சென்னையின் புது வரவான சிறிய பேருந்துகள் (ஸ்மால் பஸ்) பற்றி தெரியாமல்
பேருந்து நிறுத்தங்களுக்கு வியாழக்கிழமை காலை வந்த பயணிகளுக்கு அந்த குட்டி
பேருந்துகள் இன்ப அதிர்ச்ச யாக காத்திருந்தன. பேருந்து, ஷேர் ஆட்டோக்கள்
கூட செல்லாத குறுக்குத் தெருக்களிலும் மினி பேருந்து செல்வதால் இதற்கு
மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.
சென்னையில் 20 வழித் தடங்களில் 50 சிறிய
பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் 50 சிறிய பேருந்துகள் அடுத்த
மாதத்திலிருந்து இயக்கப்படும்.
சிறிய பேருந்தின் (சிற்றுந்து) பயண அனுபவத்தை பயணிகளிடம் கேட்பதற்காக தி
இந்துவும் அதில் பயணித்தது. மேத்தா நகரிலிருந்து காலை 10.30 மணிக்கு “s33”
சிறிய பேருந்து, அசோக் பில்லருக்கு வந்தது.
பேருந்து நிறுத்தத்தில் பலர்
இதனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். பேருந்து எங்கெங்கு நிற்கும் என்று
விசாரித்த பிறகே பேருந்தில் ஏறினர். இதில் அதிக பட்ச கட்டணம் ரூ.9.
அரை மணியில் அலுவலகம்
மேத்தா நகரில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்யும்
அருள்மொழி, செய்தித்தாள் மூலம் இந்த வழித் தடத்தில் சிறிய பேருந்து செல்வதை
அறிந்துக் கொண்டார். தினமும் வள்ளுவர் கோட்டம் வரை 17D பேருந்தில்
செல்வார். அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் மேத்தா நகர் செல்வார். இனி மாறி மாறி
போகாமல் சிறிய பேருந்தில் நிம்மதியாக பயணிக்கலாம் என்கிறார்.
சேமிப்பு
“பேருந்தில் சென்றால் ஒரு நாள் செலவு ரூ.60 வரை ஆகும். ஆட்டோவில் சென்றால்
ரூ.180 வரை ஆகும். இதில் அதிகபட்சமாக ரூ.16 தான் ஆகிறது. இது சுருக்கு
வழியில் செல்வதால் சென்னை போக்குவரத்து நெரிசலிலும் அரை மணிக்குள் அலுவலகம்
போகிறேன் என்கிறார்.
வரப்பிரசாதம்
“ஆட்டோவில் செல்ல முடியாத ஏழை மக்களுக்கு இது வரப்பிரசாதம்” என்கிறார் ஜோசப் என்ற முதியவர்.
வீடு வரை பேருந்து பயணம்
30 வருடமாக மேத்தா நகரில் வசிக்கும் மாயா சேகரும் இதில் பயணம் செய்தார்.
“எப்போதும் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மேத்தா
நகர் வரை நடந்து செல்வேன். இன்று வீடு வரை பேருந்து பயணம்
கிடைத்தது”என்கிறார் மாயா சேகர். அவர் அசோக் பில்லரில் 17D அல்லது 17E
பேருந்துக்காக காத்திருந்த போது இந்த மினி பேருந்து வந்ததால் முதல் முறையாக
இந்த பேருந்தில் பயணிக்கிறார்.
இந்த சிறிய பஸ்கள், இயக்கப்படாத நங்கநல்லூர், கொளத்தூர் போன்ற
பகுதிவாசிகள், தங்களது பகுதிகளுக்கும் இந்த குட்டி பஸ்ஸை இயக்க வேண்டும்
என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி இந்து - 25 - 10 - 2013
0 comments:
Post a Comment