Home » » தமிழ்நாடா? டமில்நாடா ? - ப. சிவதாணுப்பிள்ளை

தமிழ்நாடா? டமில்நாடா ? - ப. சிவதாணுப்பிள்ளை



தமிழ்நாட்டில் எந்தக் காரியம் நடக்க வேண்டுமானாலும் "சிபாரிசு' வேண்டும் போலிருக்கிறது. "சிபாரிசு' இல்லை என்றால் எந்தக் காரியமும் நடக்காது என்பதை சி.என்.அண்ணாதுரையும், ம.பொ.சி.யும்கூட நிரூபித்திருக்கிறார்கள்.

நிரூபணம்: பாதி நேரம் பள்ளிப்படிப்பு, மீதி நேரம் தொழில் படிப்பு என்று ராஜாஜி கொண்டு வந்த அருமையானத் திட்டத்தை காமராஜ் "சிபாரிசு' செய்யவில்லை என்பதால் "குல்லுகப்பட்டரின் குலக் கல்வி' என்று எதிர்த்த, சி.என். அண்ணாதுரை, ராஜாஜியின் "சிபாரிசு' இருக்கவே "டமில் நாடு' என்பதை ஒப்புக் கொண்டார்.

அதேபோல் Thamizh Nadu என்றுதான் இருக்க வேண்டும் என்று சொல்லி வந்த ம.பொ.சி., சி.என்.அண்ணாதுரையின் "சிபாரிசு' வந்ததும் Thamizh என்பதை கைவிட்டு Tamil என்பதை ஏற்றுக் கொண்டார்.

ஒரு மனக்குறை: ராஜாஜி சொன்னதுபோல் Tamilnad என்றே வைத்திருந்தால் Government of Tamilnad என்பதை "தமிழ்நாட்டரசு' என்று தமிழில் சரியாகச் சொல்லி இருப்போம்.

இப்பொழுது என்னவென்றால் "காளை மாடு வண்டி' என்று சொல்வதைப்போல் "தமிழ்நாடு அரசு' என்று சொல்கிறோம். "காளை மாட்டு வண்டி' என்பதுதானே சரி.

வட இந்தியர்களுக்கு "ழ'கரம் வராது என்பதற்காகக் தமிழுக்கும் ழகரம் வேண்டாம் என்று வைத்து விடுவோம் என்று சொல்வது ஒப்புக்கொள்ளக் கூடியதாக இல்லை.

Comparative Phonology யின் படி சொற்களும் பெயர்களும் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்குப் பயணம் செய்யும் பொழுது மாற்றங்களைச் சந்திக்கின்றன என்பது உண்மையே.

எடுத்துக்காட்டாக "கட்டுமரம்' என்ற பெயர்ச்சொல் ஆங்கிலத்துக்குப் பயணம் செய்தபொழுது அது ""கட்டமரான்' Catamaran என்று வடிவெடுத்தது. அதே சமயம் ஆங்கிலேயர்கள் கட்டுமரத்தை Cattumaram என்றுதான் சொல்ல வேண்டும். Catamaran என்று சொல்லக்கூடாது என்று நின்றிருப்பார்களேயானால் கட்டுமரம் என்ற பொருளைக் குறிக்கும் ஒரு பெயர்ச்சொல்லை ஆங்கிலமொழி இழந்திருக்கும். இது ஒப்புக்கொள்ளக் கூடிய மொழி விஞ்ஞானம்.

இங்கே நமது பிரச்னை என்னவென்றால், தமிழர்களும் "கட்டமரான்' என்றுதான் சொல்ல வேண்டுமா என்பதே! அப்படிச் சொல்லி, "கட்டுமரம்' என்ற தமிழ்ப் பெயர்சொல்லை இல்லாமலாக்கி விடுவது சரிதானா என்பதுதான்
.
இராமநாதபுரம் அரச பரம்பரையில் ஒரு வாரிசு வழக்கு வந்ததைச் சட்டம் பயின்றவர்கள் அறிவார்கள். அந்த வழக்கை அன்றைய ஆங்கிலேயர்கள் "மூட்டு ராமலிங்காவின் வழக்கு' (The case of Mootoo Ramalinga) என்று எழுதினார்கள்.

அன்றைய நாள்களில் அவர்களுக்குச் சரியாகச் சொல்லிக் கொடுக்க யாரும் இல்லாமல் இருந்தது. அதற்காக இந்நாள்களில் "பசும்பொன்' முத்துராமலிங்கத் தேவரை Mootoo Ramalinga Tavar என்றா எழுதுகிறோம்? Muthuramalinga Thaver என்று எழுதவில்லையா?

அதுபோலவே ஆங்கிலத்தில் 'Z' இருக்கிறது, Zero இருக்கிறது. இவற்றை மெத்தப்படித்த வட இந்தியர்களும் எவ்வாறு உச்சரிக்கிறார்கள்? அந்தச் சொற்களைச் செப்பனிட்டு, சீர்திருத்தி வித்தியாசமான அமைப்புகளைத் தன் விதிகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்து முடிவில் தன்னுடைய சொற்களைப் போன்றே உருமாற்றம் செய்து கொண்டார்கள்.

ஆம், வட இந்தியர்கள் 'Z' யை இஜட் என்றும், Zero வை "ஜீரோ' என்றும்தான் ஒலிக்கிறார்கள். அதற்காக ஆங்கிலத்திலும் Gero என்றும் ijet என்றும் எழுதுவதா?

இப்பொழுது பிரச்னை என்னவென்றால், தமிழ்ச் சொல்லை பிற மொழிக்காரர்கள் அவர்களின் மொழிக்கூறு அனுமதிக்கும் ஒலிவடிவத்தில் உச்சரிக்கிறார்கள் என்பதால் நாமும் அதே ஒலிவடிவத்தைத்தான் அவர்கள் மொழியில் எழுத வேண்டுமா அல்லது நமது மொழிக்கூறு அனுமதிக்கும் ஒலிவடிவத்தை அவர்களின் மொழியில் என்றாலும் எழுத வேண்டுமா? அப்படி எழுதினால் நம்முடைய மொழிக்கூறு அனுமதிக்கும் ஒலிவடிவம் காப்பாற்றபடுமா இல்லை அழிந்துவிடுமா?

"சீனர்கள்' என்று நாம் தமிழில் எழுதுவதைக் கண்டு சீனர்கள் வருந்தமாட்டார்கள். ஆனால், சீன எழுத்தில் சீனர்கள் என்றுதான் தமிழர்களுக்காக சீனாவில் எழுதப்பட வேண்டும் என்று சொன்னால், சீனர்கள் அனுமதிப்பார்களா?

Tamil nadu என்று ஆங்கிலேயனோ ஜெர்மனியனோ சொல்லிக் கொள்ளட்டும். நாமும் ஏன் சொல்ல வேண்டும்? அப்படிச் சொல்வதினால் Thamiznadu  என்றே ஒன்று இல்லை Tamilnadu என்பதுதான் இருக்கிறது என்றாகிவிடாதா?

என்னுடைய கேரள நண்பர்கள் "ழ'கரம் மலையாளத்திற்கு மட்டுமே உள்ள சிறப்பு. தெலுங்கிலோ, கன்னடத்திலோ மட்டுமல்ல, தமிழிலும் இல்லை. அதனால்தான் தமிழர்கள் எல்லோரும் மளை, தமிள், அளகு, பளம், பளகு (மழை, தமிழ், அழகு, பழம், பழகு) என்று சொல்கிறீர்கள் என்று சொல்கிறார்கள்.

தமிழ் மொழியில் "ழ'கரம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாய் காட்டுவது நமது Tamil nadu  என்ற எழுத்து வடிவம்தான். காரணம், ஆலப்பி Aleppyஎன்று ஆங்கிலேயர் சொன்ன ஊர்ப் பெயரை அவர்கள் ஆலப்புழா

(அப்ஹல்ல்ன்க்ஷ்ட்ஹ) என்றுதான் மலையாள மொழியிலும் ஆங்கில மொழியிலும் எழுதுகிறார்கள். ஏன் தெரியுமா? மலையாளத்தில் "ழ'கரம் இருக்கிறதாம்.

அதேபோல் காலிக்கட் Calicut என்றிருந்ததைக் "கோழிக்கோடு' Kozhikodu என்றுதான் எழுதுகிறார்கள். உங்கள் மொழியில் "ழ'கரம் இருக்கிறதென்றால் பின் ஏன் நீங்கள் Thamizh nadu என்று எழுதுவதில்லை என்கிற அவர்களது கேள்வி நியாயமானதுதானே?

தமிழர்கள் ஆங்கில மொழியின் ஒலிக்கூறுகளுக்கு எதிரானவர்கள் அல்லர். சில ஆங்கிலச் சொற்களை அதன் ஒலிக்கூறு மாற்றமடையாத விதத்திலேயே நாம் கையாள்கிறோம்.

ப்ங்ஸ்ஹ் levy என்ற சொல்லை எடுத்துக்கொண்டால், "லெவி' என்பது ஆங்கிலச் சொல் என்றே பலருக்கும் தெரியாது. ""அவனுக்கு லெவிச்சது அவ்வளவுதான்'' என்பது கிராமத்துச் சொல்.

"ஆலப்பீ' என்பதை "ஆலப்புழா' என்று மலையாளிகள் மாற்றிவிட்டார்கள். நேற்று வரை "பேங்ளூர்' என்று சொன்ன ஆங்கிலேயர்களை இன்று "பெங்களூரு' என்று கன்னடர்களும் சொல்ல வைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள்..?

நமது தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே நாம் கவலைப்படுவோம், அது போதும்.

நன்றி :- தினமனி.  26-05-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger