மும்பை நகரின் புற நகர்ப் பகுதியான அந்தேரியில் உள்ள வாய் மற்றும் பாத
ஓவியக் கலைஞர்கள் இந்த வருடமும் அழகழகான வண்ணங்களில் வாழ்த்து மடல்கள்
தயாரித்து ஒரு கொத்து அனுப்பியிருப்பதைப் பெற்றுக்கொண்ட போது, அவர்களின்
திறமை முதலில் அசரத்தான் வைத்துவிட்டது.
சாதாரணமாகக் கைகள் இருந்தால்
மட்டுமே எல்லோராலும் ஓவியம் வரைந்துவிட முடியாது. அதற்குத் தனிக் கலைத்
திறன் வேண்டும். கற்பனை வளம் வேண்டும். வண்ணங்களின் கலவை தரும் முடிவை முன்
கூட்டியே அறிந்திருக்க வேண்டும்.
ஆனால் இந்த ஓவியக் கலைஞர்களுக்குக்
கைகள் இல்லை வரைய; ஆனால் கற்பனை வளம் இருக்கிறது நிறைய. "கையில்லாமல்
கற்பனைத் திறனைக் காட்ட முடியுமா?'
"முடியும்' என்று
காண்பித்திருக்கிறார்கள் இவர்கள். இவர்கள் என்றால் - என். இளங்கோவன், கே.
நரசிம்மலு, ரவீந்திரன், ஷீலா சர்மா, ஸ்ரீலேகா மண்டலபள்ளி, லதா லன்ட்கே,
நதீம் ஷேக், மனோஜ் பிங்காரே, மஞ்சி ரமானி, டி. சுனிதா, ஹரிராம் கோஹ்லி,
கேசவன் ஜனார்த்தனன், என். ராமகிருஷ்ணன், கணேஷ்குமார், நேமிநாத் பால்கே,
ஜெயந்த் ஸ்ரீஹோரா, ஜெச்பர் புலிகாத்தோடி, ஸ்வப்னா அகஸ்டின் ஆகியோர்.
இவர்களில்
சிலர் வாயில் பிரஷைக் கவ்வியபடி ஓவியம் வரைகிறார்கள். சிலர் பாத
விரல்களில் பிரஷைப் பிடித்து ஓவியம் வரைகிறார்கள். ஆனால் கையால் வரைந்த
ஓவியம் போலத்தான் எல்லாமே இருக்கின்றன. ஸ்வப்னா அகஸ்டின் இந்த வண்ண
அழைப்பிதழ்களை அனுப்பும்போது எழுதியிருக்கும் கடிதம் முழுதையும் தன்
பாதத்தில் உள்ள விரல்களைப் பயன்படுத்தித்தான் எழுதியிருக்கிறார். எல்லார்
எழுத்தையும் போலத்தான் இருக்கிறது அதுவும்.
""எனக்குக் கைகள் இல்லை. அதனால் நான் ஓவியம் வரைய முடியாது' என்றார்கள். நான் அவர்கள் வார்த்தையைப் பொய்யாக்கிவிட்டேன்...'' என்றுதான் கடிதத்தின் ஆரம்ப வரிகள் இருக்கின்றன.
""எனக்குக் கைகள் இல்லை. அதனால் நான் ஓவியம் வரைய முடியாது' என்றார்கள். நான் அவர்கள் வார்த்தையைப் பொய்யாக்கிவிட்டேன்...'' என்றுதான் கடிதத்தின் ஆரம்ப வரிகள் இருக்கின்றன.
""இந்த
சந்தர்ப்பத்தில்தான் இந்த வாழ்த்து அட்டையை உபயோகிக்க வேண்டும் என்று
நாங்கள் தயாரிக்கவில்லை. எந்த விழாவுக்கும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
என்கிறார் ஸ்வப்னா. ஆறு வண்ண அட்டைகள் கொண்ட ஒரு முழு செட்டுக்கு ரூ.495-
விலை வைத்திருக்கிறார்கள். எங்களுக்கு தர்மம் செய்ய வேண்டாம். இதை
வாங்கினால் போதும்'' என்பதுதான் இவர்கள் வேண்டுகோள், குறிக்கோள் எல்லாம்.
எந்தப் புகழ் பெற்ற முன்னணி ஓவியருக்கும் சவால் விடுவது போல் அமைந்திருக்கிறது மஞ்சி ரமானி உதடுகளால் வரைந்திருக்கும் ஓவியம். இந்திய விமானப்படையில் இருந்த போது ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாகக் கழுத்திற்குக்கீழ் செயலிழந்து போய்விட்ட இளங்கோவன் உதடுகளால் ஓவியம் வரைய ஊக்கம் கொடுத்தவர்கள் சினேகிதர்களும், அவரின் குடும்பத்தினரும்தான்.
ஸ்ரீலேகாவுக்குப் பிறவியிலேயே கைகளும், கால்களும் செயலிழந்துவிட்டன. இவர் வரைவதும் உதட்டு ஓவியங்கள்தாம். சிறுவயதில் "ஹை-வோல்டேஜ்' ஒயரைத் தெரியாமல் தொட்டுவிட்ட ஓவியர் கேசவனின் கைகளும் பாதங்களும் செயல்படாது போயின. உதடுகளில் பிரஷைக் கவ்வி ஓவியம் வரையத் தொடங்கிவிட்டார்.
ஜெயந்த் ஷிஹோராவை அப்துல் கலாம்
பாராட்டி பரிசு அளித்திருக்கிறார். மூளை வளர்ச்சி குன்றிய ராமகிருஷ்ணன் சில
காலம் மறு வாழ்வு இல்லத்தில் இருந்தார். பின்னர் ஓவியங்களில் ஆர்வம்
ஏற்பட்டு, பாதத்தால் வரையத் தொடங்கினார். பல ஓவியக் கண்காட்சிகள்
நடத்தியிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
நரசிம்முலுவும்
செரிப்ரல் பால்ஸியால் பாதிக்கப்பட்டவர். அவர் வரைவதும் பாதத்தின்
விரல்களால்தான். போலியோவால் கால்களும் கைகளும் செயல்படாது போன ரவீந்திரன்,
சோர்ந்து போகவில்லை. தூரிகையை உதட்டில் பொருத்திக்கொண்டு வரைந்து தள்ள
ஆரம்பித்தார்.
மனோஜ் பிங்க்ரே தனது பத்தாவது வயதில் ஒரு பஸ் விபத்தில் தன் இரண்டு கைகளையும் இழந்தார். ஆனால் நம்பிக்கையை இழக்கவில்லை. நுண்கலையில் பட்டம் பெற வேண்டும் என்ற தன் கனவை நனவாக்கினார். "ராஷ்ட்ரிய பாலஸ்ரீ' விருதை குடியரசுத் தலைவர் மாளிகையில் பெற்றுக்கொண்டார். இவர் வரைந்திருக்கும் மகாத்மா காந்தி ஓவியம் கண்ணை ஈர்க்கிறது.
சுனிதாவுக்கு "மஸ்குலர் அட்ரபி' தாக்கிய பிறகு, கைகளும் கால்களும் செயலிழந்து சக்கர நாற்காலியில் நகர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் மன வலிமையோடு தன் குறையை எதிர்கொண்டார். உதடுகளின் உதவியால் அவர் தூரிகையிலிருந்து ஓவியங்கள் பிறந்தன. அமிதாப் பச்சனை வண்ண ஓவியமாகத் தீட்டி அவருக்கே வழங்கியிருக்கிறார் மஞ்சி ரமானி. அச்சு அசலாக அமிதாப் ஓவியத்தில் பளபளக்கிறார்.
வாழ்த்து மடல் மட்டுமல்ல; பரிசுப் பொட்டலங்களுக்கு லேபிள், புத்தகங்களில் படித்துவிட்டு இடையே நிறுத்தும் பக்கத்தில் வைக்க பதினேழு வகை "புக்மார்க்' என்று இவர்கள் கற்பனை வளம் பல வடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறது.
கைகளும் கால்களும் இருக்கிறவர்கள் சாதனைகள்
புரிவதில் புதிது எதுவும் இல்லை. தங்கள் கற்பனையை மட்டுமே காண்பித்தால்
போதும். ஆனால் கைகளும்,கால்களும் இழந்து கற்பனை மட்டும் வளமாக இருக்கும்
இந்த இளைய தலைமுறையினரின் தன்னம்பிக்கை நம்மை அசர வைக்கிறது. இவர்களை வாழ
வைக்கிறது
"இந்தியன் மௌத் அண்ட் புட் பெயின்டிங் ஆர்ட்டிஸ்ட்ஸ்'
என்ற இந்த
அமைப்பு
தீப்தி கிளாசிக், சுரேன் ரோடு,
அந்தேரி கிழக்கு,
மும்பை 400 093
முகவரியில் இயங்கிவருகிறது.
இவர்களின் தொலைபேசி எண் 022-40098877.
வாழ்த்து அட்டைகள் வாங்குகிறவர்கள்,
வாழ்த்தவும் செய்வார்கள்,
வாழவும் வைப்பார்கள்!
நன்றி :- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி , 04- 08-2013
0 comments:
Post a Comment