தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவள்ளூரை அடுத்த காக்களூரில் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி. வெயிலில் காயவைப்பட்டுள்ள விளக்குகள். படங்கள்: கே.வெங்கடேஷ்
பருவமழைக் காலங்களில் ஏரிகளில் மணல் எடுக்கக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவால் மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி, கார்த்திகை பண்டிகைகள் நெருங்குவதையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
தீபாவளி, கார்த்திகை என்றாலே நினைவுக்கு வருவது அகல் விளக்குகள்தான்.
கார்த்திகை மாதத்தில் வீடுகளில் அகல் விளக்கை ஏற்றுவது வழக்கம். இந்த பண்டிகைகள் தற்போது நெருங்கியுள்ளதால், அகல் விளக்குகள் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
நலிந்து வரும் தொழிலாளர்கள்:பண்டிகை போன்ற சமயங்களில் மட்டுமே மண்பாண்டத் தொழிலாளர்கள் லாபமடைந்து வருகின்றனர்.
முந்தையக் காலங்களில் ஏரிகள், குளங்கள் ஆகியவற்றிலிருந்து மண்பாண்டத் தொழிலாளர்கள் மணல் எடுத்து, வீடுகளில் இருப்பு வைத்து மண்பாண்டப் பொருள்களை தயார் செய்து சந்தைப்படுத்துவர்.
அதனால் அப்பொருள்களின் விலையும் குறைவாக இருந்தது. மேலும் மக்களிடம் மண்பாண்டங்களை உபயோகிக்கும் பழக்கமும் அதிகளவில் இருந்தது.
இதனால் அத்தொழிலாளர்களுக்கு நல்ல லாபமும் கிடைத்து வந்தது.
இந்நிலையில் நாளடைவில் மக்களிடம் மண்பாண்டப் பொருள்களின் உபயோகம் குறைந்தது.
அதே நேரம் பல ஏரி, குளம், குட்டைகள் அழிக்கப்பட்டு குடியிருப்புப் பகுதிகளாகவும் மாறியது.
இதனால் நெடுந்தொலைவில் உள்ள பகுதிகளுக்குச் சென்று மணல் எடுத்து வர முடியாமல், டிராக்டர், லாரி போன்ற வாகன ஓட்டிகளிடம் பணம் கொடுத்து மணல் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது அரசு குவாரிகளில் இருந்து ஒரு லாரி மணல், ரூ 6 ஆயிரத்து 500 வரை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
இதுபோல் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் மண்ணில் பொருள்கள் செய்து விற்பனை செய்யும் போது பொருள்களின் விலையையும் ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
தமிழக அரசு உத்தரவு...
இதனிடையே, பருவமழைக் காலங்களில் ஏரிகளில் யாரும் மணல் எடுக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மணல் எடுக்க பொதுப்பணித்துறையினர் உரிய ஆய்வு செய்து குவாரிகளை இயக்கினால் மட்டுமே மணல் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் மண்பாண்டத் தொழிலாளர்கள் மேலும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து காக்களூரைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளி ஆறுமுகம் கூறியது:
நாங்கள் பரம்பரை பரம்பரையாக இத்தொழிலை செய்து வருகிறோம். தற்போது சீசனுக்கு ஏற்றவாறு மடக்கு விளக்கு, நெய் விளக்கு, எண்ணெய் விளக்கு என 3 ரகங்களாக தயார் செய்து வருகிறோம். இங்கு செய்யப்படும் விளக்குகள், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள கடைகளிலும், பாரிமுனையில் உள்ள கந்தசாமி கோயில் பகுதியில் உள்ள கடைகளிலும் விற்பனை செய்கிறோம்.
ஒரு மடக்கு விளக்கு ரூ.3 முதல் ரூ.5 வரையிலும், நெய் விளக்கு ரூ.1 முதல் ரூ.1.50 வரையிலும், எண்ணெய் விளக்கு ரூ.1.50 முதல் ரூ.2 வரையிலும் விலை போகிறது.
கடந்த சில ஆண்டுகளாக வட மாநிலங்களிலிருந்து பீங்கான் அகல் விளக்குகள் கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன.
இதனால் எங்களது அகல் விளக்குகளின் விற்பனை சரிவடைந்துள்ளது.
ஏரியில் மண் கிடைக்காததால் தமிழகத்தின் பல பகுதிகளில் எங்கு அதிகளவில் மண் கிடைக்கின்றதோ அங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்ட மண் பானை, அடுப்பு, பூந்தொட்டி, சட்டி ஆகியவற்றை இங்கு வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.
எங்களது சிரமத்தைப் போக்க, தமிழக அரசு மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு எளிய முறையில் மான்ய விலையில் மணல் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
மேலும் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் குடிநீருக்காக மண் பானைகளை பயன்படுத்தவும், அழகுக்காக பூந்தொட்டிகளில் செடிகளை வைக்கவும் அரசு உத்தரவிட வேண்டும்.
இதுதவிர, பள்ளிகள், சத்துணவுக்கூடங்கள் ஆகியவற்றில் மண்பாண்டங்களை பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
இதுபோல் மண்பாண்டங்களின் பயன்பாட்டை அதிகரித்தால் எங்களது வாழ்வாதாரம்உயரும்என்றார்அவர்.
தினமணி, 28 - 10 -2013
0 comments:
Post a Comment