அப்பாவிடம் ஓடிய மகனைத் தடுத்து இழுத்துக் கொண்டாள் புவனேஸ்வரி.

நன்றி: தினமணி கதிர் 21-07-2013
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 துக்கம் நிகழ்ந்துவிட்டதால் திருமணத்தை நிறுத்திவிடாத மணமகன் வீட்டாரை முதலில் பாராட்ட வேண்டும்.
 ----------------------------------------------------------------------------------------------------------------
அந்தக் காலத்தில் கணவனை இழந்தோருக்குக் கை கொடுக்கும் தொழில் சமையல் முதலான வீட்டு வேலைகளும், முறுக்கு முதலான தின்பண்டங்கள் செய்து கடைகளில் போட்டு வாரிசுகளைக் கரையேற்றுவதுதான்.

5 மாதக் குழந்தையாய் இருந்தபோதே அப்பாவை இழந்துவிட்ட சீனிவாசன், அம்மாவால் வளர்க்கப்பட்டதே பெருந்துன்பம். வளர்ந்து ஒருமாதிரி வாழ்க்கையைக் கொண்டுசெல்லும்போதும் அம்மாவிற்கு ஏற்பட்ட  ஆஞ்ச்சியோகிராம், பைபாஸ் சிகிச்சையை எதிர்கொள்ள முற்படும்போது அன்னையை இழந்து விடுகின்றார் சீனிவாசன். இத்தகைய சீனவாசன்கள் - முதியோர்களாய் உலவிவரும் காலக்கட்டத்தில்தான் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

ஆனால் அடுத்த தலைமுறைக்கு இந்தத் தொல்லைகள் கிடையாது. ஏனெனில், ஒன்றொடு நிறுத்திக் கொள்வதால். வசதியடைந்த வாரிசுகளும் பெற்றோரைப்பற்றிப் பெரும்பாலும் கவலைப்படுவதில்லை. முதியோர் இல்லங்க்கள்தான் பரவலாக இருக்கின்றனவே.

மகனைக் பேணிக்காத்து வளர்த்திட கல்யாணி அம்மாள் செய்த வேலையை இலட்சக் கணக்கான ரூபாய் செலவிட்டு கேட்டரிங்க் என்று கல்லூரிகளில் இன்றைய மாணாக்கர்கள் ( ஆண்கள் +பெண்கள்) பயின்று வருகின்றனர்.
 -----------------------------------------------------------------------------------------------------------------

முதற்பரிசு பெற்ற கலைச் செல்விக்கு  வாழ்த்துக்கள் !

-------------------------------------------------------------------------------------------------------------------------------------



0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger