நமச்சிவாயக் கவிராயர்இவர் பாவநாசம் அருகில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்தவர். மாதவ சிவஞான யோகியின் தந்தையாகிய ஆனந்தக்கூத்தரின் உடன்பிறந்தவர். பாவநாசம் உலகம்மை மீது பேரன்பு கொண்டு நாள்தோறும் வழிபட்டு வந்தவர். ஒருமுறை உலகம்மை அவருடைய மகளாக வந்து உணவு படைத்தாளாம். கவிராயர், நோய்வாய்ப்பட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது, உலகம்மை தடுத்து அருள்புரிந்தார் என்றும் கூறுவர். இவர், உலகம்மை பிள்ளைத்தமிழ், உலகம்மை கலித்துறை அந்தாதி, கொச்சகக் கலிப்பா, சந்தவிருத்தம், சிங்கை சிலேடை வெண்பா முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
சுவிசேடக் கவிராயர்
தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் எனப்படும் இவர், தஞ்சை சரபோஜி மன்னரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். இவர் சுவார்ட்ஸ் ஐயரிடம் கல்வி பயின்றவர். இவரும் சரபோஜி மன்னரும் சுவார்ட்ஸ் ஐயரின் ஒருசாலை மாணாக்கர்கள். இவர் தமிழ்ப் பாடல்களில் அதிகம் இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு பாடல்கள் இயற்றியதால் இவருக்கு "சுவிசேடக் கவிராயர் தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார்' எனப் பட்டம் வழங்கப்பட்டது. இவர் நோவா பேழை, பெத்தலேகம் குறவஞ்சி ஆகிய கவிதைத் தொகுதிகளை இயற்றியுள்ளார்.
சம்புலிங்கபுரம் திருவண்ணாத கவிராயர்
இவர் சம்புலிங்கபுரத்தில் வாழ்ந்தவர். சங்கரன் கோயில் கோமதியம்மை பதிகம், கோமதியம்மை தோத்திரப் பாமாலை, சித்தி விநாயகர் தோத்திர மாலை, பிரசன்ன விநாயகர் தோத்திரம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
பெரும்புலவர் இராமாநுஜக் கவிராயர்
இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கும், ஆண்டாளின் திருப்பாவைக்கும் விரிவுரை எழுதியுள்ளார். மகாத்மா காந்தி காவியத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மேலும் 24க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
செல்லக்குமார கவிராயர்
இவர் வேட்டைக்காரன்புதூர் (கோவை) சரவணப் பெருமாளின் மகன். "சரவண மாலை' என்னும் நூலை இயற்றியுள்ளார்.
இராமரத்னக் கவிராயர்
இவர் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவர். "ஆழ்வார்திருநகரி இராமரத்தினக் கவிராயர்' என்றே அழைக்கப்பட்டார். இவர், பெரிய திருவடிக் கவிராயரின் மகனாவார். "குருகை மாலை' என்ற நூலை இயற்றியுள்ளார்.
நன்றி :-ஞாயிறு கொண்டாட்டம்-தினமணி-15-09-2013
0 comments:
Post a Comment