Home » » E-MAIL, ECHO MAIL- கண்டு பிடித்த சென்னைத் தமிழர், புதிய கண்டுபிடிப்புக்களுக்கு 1-லட்சம் டாலர் பரிசளிக்கத் தயார்!

E-MAIL, ECHO MAIL- கண்டு பிடித்த சென்னைத் தமிழர், புதிய கண்டுபிடிப்புக்களுக்கு 1-லட்சம் டாலர் பரிசளிக்கத் தயார்!


http://www.vashiva.com/

சிவா ஐயாதுரையின்
இணையதளம்

ஒரு வீடியோ படமா இ-மெயிலில் அனுப்பி வை. புகைப்படங்களா? உடனே அனுப்பு இ-மெயிலில். எந்தக் கடிதங்கள் ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா? இ-மெயிலில் அனுப்பச் சொல்லுங்கள்.

 மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே  இ - மெயில் இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது. தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிறுவனங்களுக்கிடையிலான  தகவல் பரிமாற்றமாக இருக்கட்டும் இப்போது இ - மெயிலே சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்த இ-மெயிலைக் கண்டுபிடித்தவர் யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்று நினைத்திருப்பீர்கள். நீங்கள் நினைத்தது உண்மைதான். அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழர். அதுவும் தனது 14 வயதில்
இ - மெயிலைக் கண்டுபிடித்துச் சாதனை செய்த சிவா அய்யாதுரை. இப்போது அவருக்கு வயது 48.

 அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க்  என்ற ஊரைச் சேர்ந்தவர். சென்னையிலிருந்தே அவரிடம் பேசினோம்:

 ""என்னுடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. எனது தாத்தா அரசுத்துறையில் சிவில் என்ஜினியர். அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர். எனது சிறிய வயதிலேயே நாங்கள் மும்பைக்குச் சென்றுவிட்டோம்.

 நான் நன்றாகப் படிப்பதைத் தெரிந்து கொண்ட என் பெற்றோர், என்னை மேலும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக 1970 இல் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனுக்குப் போனோம். அம்மா கணிதவியல் நிபுணராகவும், ஸிஸ்டம் அனலிஸ்ட்டாகவும்  இருந்தார்.

எனக்குச் சிறுவயதிலேயே படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம். எனது சிறுவயதில் நான் இருவேறு உலகங்களில் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் இந்தியனாகவும், வெளியே அமெரிக்கனாகவும் வாழ்ந்தேன்.

பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 40 பேரைத் தேர்ந்து எடுத்து அந்தப் பல்கலைக் கழகத்தில் சொல்லித் தந்தார்கள். அதில் நானும் ஒருவன். கம்ப்யூட்டர் புரோகிராம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாத அந்த நாளில் நான் அங்கே கற்றுக் கொண்டது பெரிய விஷயமாக இருந்தது.

இந்தப் பின்னணியில்தான், 1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள "யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி'யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தேன். பின்னாளில் உலகம் முழுவதும் பயன்படுத்தப் போகும் ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளை நான் அங்கே வடிவமைப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

 அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர்மயமாக்க முடியுமா? என்று என்னைக் கேட்டார்கள். அப்போது எனக்கு 14 வயது.

தொடர்ந்து பலநாட்கள் தூக்கம் இல்லாமல், கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினேன். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தேன்.

 நான் இந்த E MAIL -ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.

நான்தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவன். FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி அதை உருவாக்கினேன். இது DATABASE, LAN(LOCAL AREA NETWORK) உடன் தொடர்புடையதாக இருந்தது. இ மெயில் என்பது டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. அது ஒரு ஸிஸ்டம். இ - மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY  எல்லாம் நான் உருவாக்கியவை.

அதற்குப் பிறகு "மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யில் (MIT) மேற்படிப்புக்காகச் சென்றேன். மிக அதிகமான திறமையுள்ள, கண்டுபிடிப்புகள் செய்யும் மாணவர்களை அந்தக் கல்லூரி ஆண்டுதோறும் அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும். 1980 இல் 1040 மாணவர்கள் படித்தனர். இ - மெயிலைக் கண்டுபிடித்தற்காக, அப்படி அடையாளம் காட்டிச் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் நானும் ஒருவன்.

எனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை வாங்க 1982 இல் அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகத்தை அணுகினேன். அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது எப்படி என்று ஆலோசனை கூறக் கூட அப்போது யாரும் இல்லை. எனக்கு அப்போது 19 வயது. 1982 ஆகஸ்ட் 30 இல்  இ - மெயிலைக் கண்டுபிடித்ததற்காக எனக்குக் காப்புரிமை கிடைத்தது.

 ஆனால் பலர்  தாங்கள்தாம் இ - மெயில் கண்டுபிடித்ததாகக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் நான் இ - மெயில் கண்டுபிடிக்கச் செய்த முயற்சிகளைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உலக அளவில் புகழ்பெற்ற  மொழியியல், தத்துவத்துறைப் பேராசிரியர் நோம் சாவ்ஸ்கி. நான்தான் இ மெயில் கண்டுபிடித்தேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்து வருகிறார். நான் கண்டுபிடிப்பதற்கு முன்பு இ மெயில் என்ற சொல் உலகத்தில் எந்த அகராதியிலும் இல்லை.

 இ - மெயிலை நான் கண்டுபிடிக்கவில்லை என்று சிலர் கூறுவதற்குக் காரணம்,

 1. நான் ஓர் இந்தியன்,

2. நான் புலம் பெயர்ந்தவன்,

3. தமிழன்,

4. கறுப்புநிறத்தவன்.

5.நெவார்க் என்ற சிறிய ஊரைச் சேர்ந்தவன்.

இவற்றைத் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை. அது

போகட்டும்.

அதற்குப் பின்பு  நான்தான் இ - மெயிலைக் கண்டுபிடித்தேன் என்பதை அங்கீகரித்தது, உலக அளவில் புகழ்பெற்ற "சுமித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம்'.

 இ - மெயிலை நான் கண்டுபிடிக்கும்போது பயன்படுத்திய நாடாக்கள், பதிவுகள், காப்புரிமை மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளில் உள்ள Code  கள் எல்லாவற்றையும் அங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை என்னை Dr.Email என்றே குறிப்பிடுகிறது.

1993 இல் அப்போதைய அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது, வெள்ளை மாளிகைக்கு  ஒரு நாளைக்கு 5000 - 6000 இ-மெயில்கள் வந்தன. அந்தஇ - மெயில்களைத் திறந்து படித்துப் பார்த்து, அவற்றுப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பதற்குச் சொல்லவோ, இ - மெயில்களுக்குப் பதில் அனுப்பவோ இருநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேவைப்பட்டனர்.

அதனால் பில் கிளிண்டன் ஒரு போட்டியை அறிவித்தார். இந்த இ - மெயில்களைக் கையாள்வதைத் தானியங்கிமயமாக்குபவர்களுக்குப் பரிசு என்று அறிவித்தார். அதாவது வெள்ளை மாளிக்கைக்கு வரும் இ - மெயில்களைப்  படித்துப் பார்த்து, அந்த இ - மெயில் எதைப் பற்றியது? என்ன சொல்கிறது? குறை சொல்கிறதா? பாராட்டுகிறதா? என்ன வேண்டும் என்று அது கேட்கிறது? எதைப் பற்றிப் புகார் சொல்கிறது? இது எந்தவகையான இ - மெயில்? என்று ஒரு மனிதன் எப்படிப் படித்துப் பார்த்து முடிவெடுத்துச் செயல்படுவானோ, அதுபோல ஒரு கம்ப்யூட்டர் செயல்பட வேண்டும். அதற்கு ஏற்ற மென்பொருளை உருவாக்கித் தர வேண்டும். அதற்குப் பரிசு என்று அறிவித்தார்.

 அந்தப் போட்டியில் அமெரிக்காவில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் கலந்து கொண்ட தனிநபர் நான் மட்டுமே.
பில் கிளிண்டன் கேட்டுக் கொண்டபடி நான் ECHO MAIL என்ற சிஸ்டத்தை  உருவாக்கிக் கொடுத்தேன். எனக்குப் பரிசு கிடைத்தது.

நான் உருவாக்கிய இந்த ECHO MAIL என்ற சிஸ்டம் உலகிலேயே முதன்முதல் உருவாக்கப்பட்ட இ மெயில் மேனேஜ்மென்ட் சிஸ்டமாகும். இது எனது குறிப்பிடத்தக்க இன்னொரு கண்டுபிடிப்பு.

பின்பு 1994 இல் ECHO MAIL.Inc என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, அந்த சிஸ்டத்தைப் பல அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள உதவி வருகிறேன்.

எனக்கு கம்ப்யூட்டர்துறையில் மட்டுமல்லாமல், மருத்துவத்திலும் ஆர்வம் உண்டு.
 
எனது சிறிய வயதில் எனது அப்பாவின் சொந்த ஊரான இராஜபாளையத்துக்குப் பக்கத்தில் உள்ள முகவூருக்குப் போயிருக்கிறேன்.

எனது அப்பாவின் அம்மா சின்னத்தாய், ஒரு சித்த மருத்துவர். அவர் அங்குள்ள மக்களுக்குப் பலவிதமான நோய்களுக்கு மூலிகைகளிலான மருந்துகளைக்  கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன். அது இயல்பாகவே எனக்கு நமது பாரம்பரிய மருத்துவத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டியது.

தமிழகத்தில் உள்ள சித்த மருத்துவம் எப்படி அறிவியல்பூர்வமாகச் செயல்படுகிறது என்ற அடிப்படையில் ஆராய்ச்சி  செய்து வருகிறேன். இன்றைய உலக மருத்துவத்துக்கு நிகரான - அதைவிட மேம்பட்ட - பல மருத்துவ வழிமுறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. வெளி உலகுக்குத் தெரியாமல் ஓலைச் சுவடிகளில் மக்கி மறைந்து போனவை நிறைய.
 நான் "மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் சிஸ்டம்ஸ் டெக்னாலஜி, சிஸ்டம் விசுவலைசேஷன் வகுப்புகளை எடுக்கும் பேராசியராகவும் இருக்கிறேன்.

 ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே... 2008 இல் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்து "அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்' (CSIR) என்ற அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வந்தேன்.  மூன்று மாதங்கள் இந்தியாவில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகளைச் சந்தித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தயார் செய்தேன்.

இங்கே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய சூழ்நிலை நிலவவில்லை என்பதை அறிந்தேன். இங்குள்ள விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறனுடையவர்கள் என்றாலும் அதற்குத் தடையாகப் பல விஷயங்கள் உள்ளன.

சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் எந்த உருப்படியான கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இருப்பதற்கு இந்த அமைப்பின் மேலிருந்து அமுக்குபவர்களே காரணம் என்று சொன்னேன். இது இந்தியாவில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டேன்'' என்கிறார் சிவா அய்யாதுரை.

அவருடைய கண்டுபிடிப்பான இ - மெயிலுக்குக் காப்புரிமை பெற்று 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, "இன்னோவேஷன் கார்ப்ஸ்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கிறார்.

அதன் மூலம் இவர் வளர்ந்த நெவார்க் நகரத்தில் பயிலும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினால், அவர்களுக்கு 1 லட்சம் டாலர் பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதை அமெரிக்காவின் பிற ஊர்களுக்கு மட்டுமல்ல, சென்னை வரை இதை விரிவுபடுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம்? என்று கேட்டோம்.

  ""இந்த நெவார்க் நகரம் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. அதனால் அதற்குத் திருப்பி எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு அமைந்ததைப் போன்ற குடும்பம், எனக்கு அமைந்ததைப் போன்ற சூழல் எல்லாருக்கும் அமைந்தால், எல்லாரும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். உருவாக்குவார்கள்.

இந்தியாவில் 25 வயதுக்குட்பட்டோர் பாதிக்கும் மேல் - 50 கோடிக்கும் மேல் உள்ளனர். வெளிநாடுகளின் அவுட்சோர்சிங் மூலமாகக் கிடைக்கும் வேலைவாய்ப்பெல்லாம் வருங்காலத்தில் இந்த இளம் வயதினருக்குப் போதவே போதாது.

 புதிய புதிய கண்டுபிடிப்புகளின் மூலமாகத்தான் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். கண்டுபிடிப்புகளைப் பெரிய பெரிய பல்கலைக் கழகங்களின் மூலமாக, தொழில்நுட்பக் கல்லூரிகள் மூலமாகத்தான் உருவாக்க முடியும் என்ற மாயை இந்தியாவில் உள்ளது. உண்மையில் புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும், கண்டுபிடிப்பவர்களுக்கு உரிய வசதிகளும் செய்து தரப்பட்டாலேயே போதும். அதற்கு ஊக்கமூட்டும்விதமாகவே இந்த பரிசளிப்புத் திட்டத்தை அறிவித்திருக்கிறேன்'' என்ற அவரிடம்,

அவருடைய குடும்பத்தினரைப் பற்றிக் கேட்டோம். ""அம்மா சமீபத்தில் இறந்துவிட்டார்கள். அம்மாவால்தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்தேன் . அம்மா இல்லாதது எனக்குப் பெரிய இழப்பு. மனவேதனை. அப்பாவுக்கு 80 வயதாகிவிட்டது.

 சகோதரி உமா தனபாலன் டாக்டராக இருக்கிறார்'' என்றார்.

 சிவா அய்யாதுரையின் சமீபத்திய கண்டுபிடிப்பு முயற்சி: கணையத்தில் வரும் புற்றுநோய்க்கு மருந்து.

நன்றி :- தினமணிக் கதிர், 18-11-2012


0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger