தஞ்சை பெரியகோவில் கடந்த 1010-ம் ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்த கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அமெரிக்கா யுனொஸ்கோ நிறுவனம் அறிவித்து உள்ளது.
இந்த கோவிலுக்கு உள்நாடுகளில் இருந்து மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்காண சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலுக்கு மறைந்த நடிகர் சிவாஜிகணேசன் வெள்ளையம்மாள் என்ற 1 வயது பெண் யானையை தானமாக வழங்கினார்.
அதில் இருந்து இந்த யானை இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வெள்ளையம்மாள் யானைக்கு தற்போது வயது 63 ஆகிறது.
வயது முதிர்வு காரணமாக கடந்த 7 வருடமாக பின்புறம் உள்ள வலது காலில் மூட்டு வலி ஏற்பட்டது. இதனால் யானையால் படுக்க முடியாமலும், தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தது.
அதனால் யானை நின்று கொண்டும், சுவற்றில் சாய்ந்து கொண்டும் தூங்கி வந்தது. கடந்த சில வருடத்திற்கும் முன்பு காலில் ஏற்பட்ட மூட்டு வலியை குணப்படுத்த கேரளாவிற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
அங்கு டாக்டர் கிரிதாஸ் தலைமையில் மூட்டு வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வெள்ளையம்மாளை தஞ்சை பெரியகோவிலுக்கு கொண்டு வந்தனர். டாக்டர்களின் ஆலோசனைப்படி வெள்ளையம்மாளுக்கு உணவு வழங்கப்பட்டது. எனினும், அவ்வப்போது வெள்ளையம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து தஞ்சை கால்நடைத்துறை உதவி இயக்குநர் டாக்டர் லூர்துசாமி தலைமையில் அவ்வப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் யானை கட்டிட மண்டபத்தில் நின்ற நிலையில் ஒரு புறமாக லேசாக சாய்ந்தது. இதனை பார்த்த யானை பாகன் பாஸ்கர் ஓடி வந்து யானைக்கு 'செக்காமலி' என்ற எண்ணையை தடவி விட்டார். எனினும், வெள்ளையம்மாளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இது குறித்து யானை பாகன் பாஸ்கர் டாக்டர் லூர்துசாமிக்கும், அரண்மனை தேவஸ்தானத்திற்கும் தகவல் கொடுத்தார். டாக்டர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். அப்போது வெள்ளையம்மாளின் வாயில் இருந்து ஒரு பல் விழுந்தது. சிறிது நேரத்தில் வாயில் இருந்து லேசாக ரத்தம் கொட்டியது. காலை 9 மணி அளவில் வெள்ளையம்மாள் யானை மரணமடைந்தது. இந்த தகவல் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் காட்டு தீ போல் பரவியது. பக்தர்கள் மற்றும் பொது மக்கள் விரைந்து வந்து வெள்ளையம்மாள் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.
இதையடுத்து அரண்மனை தேவஸ்தான நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து வெள்ளையம்மாளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து கால்நடைத் துறை உதவி இயக்குநர் டாக்டர் லூர்து சாமி கூறியதாவது:-
வெள்ளையம்மாளுக்கு 50 வயது நிறைவடைந்ததிலிருந்து உடல் நலக்குறைவு இருந்தது. கேரளாவிற்கு கொண்டு சென்றும் சிகிச்சை அளித்தோம். கேரளா யானை சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனைப்படி உணவு வழங்கப்பட்டது. காலில் வலி ஏற்படும் போது 'செக்காமலி' எண்ணையை உடலில் பூசி வருவோம்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் உடல் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டது. அப்போதும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் வெள்ளையம்மாள் இன்று காலை 9 மணி அளவில் பரிதாபமாக இறந்தது. வெள்ளையம்மாளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் நிர்வாகிகள் ஆலோசனைப்படி உடல் அடக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்
நன்றி :- மாலைமலர்-14-09-2013
0 comments:
Post a Comment