Home » » இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 273 + 3 வன்புணர்ச்சி வழக்குகள் பதிவாகின்றன !

இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 273 + 3 வன்புணர்ச்சி வழக்குகள் பதிவாகின்றன !




பயம் அறியாத காவல்துறையினர் பயத்தோடு படிப்பது அன்றாட நிகழ்வுப் பட்டியல். குற்றம் எங்கு எப்படி நடந்தது என்று ஆராய வேண்டும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இருந்தால் இன்னும் பதற்றம். காவல் நிலைய அதிகாரி முதல், டி.ஜி.பி. வரை நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டும்.

இப்போது நிகழ்வுப் பட்டியல், ஊடகங்களிலிருந்து "உடையும் செய்தி'யாக வருகிறது; கணினி மூலம் தகவல் பரிமாற்றம் விரிவடைந்துவிட்டது. அதன் பயனாக இந்த வருடம் மத்திய குற்ற ஆவண ஆணையம் நாட்டின் 2012-ஆம் ஆண்டிற்கான குற்ற நிகழ்வுகள் பட்டியலை விரைவிலேயே வெளியிட்டு விட்டது.

மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நடைபெற்ற குற்றங்கள், சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகள் பட்டியல், காவல்துறை அவற்றை எவ்வாறு கையாண்டது என்பனவற்றை இதன் மூலம் நாம் அறியலாம். புள்ளிவிவரங்கள் இரு முனை கத்தி போன்று சாதகம், பாதகம் இரண்டும் பொருந்தியது. புள்ளிவிவரங்களை வைத்து மட்டும் காவல்துறையின் செயல்பாடுகளைக் கணித்துவிட முடியாது என்றாலும், சில புள்ளிவிவரங்கள் உண்மைகளைப் படம் பிடித்துக் காட்டும். அவை கற்பிக்கும் பாடம் வருங்காலத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

வழக்குப்பதிவு செய்து விசாரிக்கக்கூடிய வழக்குகள், விசாரிக்க முடியாத வழக்குகள் என்று குற்ற நிகழ்வுகள் பிரிக்கப்படுகிறது. 2012-ஆம் வருடம் நாட்டில் விசாரிக்கக்கூடிய வழக்குகள் 60,41,559 என்று காவல் துறை பதிவு செய்தது. இதில் இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் 23,87,188. இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் முக்கியமாக கருதப்படுகிறது, ஏனெனில் அவை உடல் மற்றும் சொத்து மீது இழைக்கப்படும் குற்றங்கள் சம்பந்தப்பட்டது. சிறப்பு சட்டங்கள், மற்ற பிரிவுகளில் போடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 36,54,371, ஆக, மொத்த வழக்குகள் 60.41 லட்சம்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் முக்கியமாகக் கருதப்படுவது கொலை, ஆதாயக் கொலை, கொடிய காயம் விளைவித்தல், பொது இடங்களில் சண்டை சச்சரவு போன்றவை.

கொலை, காயம் சம்பந்தப்பட்ட வழக்குகள் 5.6 லட்சம் நிகழ்ந்தன. இதில் நாட்டில் கொலை வழக்குகள் மட்டும் 34,434. தமிழ்நாட்டில் 1,949, உத்தரப் பிரதேசத்தில் 4,966, பிகாரில் 3,516, ஆந்திரத்தில் 2,717, கர்நாடகத்தில் 1,860 கொலைகள் பதிவு செய்யப்பட்டன.

இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களில் 2012-இல் நடந்த கொலைகள், தில்லியில் 408, மும்பையில் 215, பாட்னாவில் 224, பெங்களூரில் 266, சென்னையில் 180, மதுரையில் 39, கோவையில் 29. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் நமது நகரங்களில் குறைவு என்றாலும் எந்த ஒரு கொலையும் பீதியை கிளப்புகிறது.

பாலியல் பலாத்கார வழக்குகள், வன்புணர்ச்சி வழக்குகளின் விவரம் 1971 முதல்தான் சேகரிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்து 24 வருடங்கள் பாலியல் வழக்குகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது விழிப்புணர்வு குறைவா, மெத்தனமா? நமது சமுதாய உணர்வுகளை எடுத்துக் கொண்டால் இத்தகைய நிகழ்வுகளைப் பற்றி சொல்வதற்கே அஞ்சுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்களையே குறை கூறுவார்கள். புகார் செய்யப்படும் வழக்குகளைவிட நடந்த நிகழ்வுகள் அதிகமாக இருக்கும் என்ற வகையில்தான் புள்ளிவிவரங்களை ஆராய வேண்டும்.

தில்லியில்தான் அதிகமாக 585 வன்புணர்ச்சி வழக்குகள் 2012-இல் பதியப்பட்டன. மும்பையில் 232, சென்னையில் 94, பெங்களூரில் 90 வழக்குகள். 1971-ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி நாட்டில் 2,487 ஆக இருந்த வன்புணர்ச்சி வழக்குகள் 2012-ஆம் ஆண்டு 24,923 வழக்குகளாக (90.2 சதவிகிதம்) உயர்ந்துள்ளது. இதர பாலியல் பலாத்கார வழக்குகளை எடுத்துக் கொண்டால் 2011-இல் 2.28 லட்சமாக இருந்த வழக்குகள் 2012-ஆம் ஆண்டில் 2.44 லட்சமாக உயர்ந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில்தான் அதிகமாக 3,425 வன்புணர்ச்சி வழக்குகள் பதியப்பட்டன. தமிழ்நாட்டில் 737 வழக்குகள், சென்னையில் 94, சேலம் 51, திருநெல்வேலி 47, மதுரை 41, கோவை 29.

பாலியல் குற்ற ஒழிப்பு சட்டம், வரதட்சணை ஒழிப்பு சட்டம் போன்ற சமுதாய நலன் கருதி இயற்றப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் அமலாக்கம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் எப்போதும் சிறப்பாக இருக்கும். அதற்கு முக்கிய காரணம் அதிக விழிப்புணர்வு. பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் 2,563 வழக்குள் பதியப்பட்டன தமிழகத்தில் 500 வழக்குகளும் ஆந்திரத்தில் 472 வழக்குகளும் பதியப்பட்டன. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களை குற்றவாளிகளாகக் கருதாமல் பாதிக்கப்பட்டவர்களாகவே கருதி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் களையப்பட வேண்டும். 2012-ஆம் வருடம் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் 38,172. 2011-இல் 33,098. 15.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது. மொத்த இந்திய தண்டனை சட்ட வழக்குளில் 8.89 சதவிகிதம் 2012-இல் பதிவாகியுள்ளது. குழந்தைக் கடத்தல், வன்புணர்ச்சி, கொலை, பாலியலில் ஈடுபடுத்துவதற்காக குழந்தைகளைக் கடத்துதல் போன்ற, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பரவலாக நாட்டில் நிகழ்கிறது. உத்தரப் பிரதேசம் 6,033, மத்தியப் பிரதேசம் 5,168, தில்லி 4,462, மகாராஷ்டிரம் 3,456, பிகார் 2,894, ஆந்திரம் 2,274. தமிழ்நாட்டில் 1,036 வழக்குகள். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவு.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வழக்குகளும் சமுதாய சீர்திருத்த சட்டங்களில் முக்கியமாகக் கருதப்படுகிறது. குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்டம், அரசியல் சாசனம் 17-இல் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரகடனப்படி 1955}இல் இயற்றப்பட்டது.

இச்சட்டத்தின்கீழ் 2012-ஆம் வருடம் 33,655 வழக்குகள் நாட்டில் பதியப்பட்டன. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் முறையே 6,303, 5,559, 4,821 அதிகமான வழக்குகள் கொண்ட மாநிலங்கள். தமிழ்நாட்டில் 1,647 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளத்தில் முறையே 3,057, 2,685, 810 வழக்குகள். வழக்காடுதல் மட்டும் சீர்திருத்தத்தை வளர்க்காது என்பதை, அதிகரிக்கும் வழக்குகள் வெளிச்சமிடும்.

சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பது காவல்துறையின் முக்கிய பணி. தெருக்களில் நடைபெறும் சண்டை சச்சரவுகள், பூசல்கள், வன்முறைகள் சட்டம் ஒழுங்கு நிலையை பிரதிபலிக்கும். 2.75 லட்சம் வன்முறை சம்பவங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ளன. 2011-ஆம் வருடம் நிகழ்ந்த 2.56 லட்சம் வழக்குகளை ஒப்பிடுகையில் இது சற்று அதிகம்.

இது மொத்த இந்திய தண்டனைச் சட்ட வழக்குகளில் 11.5 சதவீதம். மக்கள்தொகை அதிகம் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 33,824, பிகாரில் 29,842, மூன்றாவதாக மகாராஷ்டிரத்தில் 26,972 நிகழ்வுகள்.

மேற்படி வன்முறைப் பதிவுகளில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 86,469 சம்பவங்கள் நிகழ்ந்தன என்பது சங்கடப்படுத்தும் விவரம். இவற்றில் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் எண்ணிக்கை மட்டும் 24,923 என்பது இந்தியாவிற்கு தலைகுனிவு. இதில் அதிகமாக பிகாரில் 11,670 வழக்குகள் பதிவாயின உத்தரப்பிரதேசத்தில் 6,003 வழக்குகள், மகாராஷ்டிரத்தில் 10,106, சிறிய மாநிலமான கேரளத்தில் மிக அதிகமாக 11,506 வழக்குகள் பதிவாயின. அவற்றில் சட்ட விரோதமாக தெருக்களில் ரகளை நிகழ்வுகள் 10,938.

படித்தவர்கள் அதிகமான கேரளத்தில் இந்த நிலை. படித்தவர்கள் ஏன் தெருக்களுக்கு வந்து சண்டையிடுகிறார்கள்? அறிவு புரிதல் அளிப்பதால் அநியாயங்களை கண்டு தட்டிக் கேட்க தெருக்களுக்கு வருகிறார்கள் என கொள்ள வேண்டும் ; நல்லவேளை தமிழ்நாட்டில் இத்தகைய பொது இட வன்முறைகள் 3,862 மட்டுமே.

திருட்டு வழக்குகள் கன்னக்களவு வழக்குகள் 4.3 லட்சம் பதிவாகியுள்ளது. இதில் கன்னக்களவு 92,892. தமிழ்நாட்டில் திருட்டு வழக்குகள் 18,467. இதில் கன்னக்களவு 4457. மராட்டிய மாநிலத்தில் அதிகமாக 71,188 வழக்குகள், ஆந்திரத்தில் 36,717 கர்நாடகத்தில் 27,164, கேரளத்தில் 7874. இந்தியாவில் திருட்டு வழக்குகளில் மொத்த இழப்பு ரூபாய் 21,071 கோடி. அதில் தமிழ்நாட்டில் ரூபாய் 137.44 கோடி. மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு 82.58 கோடி அதாவது 60 சதவிகிதம். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இது சிறப்பான நடவடிக்கை.

காவல்துறையின் செயல்பாடு திறமையான புலனாய்வில் இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் 2012-ஆம் ஆண்டு 32.43 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவற்றில் 23.95 லட்சம் வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டன. 8.45 லட்சம் வழக்குகள் ஆறுமாதத்திற்கு மேல் விசாரணையில் உள்ளன
.
கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் 78.8 லட்சம். தமிழ்நாட்டில் 3,08,578 வழக்குகள். வெற்றிகரமாக முடிக்கப்பட்ட வழக்குகள் தமிழ்நாட்டில் 56.5 சதவிகிதம், அகில இந்திய அளவு 38.1 சதவீதத்தைக் காட்டிலும் அதிகம் என்பதில் பெருமை கொள்ளலாம்.

காவல்துறைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை எல்லா மாநிலங்களிலும் உள்ளது. மொத்த ஒப்பளிக்கப்பட்ட எண்ணிக்கை 21.64 லட்சம். பணியில் இருப்பவர்கள் 16.74 லட்சம். மொத்த பெண் போலீசாரின் எண்ணிக்கை 85,462. மராட்டிய மாநிலத்தில் 17,134 பெண் போலீஸ் அதற்கு அடுத்தாக தமிழ்நாட்டில் 12,085.

இந்தியாவில் மொத்த காவல் நிலையங்கள் 14,155. தமிழ்நாட்டில் 1,492 காவல் நிலையங்கள். சராசரி 1 லட்சம் பொதுமக்களுக்கு 138 காவலர்கள் பணியில் உள்ளனர். மேலை நாடுகளில் இது மூன்று மடங்கு அதிகம்.
2012-ஆம் வருடம் 77.5 லட்சம் நபர்கள் கைதாகியுள்ளனர் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சம்.

இந்தியாவில் குற்றக் கடிகாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 273 வழக்குகள் பதிவாகின்றன. பதிவாகாதவை, புகார் செய்யாதவை பல இருக்கலாம். 373 நபர்கள் ஒரு மணி நேரத்திற்கு கைதாகிறார்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3 வன்புணர்ச்சி வழக்கு பதிவாகிறது.

குற்றக் கடிகார முட்களை நிறுத்துவது கடினம். தாமதமாக ஓடச் செய்யலாம், நிற்காமல் நீராக ஓடும் குற்றங்களைத் தடுக்கலாம் - காவல்துறையினர் பொதுமக்களோடு ஒன்றிஉழைத்தால்.

கட்டுரையாளர்:  ஆர்.நடராஜ், காவல்துறை முன்னாள் தலைவர்.

நன்றி :- தினமணி, 03-08-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger