பசிப்பிணி மருத்துவர்
தென்னங்குடி நாட்டார் |
இத்தகு வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னங்குடி கிராமத்தில் வாழ்ந்து வந்த பெருநிலக்கிழார் நாராயணசாமி நாட்டார், துளசியம்மாள் தம்பதியினரின் ஒரே மகனாய், அருந்தவப் புதல்வராய் சுந்தரராச நாட்டார் தோன்றினார்.
தனது தந்தையாரைப் போலவே, விவசாயப் பணியினை மேற்கொண்டு அயராது உழைத்து, தனது விளை நிலங்களின் எல்லையை விரிவு படுத்தினார்.
இளமை
முதலே தமிழின் சுவையறிந்து, தாய்மொழியாம் தமிழ் மீது தீராக் காதல்
கொண்டவர் சுந்தரராச நாட்டார். சுந்தரராச நாட்டாருக்கு சிட்டியம்மாள், மங்கை
நல்லாள் என மனைவியர் இருவர். எனினும் குழ்ந்தைகள் இல்லை.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு
என்னும் குறளிள் மூலம் ஈதலின் பெருமையினை விளக்குவார் திருவள்ளுவர்.
இயற்கையாகவே ஈகை குணமுடைய சுந்தரராச நாட்டார் அவர்கள், பொருள்
இல்லாமையால், கல்வி கற்க இயலாது தவிக்கும் சிறார்களை எல்லாம், தனது
மக்களாகவே கருதினார். திக்கற்ற மற்றும் ஏழை மாணவர்களுக்கு உதவுதலையே தனது
வாழ்வின் நோக்கமாகக் கொண்டார்.
ஏழை மாணவர்களுக்கு எவ்வகையில் உதவிடலாம் என எண்ணி சிந்தனையில் ஆழ்ந்த
சுந்தரராச நாட்டாரின் மனக் கண்ணில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் முன் வந்து
நின்றது.
கரந்தைத் தமிழ்ச் சங்கம்
தமிழ் நாட்டின் தெருக்களில் தமிழ்தானில்லை என்ற அவல நிலையினைப்
போக்கிடவும், தமிழின் பெருமைகளை மீட்டெடுக்கவும், எங்கும் தமிழ் எதிலும்
தமிழ் என்னுமோர் உன்னத நிலையினை உருவாக்கிடவும், வீறு கொண்டு தோன்றிய
அமைப்பு கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
நாட்டார் அறநிலையக் கட்டிடம |
தமிழ் மொழியினை வளர்க்க தனித் தமிழ் கலாசாலைகள் ஏற்படுத்துவதால் மட்டுமே
பெரிதும் பயன் விளையப் போவதில்லை என்று எண்ணிய உமாமகேசுவரனார், தமிழோடு
கைத் தொழிலகளையும் கற்றுக் கொடுக்கும்படியான காலசாலை ஒன்றினை எற்படுத்தத்
தீர்மானித்தார்.
உமாமகேசுவரனாரின் அயரா முயற்சியின் பயனாக 1916 ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்க செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரி
தொடங்கப் பெற்றது.இக்கல்லூரியில் தமிழோடு நெசவுத் தொழில், நூல் நூற்றல்,
பாய் நெசவுத் தொழில்,மர வேலைகள், நூற் கட்டு முதலியனவும் கற்பிக்கப் பட்டன.
திக்கற்ற மாணவர் இல்லம்
கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரியின் சார்பில்
1930 ஆம் ஆண்டு திக்கற்ற மாணவர் இல்லம் ஒன்றும் தொடங்கப் பெற்றது. தாயை
இழந்தோ.தந்தையை
இழந்தோ,இருவரையும் இழந்தோ, பாதுகாவலர் ஒருவருமின்றி வாடும் ஆறு வயது முதல்
பதிமூன்று வயது வரையுள்ள மாணவர்கள் இத்திக்கற்ற மாணவலிரில்லத்தில்
சேர்க்கப் பெற்றனர். இவ்வில்லத்தில் சேர்ந்த நாள் முதல் இவர்கள் தம்
துன்பம் நீங்கி, இன்பமெய்தி, எழில் தரு முகத்தோடு உடல் நலம் பெறு கல்வி
பயிலத் தொடங்கினர்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு என்று நிலையான வருவாய் ஏதுமில்லாத
காரணத்தால் பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து சந்தித்து வந்தபோதும்,
மாணவர்களிடமிருந்து கட்டணம் பெற்றிடாமல் இலவசமாகவே கல்வி
பயிற்றுவிக்கப்பெற்றது.திக்கற்ற மாணவரில்லத்திலும் மாணவர்கள் இலவசமாகவே
சேர்க்கப்பெற்றனர்.
அன்பர்காள், இவ்வரிய காரியங்களை எல்லாம், என்றும் இடையறாது நடைபெற்றுவருதல் வேண்டாமா? இந்நகர மக்கள் தத்தம் வீடுகளில் பிடியரிசிக் கலயம் வைத்து, ஒரு கையளித்து உதவிவருதல் வேண்டும். இந்நகர வணிகர்கள், கடைகட்கு மாலையில் வந்து நிற்கும் சங்க அலுவலர்க்கு ஒரு காசேனும் அளித்து உதவிவருதல் வேண்டும். வெளியூர் அன்பர்கள் அறுவடைக் காலங்களில் இயன்ற அளவு நெல் உதவிகளைச் செய்து வருதல் வேண்டும். ஒவ்வொரு நாளும் இன்னனைய செலவுகள் எத்துனையோ செய்து வரும் நம் தமிழ் மக்க்ள் மேற்கூறிய வருவாய்களால் ஆயிரக் கணக்கான எழைச் சிறுவர்கள் கல்வி பயிற்சியுறுதலை உள்ளத்தில் கொள்ளுதில் வேண்டும். தமிழ்த் தாயின் திருமக்காள் உள்ளங்கனிமின், ஏழைச்சிறார்கட்கு இரங்குமின், புகுழும் பேரும் போற்றுமின், போற்றுமின்.
நிதி மிகுந்தேர்ர் பொற்குவை தாரீர் நிதிகுறைந்தோர் காசுகள் தாரீர்
அதுவுமற்றோர் இன்சொல அருளுவீர்
என
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, கல்வி பயிற்றுவித்தலையும், திக்கற்ற
மாணவரில்லத்தையும் தொடர்ந்து இலவசமாகவே நடத்திட, தஞ்சைப் பகுதி மக்களுக்கு
உமாமகேசுவரனார் அவர்கள் உருக்கமான வேண்டுகோளினை விடுத்ததோடு, தானும் தனது
சொந்த வருவாயில் இருந்து ஒரு தொகையினை மாதா மாதம் வழங்கி வந்தார்.
அக்காலத்தில் கரந்தை,கூடலூர், குளமங்கலம், அரசூர், அம்மன் பேட்டை,
பள்ளியக்கிரகாரம்,சுங்கான் திடல், ஆலங்குடி,ஆத்தூர் போன்ற இடங்களில்
பல,சிறு சிறு அரிசி அரைக்கும் ஆலைகள் இயங்கி வந்தன.அப்பகுதிகளில் வசிக்கும்
மக்கள், தத்தமது தேவைக்கேற்ப நெல் மணிகளைக் கொண்டு வந்து, அரைத்து
அரிசியாக்கிக் கொண்டு செல்வார்கள் இவ்வகை அரிசி ஆலைகள் அனைத்திலும்,
கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்று பெயர் எழுதப்பட்ட சாக்குப் பைகள் வைக்கப்
பட்டிருக்கும். நெல் மணிகளை அரிசியாக்கிக் கொண்டு செல்லும்
பொதுமக்கள்,அங்கு வைக்கப்பெற்றிருக்கும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
சாக்குப் பைகளில், தங்களது அசிரியின் ஒரு பகுதியை அன்பளிப்பாக
செலுத்திவிட்டுச் செல்வார்கள்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத் திக்கற்ற மாணவரில்லத்தின் ஈடு இணையற்ற,
அப்பகுக்கற்ற சேவைக்கு, தஞ்சைப் பகுதி மக்கள் நேசப் பார்வையோடு, ஆதரவுக்
கரம் நீட்டி, தங்களால் இயன்ற சிறு சிறு உதவிகளைச் செய்வதைப் பெருமையாய்
கருதினர்.
சுந்தரராச நாட்டார் தமிழ்க் கல்வி அபிவிருத்தி தர்மம்
சிறு வயது முதலே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வளர்ச்சிப்
பணிகளையும், திக்கற்ற மாணவரில்லத்தின் சீரிய தொண்டினையும் நேரில் கண்டு
மகிழ்ந்திருந்த சுந்தரராச நாட்டார் அவர்கள், தனது செல்வமும், சேவையும்
சென்றடைய வேண்டிய இடம் கரந்தைத் தமிழ்ச் சங்கமே என்று முடிவு செய்தார்.
1959 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் நாள், சுந்தரராச நாட்டார் தமிழ்க் கல்வி அபிவிருத்தி தருமம்
எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவினார். தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச்
சங்கம் நடத்திவரும் புலவர் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்கட்கு இலவச உணவு
அளிப்பதே இவ்வறக்கட்டளையின் நோக்கமாகும்.
சுந்தரராச நாட்டார் அவர்கள், தாமே இந்த அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்து செயல்படுவது என்று முடிவு செய்தார். 22 ஏக்கர் 50 செண்ட் பரப்பளவு கொண்ட விளை நிலங்களை, அறக்கட்டளைக்காக எழுதி வைத்தார். இன்றைய தேதியில் இந்த சொத்துக்களின் மதிப்பு ரூபாய் நாற்பது இலட்சத்தினையும் தாண்டும். சுந்தரராச நாட்டார் அவர்களுக்கு எத்துனை பரந்து பட்ட மனமும், ஈகை குணமும், சேவை மனப்பான்மையும் இருந்திருக்கும் என்பதை ஒரு கணம் எண்ணினால் வியப்பே மிஞ்சும்.
9.4.1961 முதல் பல்லாண்டுகள் கரந்தைத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு
உறுப்பினராக்வும் சுந்தரராச நாட்டார் அவர்கள் திறம்படப் பணியாற்றினார்.
1970 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 21 ஆம் நாள் மேலும் 92 செண்ட் நிலத்தினை
தனது அறக்கட்டளையில் சேர்த்து, கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்திவரும்
திக்கற்ற மாணவர் இல்லத்தில் பயிலும் மாணவர்களுக்கு இலவச உணவு அளிப்பதற்காக
வழங்கினார்.
காட்சிக்கு எளியராய், பழகுதற்கு இனியராய் விளங்கிய சுந்தரராச நாட்டார்
அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு மேலும் ஏதாகினும் செய்திட வேண்டும்
என்று எண்ணினார். கரந்தைத் தமிழ்ச் சங்கம் நடத்திவரும் திக்கற்ற மாணவர்
இல்லத்திற்கு, நல்லதொரு கட்டிடத்தினைத் தனது வருவாயிலிருந்து, தானே
முன்னின்று கட்டித் தருவது என்று தீர்மாணித்து செயலில் இறங்கினார்.
கரந்தைத் தமிழ்ச் சங்க நுழைவு வாயிலின் இடது புறம்,ஏ.கே.வேலன் அவர்கள்
தனது முதல் வருவாயிலிருந்து கட்டி அன்பளிப்பாக வழங்கிய அருணாசல
நிலையக்கட்டிடத்திற்கும்,சங்க அலுவலகத்திற்கும் இடையே உள்ள இடத்தினைத்
திக்கற்ற மாணவரில்லத்திற்காகத் தேர்வு செய்து, கட்டிடப் பணியினைத்
துவக்கினார்.
கட்டிடப் பணிக்குத் தக்க, கட்டுமானப் பணியாளர்களை நியமித்து, தானே
மேற்பார்வைப் பணியினை மேற்கொண்டு, திக்கற்ற மாணவர்களுக்காக ஒரு புதிய
கட்டிடத்தினைக் கட்டினார். சுட்டெரிக்கும் வெயிலினைப் பொருட்படுத்தாமல்,
இடையில் வேட்டியுடனும், தோளில் துண்டுடனும், மேற்சட்டையின்றி, கட்டிடப்
பணியாளராகவே மாறி,கட்டிடத்தினை அங்கலம், அங்குலமாக பார்த்துப் பார்த்து
உருவாக்கினார். ஓய்வு நேரங்களில், தமிழ்ப் பெரு மன்றத்தில், தலைக்கு இரு
செங்கல் கற்களையேத் தலையணையாக்கி ஓய்வெடுப்பார்.
எளிமை, எளிமை பழகுவதில் இனிமை, இனிமை இவைகளையே தனது குணநலன்களாகப்
பெற்றிருந்த சுந்தரராச நாட்டார் அவர்களால் ரூபாய் நாற்பது ஆயிரம் பொருட்
செலவில் கட்டி முடிக்கப் பெற்ற கட்டிடத்திற்கு.
தென்னங்குடி நா.சுந்தரராச நாட்டார் அறநிலையக் கட்டிடம்
திக்கற்ற மாணவர் இல்லம்
எனப் பெயர் சூட்டப்பெற்றது.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மணி விழாவானது,
1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பெரு
விழாவாகக் கொண்டாடப் பெற்றது. விழாவின் இரண்டாம் நாளான 14.4.1973
சனிக்கிழமை மாலை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் தலைமையில், அன்றைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் மாண்புமிகு டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தென்னங்குடி நா.சுந்தரராச நாட்டார் அறநிலையக் கட்டிடத்தினைத் திறந்து வைத்து, தமிழ்ப் பெரு மன்ற மேடையேற, விழா தொடங்கிற்று.
அன்றைய கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.தனக்கோடி பிள்ளை அவர்கள், விழாத் தலைவரையும், மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களையும், சொற்பொழிவாளர்களையும் வரவேற்றுப் பேசினார்.
சங்கத் தலைவரின் உதடுகள், வரவேற்பிற்குரிய வார்த்தைகளை உதிர்த்தாலும்,
அவரது கண்ணும், மனமும் தமிழ்ப் பெருமன்ற வாயிலையே நோட்டமிட்ட வண்ணம்
இருந்தன. கரந்தைத் தமிழ்ச் சங்க மாணவர்களுக்காக தனது நிலங்களை
அறக்கட்டளையாக எழுதிவைத்தவரும்,பெரும் பொருட்செலவில் திக்கற்ற
மாணவரில்லத்திற்கானக் கட்டிடத்தினைத் தானே முன்னின்று கட்டி வழங்கியவரும்,
அன்றைய விழாவின் நாயகருமான சுந்தரராச நாட்டார் அவர்கள், அந்நேரம் வரை விழா
அரங்கிற்கு வராததே காணரம் ஆகும். விழா முடியும் வரை சுந்தரராச நாட்டார்
அவர்கள் வரவேயில்லை.
எனது
செல்வமும், எனது உழைப்பும் தமிழ் கற்கும் திக்கற்ற மாணவர்களின் வாழ்வை
வளமாக்கப் பயன்படவேண்டும் என்பதே, எனது பிறப்பின் நோக்கமும், எனது
கடமையுமாகும். கடமையைச் செயததற்காக, மேடையேறி பொன்னாடைபோர்த்திக்
கொள்வதும், அதன் மூலம் விளம்பரம் தேடுவதும் எனக்குப் பிடிக்காதவை ஆகும்.
வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக்கூடாது என்று எண்ணுபவன் நான்.
எனக்கு ஏன் இந்தப் பாராட்டு? என்று கூறி கேள்வி கேட்டவரை வியப்பில் ஆழ்த்தினார்.
உலக வரலாற்றிலேயே பாராட்டப் படுபவர் இல்லாமல் நடைபெற்ற பாராட்டு விழா இதுவாகத்தான் இருக்கும்.
சுந்தரராச நாட்டார் அவர்கள் தனது அறக்கட்டளையின் அறங்காவலராக 24 ஆண்டுகள்
பணியாற்றினார். முதுமை காரணமாக உடல் நிலை தளர்வுற்ற வேளையில், 1982 ஆம்
ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் நாள், எனக்கு வயதாகிவிட்ட படியாலும், எனக்குப்
பிறகு இந்த தர்ம சொத்துக்களைப் பராமரித்து வர டிரஸ்டிகளை நியமிக்க முடிவு
செய்திருக்கிறேன் என தனது உயில் சாசனத்தில் பதிவு செய்து,
- வழக்கறிஞர் ஆர். கண்ணுசாமி ராசாளியார்
- திரு தி. கண்ணப்ப நாட்டார்
- திரு க.சண்முகசுந்தர நாட்டார்
- திரு மு. சாமிநாத புண்ணாக்கர்
- திரு தி. சரவணவேல் நாட்டார்
ஆகிய ஐவரையும் அறங்காலவர்களாக நியமித்தார். மேலும் மாணவர்களுக்குக்
கட்டிடம் கட்டவும், புத்தக நிலையங்களை அபிவிருத்தி செய்யவும்,
மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கவும், ஆண்டு விழாக்களுக்கு நன்கொடை
வழங்கவும், பள்ளிக்கு விஞ்ஞான அபிவிருத்திக்கு சாமான்கள் வாங்க உதவித் தொகை
கொடுக்கவும் அறக்கட்டளை நிதியினைப் பயன்படுத்தலாம் என நெறிமுறைகளை வகுத்து வழிகாட்டினார்.
மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்
எனும்
பாடல் வரிகளுக்கேற்ப களைப்பு, அயர்ச்சி, தளர்ச்சி என எதனையும்
பொருட்படுத்தாமல் ஓயாது, உறங்காது உழைத்தவர் தென்னங்குடி சுந்தரராச
நாட்டார் அவர்களாவார்.
ஏழை எளியவர்க்கு உணவிடும் உன்னதத் தொண்டினைச் செய்து வந்த பண்ணன் என்னும் குறுநில மன்னனை,
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எனக்கே
என மூவேந்தருள் ஒருவனான கிள்ளிவளவன், பசிப்பிணி மருத்துவன் என்றழைத்துப் புகழ்ந்து பாடுவான். இந்தப் பண்ணனைப் போலவே, வாழ் நாளெல்லாம் ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும், திக்கற்ற
மாணவர்களுக்கும், உணவு வழங்கிடும் உயர் சேவையினை இனிதே செய்து வந்த
பெருவள்ளல் தென்னங்குடி நா. சுந்தரராச நாட்டார் அவர்கள், தொண்ணூறு
ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து, 1983 ஆம் வருடம் ஆகஸ்ட்டு மாதம் 19 ஆம் நாள்
வெள்ளிக் கிழமை பொன்னுடம்பு துறந்து புகழுடம்பு பெற்றுத் தமிழோடு கலந்தார்.
என் வாழ்வும்
என் வளமும்
மங்காத தமிழே
என்றுரைத்து,
தமிழ் தேடி
கரந்தை நாடிவரும்
திக்கற்ற மாணவர்க்கு
பசிப்பிணி மருத்துவராய்
பசிப்பிணி மருத்துவராய்
வயிறார அன்னமிட்டு
உயிர்காத்து
உயிர்காத்து
தமிழ் வளர்த்த
வள்ளால் சுந்தரராச
வள்ளால் சுந்தரராச
வாழி நின்புகழ்
வாழிய வாழியவே
வாழிய வாழியவே
தென்னங்குடி நா. சுந்தரராச நாட்டார்
புகழ் ஓங்குக...
---------------------------------------------------------
நன்றி
திரு க.சண்முகசுந்தர நாட்டார்,
அறங்காவலர்,
சுந்தரராச நாட்டார் தமிழ்க் கல்வி அபிவிருத்தி தர்மம்
நன்றி :-
karanthaijayakumar.blogspot.com 01-12-2011
0 comments:
Post a Comment