நிகழாண்டுக்குரிய சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு ஜெர்மனி பேராசிரியர் பீட்டர் ஷோல்ஸþக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சீனிவாச ராமானுஜன் ஆய்வுப் பாதையில் தனிப்பட்ட முறையில் ஈடுபாடு காட்டி அதில் பாராட்டத்தக்க அளவுக்குப் புதிய கருத்துகளை வழங்கும் இளம் கணிதவியல் அறிஞர்களுக்கு இப்பல்கலைக்கழகம் 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இப்பரிசை வழங்குகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் அறிஞருக்கு 10,000 அமெரிக்க டாலரை பரிசாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்குரிய வயது வரம்பு 32 என வரையறுக்கப்பட்டது. அந்த வயதில் தான் ராமானுஜன் வியக்கத்தக்க சாதனையைப் புரிந்தார்.
இந்தப் பரிசு கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமானுஜன் மையத்தில் நிகழாண்டு டிச. 21-22 ஆம் தேதியில் நடைபெறவுள்ள பன்னாட்டு எண் கோட்பாடு மற்றும் கலாய் பிரதியீடு கருத்தரங்கில் வழங்கப்படும்.
பேராசிரியர் ஷோல்ஸ் புரட்சிகரமான புதுமைக் கருத்துகளை எல்லாம் பல்வேறுபட்ட துறைகளில் வழங்கியிருக்கிறார். எண் கணிதம், அல்ஜீப்ரா சார்ந்த வடிவக் கணிதம், தன் வடிவப் படிவக் கோட்பாடு ஆகியவற்றில் தனித்துவக் கருத்துக்களைக் கூறியுள்ளார். கலாய் பிரதியீடுகளில் அரிய செய்திகளைச் சொல்லியிருக்கிறார்.
முதுநிலை ஆய்வேட்டிலேயே புதிய நிரூபணங்களைத் தந்துள்ளார். அவருடைய அணுகுமுறை போற்றும் வகையில் வித்தியாசமாக இருப்பதோடு முந்தைய அணுகுமுறைகளைவிட எளிமையானதாகவும் உள்ளன. இதுவரை விடை காணமுடியாத வினாக்களுக்கெல்லாம் தீர்வு கண்டுள்ளார்.
இவர் ட்ரெஸ்டனில் 1987 ஆம் ஆண்டு டிசம்பரில் பிறந்தார். கணித மேதை ராமானுஜத்தின் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட ஆண்டில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 25 வயதைத் தாண்டிய இவர் உலகிலேயே மிகவும் மதிக்கத்தக்க கணிதவியல் வல்லுநராகத் திகழ்கிறார் என்பது பாராட்டுக்குரியது.
நிகழாண்டுக்குரிய சீனிவாச ராமானுஜன் பரிசுக் குழுவில் பேராசிரியர் கிருஷ்ணசுவாமி அல்லாடி (குழுத் தலைவர் - புளோரிடா பல்கலைக்கழகம்), காத்ரீன் பிரிங்மேன் (கோலோன் பல்கலைக்கழகம்), ரோஜர்ஹீத் ப்ரவுன் (ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்), டேவிட் மாசர் (பேசல் பல்கலைக்கழகம்) பேரிமசூர் (ஹார்வர்டு பல்கலைக்கழகம்), கென்ரிபே (கலிபோர்னியா பல்கலைக்கழகம்), வார்னரர் (க்வீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம்) ஆகியோர் இடம் பெற்றனர்.
தினமணி, அக்டோபர், 1, செவ்வாய், 2013
0 comments:
Post a Comment