எழுத்தாளர்கள் ரேவதி, கதிர்பாரதி
இந்த ஆண்டுக்கான (2013) சாகித்ய அகாதெமியின் குழந்தைகள் இலக்கியம் (பால புரஸ்கார்) மற்றும் இளைஞர் இலக்கிய (யுவ புரஸ்கார்) விருதுகளுக்கு தமிழ் எழுத்தாளர்கள் ரேவதி மற்றும் கதிர்பாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை சாகித்ய அகாதெமியின் செயலாளர் கே.சீனிவாசராவ் வெள்ளிக்கிழமை (ஆக.23) சென்னையில் வெளியிட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- குழந்தைகளை மையப்படுத்தி வெளியான கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் உள்ளிட்டவற்றில் சிறந்த படைப்புகளுக்கு பால புரஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதே போல 35 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் எழுதிய கவிதை, சிறுகதை, நாவல் உள்ளிட்டவற்றில் சிறந்த படைப்புகளுக்கு யுவ புரஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன.
2013-ஆம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் மற்றும் பால புரஸ்கார் விருதுகளுக்காக 24 மொழிகளில் நூற்றுக்கணக்கான நூல்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுக்க மூன்று நீதிபதிகள் கொண்ட 47 குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருதுகளுக்கு 16 கவிதைத் தொகுப்புகள், 5 சிறுகதைத் தொகுதிகள் உள்பட 23 படைப்புகளும், பால புரஸ்கார் விருதுகளுக்கு 24 படைப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழியில் யுவ புரஸ்கார் விருதுக்கு கதிர்பாரதி எழுதிய "மெஸ்ஸியாவுக்கு மூன்று மச்சங்கள்' என்ற கவிதைத் தொகுப்பு தேர்வாகியுள்ளது. பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் ரேவதி எழுதிய "பவளம் தந்த பரிசு' என்ற சிறுவர் இலக்கியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு தலா, ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்படும். பால புரஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை வரும் நவம்பர் மாதத்திலும், யுவபுரஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார் கே. சீனிவாச ராவ்.
இந்த சந்திப்பின் போது சாகித்ய அகாதெமியின் துணை செயலாளர் ரேணு மோகன், மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி நாச்சிமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.காமராசு, இரா.சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.
விருதுக்குத் தேர்வானவர்களின் விவரம்:
ரேவதி (ஈ.எஸ்.ஹரிஹரன்) பால புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ரேவதியின் இயற்பெயர் ஈ.எஸ்.ஹரிஹரன். இவர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைப் பூர்விமாகக் கொண்டவர்.
அரசு அலுவராகப் பணியாற்றிய இவர், கோகுலம் இதழின் ஆசிரியராக 11 ஆண்டு காலம் பொறுப்பு வகித்துள்ளார்.
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் சீடரான ரேவதி, சிறுவர் இலக்கியத்தில் சிறுகதை, நாவல், நாடகம் உள்பட 92 புத்தகங்களை எழதியுள்ளார். மத்திய, மாநில விருதுகள் உள்பட 35-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
சிறை மீட்ட செல்வன், பாட்டு வாத்தியார், கார்வண்ணன் கண்ட கனவு, அப்பள ராஜா உள்ளிட்ட ரேவதியின் படைப்புகள் சிறுவர் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவை.
இவர் எழுதிய ராம் ரசாக் என்ற படைப்புக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் விருது கிடைத்துள்ளது. 78 வயதைக் கடந்த ரேவதி தற்போது சென்னை, வில்லிவாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
கதிர்பாரதி: யுவ புரஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள கதிர்பாரதியின் இயற்பெயர் செங்கதிர் செல்வன் (30). தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரைப் பூர்விகமாகக் கொண்ட இவர், கல்கி இதழில் தலைமை உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
விவசாயப் பின்னணியில் வளர்ந்த கதிர்பாரதி, இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர். "மெஸ்ஸியாவுக்கு மூன்று மச்சங்கள்' எனும் கவிதைத் தொகுப்பு இவர் எழுதிய முதல் புத்தகமாகும். கதிர்பாரதி தனது குடும்பத்தினருடன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
நன்றி :- தினமணி,24-08-2013
0 comments:
Post a Comment