Home » » நவீன துச்சாதனான இராஜபக்சேக்கு உரிய தண்டனை கிடைக்குமா ? - பழ.நெடுமாறன்

நவீன துச்சாதனான இராஜபக்சேக்கு உரிய தண்டனை கிடைக்குமா ? - பழ.நெடுமாறன்


இலங்கையின் வடக்கு மாநிலத்தில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஈழத் தமிழர்கள் சிங்களக் கட்சிகளை அடியோடு புறந்தள்ளியுள்ளார்கள்.

மாகாணசபையில் உள்ள 36 இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 28 பேர் பெருவெற்றி பெற்றிருக்கிறார்கள். இதன் காரணமாக மேலும் இருவரை உறுப்பினர்களாக நியமனம் செய்து கொள்ளும் உரிமையும் கிடைத்திருக்கிறது.

 இராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு ஏழு இடங்களும் இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைத்திருக்கின்றன.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஏற்கெனவே குடியேற்றப்பட்ட சிங்களரைத் தவிர கடந்த நான்கு ஆண்டு காலத்தில் மேலும் ஏராளமான சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். சொந்த வீடுகளில் இருந்தும் ஊர்களில் இருந்தும் தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஏராளமானவர்கள் நாட்டை விட்டே வெளியேறி விட்டனர்.

தமிழர் பகுதிகள் முழுவதிலும் சிங்கள இராணுவ முகாம்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. வந்தேறிகளான சிங்களக் காடையர் இராணுவ பக்கபலத்துடன் தமிழர்களைத் தாக்கியும் மிரட்டியும் வந்தனர். குறிப்பாக போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். தேர்தலுக்கு முதல் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆனந்தி எழிலன் என்னும் வேட்பாளரின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மட்டுமல்ல, இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழர் பகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் சிங்களக் கட்சிகள் போட்டியிட்டது இல்லை. அவர்களின் எடுபிடிகளான தமிழர்களையே தங்களின் வேட்பாளர்களாக சில தொகுதிகளில் நிறுத்தி படுதோல்வியைச் சந்தித்தார்கள்.

ஆனால் இம்முறை வடக்கு மாகாண சபை தொகுதிகள் அனைத்திலும் இராஜபக்சே தனது வேட்பாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி என்ற பெயரில் நிறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவரான இரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியும் பல இடங்களில் போட்டியிட்டது.

 பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்குக் காரணமான முன்னாள் இராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும் போட்டியிட்டது.

மொத்தம் பதிவான 4,50,574 வாக்குகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3,53,595 வாக்குகளைப் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 82,838 வாக்குகளையும், இலங்கை முஸ்லிம் காங்கிரசு 6,761 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 3,062, பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி 170 வாக்குகளையும் பெற்றன.

பதிவான வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டணி 78.48 சதவீத வாக்குகளையும், முஸ்லிம் காங்கிரசு 1.5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

இராஜபக்சேயின் கூட்டணி உட்பட அனைத்து சிங்களக் கட்சிகளும் இணைந்து 20.02 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளன. தமிழர் பகுதியில் தடம் பதிக்க முயன்ற சிங்களக் கட்சிகளை வாக்குரிமை என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் விரட்டியடித்துள்ளனர்.

உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக, வடக்கு மாகாண சபைக்கு தேர்தலை நடத்த இராஜபக்சே முன்வந்தார். இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கக் கூடிய தமிழ் மக்கள், வாக்குச் சாவடிகளுக்கு வருவதற்கே அஞ்சுவார்கள். எனவே தனது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதைக் காட்டி உலக நாடுகளைத் திசை திருப்பலாமென இராஜபக்சே திட்டமிட்டார்.

திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட தமிழர்களின் அரசியல் உரிமைகள், அவர்களின் பிரதேச ஒருமைப்பாடு, மனித உரிமைகள் பறிப்பு, போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்துதல் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு அவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் அளிக்கப்பட்டு விட்டதாக தம்பட்டம் அடிக்க இராஜபக்சே திட்டமிட்டார்.

 குறிப்பாக இந்த தேர்தலில் தன்னுடைய சிங்களக் கூட்டணி வெற்றி பெறுமானால் அதைக் காட்டி தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ள எழுச்சியையும் அதற்கு மதிப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அரசின் சூழ்நிலையையும் மாற்றி விடலாம் என அவர் கருதினார்.

ஆனால் அவரது நோக்கங்கள் யாவற்றையும் தமிழ் மக்கள் தங்களின் தீர்ப்பின் மூலம் முறியடித்துள்ளனர். இராஜபக்சேயுடன் எல்லா வகையிலும் இணக்கமுடன் அரசியல் நடத்தியாக வேண்டும் என்ற நிர்பந்தம் அடியோடு தகர்க்கப்பட்டு அவருக்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் அளித்த இந்த தெளிவான தீர்ப்பு இராஜபக்சேக்கு எதிரானது மட்டுமல்ல. இந்திய அரசுக்கும் உலக நாடுகளுக்கும் ஓர் உண்மையான செய்தியைத் தெரிவித்துள்ளது.

கடந்த நான்காண்டு காலத்தில் தமிழ் மக்கள் சந்தித்த இனப்படுகொலை, மனித உரிமைகள் பறிப்பு, பாரம்பரிய நிலங்கள் இழப்பு, சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட அவலம், அடிமைகளாக வாழ வேண்டிய பரிதாபம் போன்ற கொடுமைகளிலிருந்து அந்த மக்களை விடுவிக்க வேண்டிய ஐ.நா. அமைப்போ அல்லது சர்வதேச மனித உரிமை அமைப்புகளோ எதுவும் செய்ய முன்வராமல் கைகளைப் பிசைந்துக் கொண்டு நின்றன.

பாஞ்சாலியின் கூந்தலைப் பிடித்து இழுத்து அவளை அரச அவைக்கு துச்சாதனன் கொண்டு வரும் வழி நெடுக நின்ற மக்கள் எப்படியிருந்தார்கள் என்பதை பாரதி தனது "பாஞ்சாலி சபத'த்தில் பின் வருமாறு பாடுகிறான்.

என்ன கொடுமை
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன்
தன்னை மிதைத்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்,
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?

சபைநடுவே தான் துகிலுரியப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்தி தன் மானத்தைக் காக்க யாரும் முன்வராத நிலையில் பாஞ்சாலி, சபதம் ஒன்றை மேற்கொண்டாள். துச்சாதனன் மற்றும் துரியோதனன் ஆகிய இருவரின் இரத்தத்தைக் கலந்து பூசி அதன் பின்பே தனது கூந்தலை முடிக்கப் போவதாக சூளுரைத்தாள். பாரதப் போரின் முடிவில் அதை நிறைவேற்றினாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அதைப்போல நவீன துச்சாதனான இராஜபக்சே தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளையும் அட்டூழியங்களையும் தடுத்து நிறுத்தவோ, கண்டிக்கவோ அல்லது தண்டிக்கவோ முன் வராமல் உலக சமுதாயம் வேடிக்கை பார்த்து நின்ற போது, ஈழத் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு மாகாண சபை தேர்தலில் அளித்த தீர்ப்பு இராஜபக்சேக்கு எதிரானது மட்டுமல்ல, உலக நாடுகளின் விழிகளைத் திறக்க வைத்தத் தீர்ப்புமாகும்.

இது வெறும் மாகாண சபை தேர்தல் முடிவல்ல. அந்த மக்களிடையே நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் தீர்ப்பாகவும் இது கருதப்பட வேண்டும்.
காஷ்மீர் தனக்கே உரியது என பாகிஸ்தான் உரிமை கொண்டாடியபோது அன்றைக்கு பிரதமராக இருந்த நேரு காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு காணலாம் என ஐ.நா. பேரவையில் உறுதி கூறினார்.

ஆனால் காஷ்மீர் சட்டமன்றத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி பெருவெற்றி பெற்றது. காஷ்மீரிகள் அளித்த இந்தத் தீர்ப்பையே பொது வாக்கெடுப்பின் தீர்ப்பாக கருத வேண்டுமென நேரு உலக நாடுகளுக்குக் கூறினார்.

கிழக்குப் பாகிஸ்தான் என்றழைக்கப்பட்ட கிழக்கு வங்கத்தில் பாகிஸ்தான் இராணுவ கெடுபிடிகளுக்கு இடையே நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தத் தீர்ப்பை வங்க மக்களிடம் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பாகக் கருத வேண்டுமென அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்டு செயல்பட சர்வதேச சமுதாயம் தவறிய சூழ்நிலையில், இந்திய இராணுவத்தை அனுப்பி அந்த மக்களின் விடுதலைக்கு துணை புரிந்தார்.

1977-ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்தல்களிலும் தமிழர்கள் தங்களின் விருப்பம் என்ன என்பதைத் தெளிவாக அறிவித்துள்ளனர். இந்த மாகாணசபை தேர்தலிலும் அதே தீர்ப்பை அவர்கள் அளித்திருக்கிறார்கள்.

உலக சமுதாயம் இனிமேலாவது உண்மையை உணர்ந்து அவர்களின் வாழ்வுரிமையை மதிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் முன் வர வேண்டும்.

இதுவே இத்தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் உலகிற்கு அளித்திருக்கும் செய்தியாகும்.

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger