தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்கவுள்ளார்.
அதேவேளையில், அந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வரா? மாட்டாரா? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இலங்கைக்குத் தான் அடுத்தமாதம் செல்லவிருப்பதை, தொலைக்காட்சி பேட்டின் ஒன்றிம் மூலம் குர்ஷித் உறுதி செய்துள்ளார்.
ஆனால், இந்த மாநாட்டுக்கான இந்தியப் பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரில் யார் தலைமை வகிக்கப்போகிறார்கள் என்பது இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது.
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு விஷயத்தில், கனடாவை இந்தியா பின்பற்றப் போவதில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
"நான் அங்கு (இலங்கை) செல்வேன் என்பதைச் சொல்ல முடியும். இலங்கைத் தமிழர் பிரச்சினை எங்களுக்கு மிகவும் முக்கியமாகவே உள்ளது" என்று 'டைம்ஸ் நெள' தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ள குர்ஷித், பிரதமர் பயணம் பற்றி சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
"இலங்கையுடன் இணைந்து செயல்படவில்லை என்றால், நிறைய விஷயங்களைச் செய்ய முடியாமலேயே போயிவிடும். தமிழக மீனவர் பிரச்சினை மேலும் அதிகரிக்கும். அப்படி இருக்கும்போது எப்படி இலங்கையைத் தவிர்க்க முடியும்?" என்றார் குர்ஷித்.
முன்னதாக, இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானத்தில், தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது.
இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும். இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தி இந்து - 27 - 10 -2013
0 comments:
Post a Comment