மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி. பலப்பல பணக்கார சாமியார்களை சரித்திரம் முழுதும் நாம் பார்த்து வந்திருக் கிறோம். ஐடி துறை மாதிரி, சினிமாத் துறை மாதிரி, இன்னபிற சுக சௌகரியங்களுக்குக் குறைவற்ற சகலமான துறைகளையும்போல சாமியார் துறையும் துணைக்கண்டத் தில் செழித்திருக்கும் ஒன்று.
தொடக்கத்தில் இது குறித்த அதிர்ச்சி அலைகள் இருந்தா லும், காலப்போக்கில் நமக்கு அதெல்லாம் பழகிப் போனது. என்ன இப்போ? அந்த ஜீவாத்மா வுக்கு அஷ்டலட்சுமி அனுக்கிரகம் பூரணமாக சித்தித்திருக்கிறது. சௌக்கியமாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று எளிதாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டோம். பத்தாத குறைக்கு பக்தர்கள் தம்மாலான நன்கொடைகளாலும் குளிரக் குளிரக் குளிப்பாட்டி குஷிப்படுத்தி வருவது இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆனால் ஜெர்மானியர்களுக்கு நம்மளவுக்கு அனுபவம் பத்தாது. மேற்படி விஷயத்தின் அதிர்ச்சி மதிப்பை உள்வாங்கவும் ஜீரணிக்கவும் அவர்கள் ரொம்பக் கஷ்டப்படுகிறார்கள். எத்தனை சங்கடம், எவ்வளவு அவமானம், எப்பேர்ப்பட்ட பேரிடி! ஒரு பிஷப் இப்படிச் செய்வாரா? ஒரு பிஷப் இப்படியொரு வாழ்க்கை வாழ நினைப்பாரா! இது தகுமா? முறையா? தருமம்தானா?
நம்பத்தான் முடியவில்லை. ஆனால் அதுதானே நடந்திருக்கிறது? வாடிகனில் இருந்தபடிக்கு போப்பாண்டவர் பேப்பர் கத்தியை வீசிவிட்டாரே? இடத்தை காலி பண்ணு, சீட்டுக்கு வேறு ஆள் வருவார் என்று சொல்லிவிட்டாரே. ஊழல் வழக்கில் சிக்கி எம்.பி. பதவியை இழக்கும் அரசியல்வாதி போலல்லவா இந்த ஃப்ரன்ஸ் பீட்டர் தெபார்ஸ் வான் எல்ஸ்த் (Franz Peter Tebartz van Elst) தமது பிஷப் பதவியை இழந்திருக்கிறார்! சரித்திரம் மறக்கப் போவதில்லை. வாடிகன் வரலாற்றில் இன்னொரு அழுக்குப் பக்கமாக இதுவும் நிரந்தரமாக இடம்பெறப் போகிறது. வேறு வழியில்லை. ஜீரணித்துத்தான் தீரவேண்டும்.
விவகாரம் என்னவென்றால் மேற்படி பிஷப் பெருமகனார் தமது கட்டுப்பாட்டுக்குள் வருகிற தேவாலயங்களின் கஜானாவில் இருந்து தமது சொந்த உபயோக சௌகரியங்களுக்காகச் சுமார் 43 மில்லியன் டாலர்கள் எடுத்திருக்கிறார் என்று போப்புக்கு சேதி போயிருக்கிறது. இதெல்லாம் நமது அரசியல்வாதிகள் இதுகாறும் செய்திருக்கும் ஊழல் அமௌண்ட்டைக் காட்டிலும் ரொம்பப் பெரிது. இத்தனாம்பெரிய தொகை ஒரு தனி மனிதனுக்கு எதற்கு? அப்படி என்ன ராஜ வாழ்க்கை வாழ்ந்துவிடுகிறார் ஒரு பிஷப்?
ஆராய்ச்சி செய்து அறிக்கை அளிப்பதற்கு சிலபேரை நியமித்தார் போப். இதில் ப்ரொஃபஷனல் ஆடிட்டர்களும் அடக்கம். இந்தக் குழுவானது மேற்படி பிஷப்பின் வீட்டுக்குப் போய் 'கள ஆய்வு' மேற்கொண்டு அளித்த அறிக்கையில் கிடைக்கிற சில விவரங்கள் சுவாரசியமானவை. பிஷப் பெருமகனாரின் வீட்டில் ஓர் அதிநவீன பாத்ரூம் இருக்கிறது. அந்த பாத்ரூமை நிறுவுவதற்கான செலவு மட்டும் 15000 யூரோக்கள். (நமது பண மதிப்பின்படி பன்னிரண்டு லட்சத்து எழுபதாயிரத்தி சொச்சம் ரூபாய்.) பிஷப்பைப் பார்க்க எத்தனையோ முக்கியஸ்தர்கள் வருவார்கள். கூடி உட்கார்ந்து பேசுவதற்காக ஒரு கான்ஃபரன்ஸ் டேபிள் செய்திருக்கிறார் பிஷப். தங்கத்திலேயே செய்திருந்தால்கூட அத்தனை விலை ஆகியிருக்குமா தெரியாது. அதன் மதிப்பு 25000 யூரோ. அவரது பர்சனல் பிரார்த்தனைக் கூடமும் அதன் அலங்கார ஜோடனைகளும் மட்டுமே 2.9 மில்லியன் யூரோக்கள் செலவு பிடித்திருக்கக்கூடியது என்கிறது இந்த ஆடிட் குழு அறிக்கை.
மனிதர் வாழ்ந்திருக்கிறார். தேவ ஊழியம் அவருக்கு சகல சம்பத்துகளையும் அள்ளிக் கொடுத்திருக்கிறது. இதனால் உத்தமோத்தமர்களான இதர ஜெர்மானிய பிஷப்புகளுக்குத்தான் பெரும் தர்மசங்கடம். அத்தனை பேரும் விரைவில் சொத்துக் கணக்குகளைக் காட்டியாகவேண்டிய இருப்பியல் நெருக்கடிக்குத் தள்ளப்படுவார்கள் என்று தெரிகிறது.
மேற்படி உல்லாச பிஷப் பெருமகனாருக்கு இப்போது இந்தப் பதவி இல்லாது போனாலும் விரைவில் வேறொரு பதவி வாய்த்துவிடும் என்றுதான் சொல்கிறார்கள். இது அவமானம் என்று நினைக்காத பட்சத்தில் அவர் சௌக்கியத்துக்கு எந்தக் குறையும் வரப்போவதில்லை. ஆனால் பொதுவில் ஜாதி, மத, இன பேதமில்லாமல் உலகெங்கும் குரு பீடங்களை அரிக்கத் தொடங்கியிருக்கும் ஊழல் வைரஸ் உள்ளபடியே கவலை தருகிறது.
ஆண்டவனுக்கு எதற்கு FTP க்ளையண்ட்டெல்லாம்? நேரடி டீலிங் போதும் என்று ஜனங்கள் நினைக்கும் காலம் வரும்வரை இப்படியான இம்சை அரசர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
தி இந்து - 25 - 10 -2013
0 comments:
Post a Comment