தீபாவளி கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கும் மயில் ராயன் கோட்டை என்றழைக்கப்படும் எஸ்.மாம்பட்டி கிராமம்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ். மாம்பட்டி ஊராட்சி கிராம மக்கள் 53 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையைப் புறக்கணித்து வருகின்றனர்.
மயில்ராயன்கோட்டை என்று அழைக்கப்படும் எஸ்.மாம்பட்டி ஊராட்சி வானம் பார்த்த பூமியாகும். இங்கு சுமார் 3,500 பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, சத்திரப்பட்டி, எம்.வலையப்பட்டி, கிளுகிளுப்பைப் பட்டி, திருப்பதிபட்டி, கச்சப்பட்டி, தோப்புப்பட்டி, இந்திராநகர், கலிங்குபட்டி ஆகிய ஊர்கள் அடங்கியுள்ளன.
இக்கிராம மக்களின் வாழ்வாதாரமே விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான். விவசாயம் தொடங்கும் காலத்தில் தீபாவளி வருவதால் அனைவரின் பொருளாதாரத்திலும் ஏற்றத்தாழ்வு நிலவிவருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மாம்பட்டி கிராமத்தின் அப்போதைய அம்பலக்காரர் சேவுகன்அம்பலம், முன்னாள் அம்பலக்காரர்களோடு விவாதித்தார். எல்லோரும் மாற்றுக் கருத்துக்கு இடம் அளிக்காமல் 1959இல் ஊர்க் கூட்டம் கூட்டி, ஊராட்சிக்குள்பட்ட 12 கிராமங்களிலும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று வரை தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடாமல் புறக்கணித்து வருகின்றனர்.
இதுகுறித்து சேவுகன் அம்பலம் மகன் சபாபதி அம்பலம் கூறுகையில், எனக்கு திருமணமான ஆண்டுதான் தீபாவளித் திருநாள் கைவிடப்பட்ட ஆண்டு. இந்தியாவே கொண்டாடும் ஒரு பண்டிகையை ஒரு கிராமம் நிறுத்துவதா என்ற கேள்விகளை தூக்கியெறிந்து, மற்ற கிராமங்கள் கொண்டாடும் போது நாம் கொண்டாடவில்லை என்றால் ஊருக்கு இழுக்காகுமோ என்ற போலி சித்தாந்தங்களை உடைத்தெறிந்து, சூழ்நிலைக்கும் இயற்கை அமைப்பிற்கும் ஏற்ப வாழ்ந்து கொள்வதுதான் சரி என்று தீர்மானித்தோம். அதன்படி இன்றுவரை வாழ்ந்து வருகிறோம்.
மேலும் சேவுகன்அம்பலம் உலகநாதன் கூறுகையில், விவசாயங்கள் மறைந்து வெளிநாட்டு வருமானத்தில் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏற்பட்டாலும் அன்று கிராமங்கள் கட்டுப்பட்டு நின்றது போல எங்கள் தலைமுறையிலும் கட்டுப்பாடு காக்கப்படுகிறது. இனிவரும் தலைமுறையும் இதனைக் கடைப்பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
மேலும், இக்கிராமங்களில் வெள்ளாடு வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது ஏன் என்று வினவும் போது மரம், செடி, கொடிகள் காக்கப்படவே தடை செய்யப்பட்டுள்ளதுஎன்றுகூறுகின்றனர்.
தினமணி - 28 - 10 -2013
0 comments:
Post a Comment