மிளகாயில் நெய்யின் மணத்தைப் புகுத்தி புதுவை விவசாயி வெங்கடபதி சாதனை படைத்துள்ளார். இவர் வேளாண் துறையில் செய்த சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருது பெற்றவர். புதுவகையான இந்த மிளகாய் தொடர்பாக அவரது மகள் ஸ்ரீலட்சுமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மிளகாய் வகைகளில் பரமக்குடி, சிவகாசி, நாட்டு ரகம், குடைமிளகாய், பஜ்ஜி மிளகாய் உள்ளன. தற்போது நெய் மணம் கமழும் மிளகாயை உருவாக்கியுள்ளோம். சாம்பார், ரசம், குழம்பு வைக்கும்போது இந்த வகை மிளகாய் ஒன்றை நான்காக பிளந்து சேர்த்தால், கொதி நிலையில் நெய்மணத்தை நன்கு உணரலாம்.
இந்த சிறப்பு இயல்பை இதர மிளகாய் இனங்களிலும் புகுத்த ஆராய்ச்சி செய்துவருகிறோம். நெய்மணம் கமழும் மிளகாய் விதைகளில் காமா கதிர்வீச்சு செய்ய, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையம் அனுமதி தந்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் மிளகாயின் நிறம், இலை ஆகியவற்றில் மாற்றம் கொண்டுவரலாம். மஞ்சள், பச்சை, வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய நிறங்களில் மிளகாயை உருவாக்க முடியும் என ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவற்றை உருவாக்க முயற்சிப்போம்.
தமிழக, புதுவை மக்களுக்கு 2 மாதங்களுக்கு இலவசமாக இந்த மிளகாயை தரும் எண்ணம் உள்ளது. தொடர் ஆராய்ச்சியின் மூலம் அதிகளவு மிளகாய் செடிகளை வளர்த்து வருகிறோம். மேலும் சமையலில் குழம்பு வைக்கும்போது இந்த மிளகாயை பயன்படுத்தினால், மிளகாய் தூளை குறைத்துப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக வெங்கடபதி கூறுகையில், "மலை மீதுதான் இவ்வகை மிளகாய்கள் வளரும். ஆனால், சாதாரணப் பகுதிகளிலேயே தற்போது இந்த மிளகாய் விளைகிறது. முதலில் இந்த மிளகாய் மனிதர்களுக்கு உகந்ததா என பலவித ஆராய்ச்சிகள் செய்து, நாங்கள் சாப்பிட்டுப் பார்த்த பிறகே மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்" என்றார்.
தி இந்து -29-10-2013
0 comments:
Post a Comment