"நான் ஆத்மாவே" என்று உணரச் செய்வதே சித்தநெறியின் சாரம்.
"நான் உண்மையில் இந்த சரீரம் அன்று;
இந்த மனமும் அன்று;
என்னைப் பொறுத்தவரையில் பாவமும் இல்லை; புண்ணியமும் இல்லை.
அவ்விதமாயின் உண்மையில் நான் யார் ?
அகண்ட சச்சிதானந்தமாய் என்றும் எதிலும் நிலைபெற்று விளங்கும் ஆத்மாவே நான்.
இந்த ஆத்மாவே எல்லாச் சரீரங்களிலும் தன்னைத் தோற்றுவிக்கிறது'
இதனை உணர்ந்தவனே ஜீவன் முக்தன்.
சுவாமி சங்கரானந்தா, ஐந்தருவி
"ஞானத்தாழிசை" -மாணிக்கவாசக சுவாமிகள் அருளியது -3-வது பாடல்
"நாசிநுனி நடுவேதிருக் கூத்தாகிய நடனம்
ஞானக்கண் ணாதலனை நாடிச் செயல் கண்டு
சீசீ என முறையற்றனை சினமற்றனை உயிர்கள்
செய்யுமந்தி னைவற்றனை தேசத்துடன் கூடிக்
கூசிக்குல வரவற்றனை கோளற்றனைப் பாவக்
குடியற்றனை நலமுற்றனை குடியேறினை மேலாங்
காசிப்புனல் தனில் மூழ்கினை கரையேறினை காட்சி
கண்டாய் அரன் கொலுவாகிய சபைமேவினை மனமே"
மாணிக்கவாசக சுவாமிகளின் "ஞானத்தாழிசை" 3-வது பாடல் :-விளக்கவுரை:- சுவாமி சங்கரானந்தா, ஐந்தருவி
நாசி நுனி நடுவாகிய ப்ருவ மையத்தில் ஆடும் நடராச நடனத்தை அதாவது சுழுமுனையின் வழி ஜீவசக்தியாகின்ற வாயு உள்ளே செல்லும்போது ஏற்படுகின்ற ஆத்மஜோதியின் அசைவினைக் காணும்போது எல்லாவித வினைகளுமற்று, சினமற்று, பேச்சற்று, நினைவற்று, உலகியல் தொடர்பற்று, பேரின்பத்தை அடைகின்றான். காசிப் புனல் மூழ்கிக் கரையேறி அரன் கொலுவிருக்கும் கோலத்தைக் கண்டு பரமானந்தத்தில் திளைக்கின்றான். இதனையே,
"துரியமலை மேலுளதோர் ஜோதிவளநாடு
தோன்றுமதில் ஐயர்நடம் செய்யுமணி வீடு
தெருமது கண்டவர்கள் காணிலுயி ரோடு
செத்தா ரெழுவாறென்று கைத்தாளம் போடு" -
என்று பாடுகின்றார் வள்ளலார். இந்தச் சிவயோகச் சமாதியில் உண்டாகும் அனுபவங்க்களைக் கூறுகிறார். அவர் துரியமலை என்பது, மலைபோல் அசையாமல் புலன்களும், மனதும் வெளியே சலிக்காமல் உள்ளே அடங்கியிருக்கும் நிலை. அந்நிலையிலிருக்கும்போது அம்மலையில் ஜோதிமயமான நாடொன்றினைக் காணலாம்.
அச்சோதிமய நாட்டிலுள்ள மணிமண்டபத்தில் நடனமிடும் சிவஜோதி நடனத்தை உயிர் இருந்தும் இறந்ததற்கு ஒப்பாக வாழும் ஞானம் இல்லாத ஜீவ சமுதாயம் தரிசித்த மாத்திரத்தில், ஞானமாகிய உயிர்பெற்று எழுந்திருப்பர் என்று கைத்தாளம் கொட்டச் சொல்லுகிறார் வள்ளலார்.
அருணகிரியாரோ "தோ தீ திகு திகு தீ தீ ஜெக ஜெக ஜோதி நடமிடும் பெருமாளே" என இவ்வனுபவத்தையே
கூறிப் பரவசமடைகிறார்.
ஞானத்தாழிசை ஆறாம் பதிப்பு ( 2010 )
கிடைக்குமிடம் :- சங்கராஸ்ரமம் , ஐந்தருவி, குற்றாலம்- P.O.
திருநெல்வேலி மாவட்டம்,- 627802
---------------------------------------------------------
போன் :- 04633-291166
0 comments:
Post a Comment