Home » » தாயே தெய்வம்- சிவ வாக்கியார் தொகுப்பு :-செங்கைப் பொதுவன்

தாயே தெய்வம்- சிவ வாக்கியார் தொகுப்பு :-செங்கைப் பொதுவன்



சிவ வாக்கியார்

உடம்பில்லாத உயிர் ஆகாசத்திலும் இருக்க முடியாது

இடையன் கையில் கோலிருந்தால்தானே ஆடு மேய்க்க முடியும். ஆடும் இல்லை. கோலும் இல்லை. எனவே, மேய்ப்பவனும் இல்லை.. இறைவன் மேய்ப்பவன். நம் உடம்பு ஆடு. நம் உயிர் கோல். உடம்பு இல்லாவிட்டால் உயிரும் இல்லை. எனவே வெட்ட வெளியாகிய ஆகாச வீட்டில் எதுவுமே இல்லை.

ஓடம் உள்ள போதலோ ஓடியே உலவலாம்
ஓடம் உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம்
ஓடுடைந்த போதினில் ஒப்பில்லாத வெளியிலே
ஆடும் இல்லை கோலும் இல்லை ஆரும் இல்லை இல்லையே.   ( 23 )

குறிப்பு : ஓடு -உடல்

மால் என்றும் ஈசன் என்றும் பெயர் வைத்தது மனிதனே

தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறு போல்
செங்கண் மாலும் ஈசனும் சிறந்த திருந்தது உம்முளே
விங்களங்கள் பேசுவீர் விளங்க்குகின்ற மாந்தரே
எங்கு மாகி நின்ற நாமம் நாமம் இந்த நாமமே.                   ( 28 )

குறிப்பு : விங்களங்கள் - போலி விளக்கங்கள்

பிறப்புக்கு முன்பும், பின்பும் நாம் எங்கே ? பார்த்தது யார் ?

பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாறது எங்க்கனே
பிறந்து மண் இறந்து போய் இருக்கு மாறது எங்க்கனே
குறித்து நீர் சொலாவிடில் குறிப்பில் லாத மாந்தரே
அறுப்பனே செவிஇரண்டும் அஞ்ச்செழுத்து வாளினால்            ( 41 )

குறிப்பு : அஞ்செழுத்து நாம் அஞ்சும் எழுத்து "நமசிவாய" "நாராயணாய"
நம.சிவ, ஆயம் நம்முடையது என்று இருப்பது சில ஆயமே. நார் என்றால் அன்பு
( குறள் 833, 958 ) நார் ஆய அண். அன்- அன்பாய் நம்முள் அண்ணியிருப்பவன்.
( அண் - 'அண்ணிப்பான் தாள் வாழ்க' -சிவ புராணம் )
அண்ணனுக்கும் தம்பிக்கும் உள்ள உறவுதான் நாராயணனுக்கும் நமக்கும் இடையேயுள்ள உறவு.

காண முடியாதவர் கடவுள்

உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்ற நல்ல
மருவும் அல்ல காதம் அல்ல மற்ற தல்ல அற்ற தல்ல
பெரிய நல்ல சிறிய நல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரிய தாகி நின்ற நேர்மை யாவர் காண வல்ல வரே.           ( 72 )

கண்ணுக்குள் கடவுள்
மண்ணிலே பிறக்கவும் வழக்கலா துரைக்கவும்
எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும்
கண்ணிலே மணி இருக்கக் கண் மறைந்த வாறு போல்
எண்ணில்கோடி தேவருமிதில் காணார் இழப்பதே.               ( 77 )

குறிப்பு : நம் கண்ணில் இருக்கும் மணியை  நாம் பார்க்க முடியாது.
அப்படித்தான் கடவுள் இருக்கிறார். தேவர்கள் நம் கண்ணுக்குள் இருப்பதை நாம் இழந்து விடுகிறோம்.

எங்கள் கடவுள், உங்கள் கடவுள்
எங்க்கள் தேவர் உங்க்கள் தேவர் என்று இரண்டு தேவரோ
இங்கு மங்கு மாயிரண்டு தேவரே இருப்பரோ
அங்கு மிங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்க வாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே. ( 128 )

குறிப்பு : வங்க்க வாரம்: கடவுளுக்குப் பங்க்கு போட்டுக் கொடுத்து 'இது செய்' என்று வரையறை வைப்பவர்கள். கடவுளைத் 'திருமகள்', 'கலைமகள்', 'எனக்கு - உனக்கு' என்றும் பங்க்கு போட்டுக் கொள்பவர்கள்.

தாய்தான் தெய்வம்

அம்மை யப்பன் அப்புநீர் அறிந்ததே அறிகிலீர்
அம்மை யப்பன் அப்புநீர் அரி அயன் அரனுமாய்
அம்மை யப்பன் அப்புநீர் ஆதி யாகி ஆனபின்
அம்மை யப்பன் அன்னை யன்றி யாரும் இல்லை ஆனதே.     ( 141 )_

குறிப்பு : அம்மை பனிக்கட்டி. அப்பன் நீர். பனி நீர் வெப்பத்தால் நீரானதா?  நீர் குளிர்ந்து பனியானதா ? செவ்வாய்க் கோளில் பனிக்கட்டி உருகாமல் கிடப்பதை அறிவியலாளர்கள் கண்டுள்ளனர். பனிக்கட்டி, நீர், நீராவி போன்றவர் அரி, அயன், அரன்
,திருன்மால் பனிக்கட்டி. பிரமன் நீர். சிவன் நீராவி. மூன்றுமே ஆதி. ஆதியே அன்னை.-தாய்..

உடல்தான் கோயில்

கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்க்கள் ஏதடா
ஞான மான பள்ளியில் நன்மையாய் வணங்க்கினால்
காய மான பள்ளியில் காணலாம் இறையையே.                ( 180 )

குறிப்பு: ஞானப் பள்ளியில் படித்தால் காயத்தில் ( உடலில் ) பள்ளி கொண்டிருக்கும் இறைவனைக் காணலாம்.

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' திருமூலர் -1823

மோன ,மெளன, ஞானம்

காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகாள்
ஈயிலாத தெனை உண்டு இராப் பகல் உறங்க்குறீர்
பாய் இலாத கப்பல் ஏறி அக்கரைப் படுமுனே
வாயினால் உரைப்பதாகும் மோன மெளன ஞானமே.             ( 245 )

குறிப்பு: மோனம் என்பது செயலற்றிருப்பது 'தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது' மெளனம் என்பது மட்டும் பேசாமல் இருப்பது.                                      

நன்றி :-

தெய்வ அலை -தெய்வீக அலை

தொகுப்பு :- சித்தர் வழியில் செங்கைப் பொதுவன்
                        புலவர், முனைவர்,M.A.M.Ed.,Ph.D.
                        வீடு  22,  தெரு13, தில்லை கங்கா நகர்,
                         சென்னை- 600 061

கிடைக்குமிடம்:- வசந்தா பதிப்பகம்,
                                   மனை என் 9, கதவு எண் 26, ஜோசப் குடியிருப்பு,
                                   ஆதம்பாக்கம், சென்னை- 600 088
                                  தொலை.பேசி::- 2253 0954, 2253 3667. 

1 comments:

  1. ஓடம் உள்ள போதலோ ஓடியே உலவலாம்
    ஓடம் உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம்
    ஓடுடைந்த போதினில் ஒப்பில்லாத வெளியிலே
    ஆடும் இல்லை கோலும் இல்லை ஆரும் இல்லை இல்லையே

    நூல் அறிமுகம் படிக்கத் தூண்டுகிறது ஐயா.
    அவசியம் வாங்கி படிக்கின்றேன். நன்றி

    ReplyDelete

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger