நல்லா இருக்கும்போதே நாலு பேருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. சிலருக்கு சுட்டுப் போட்டாலும் இந்த எண்ணம் வராது. ஆனால், தன்னால் எழுந்து நடக்க முடியாமல் போனபிறகும், ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழலாய் நிற்கிறார் சிவப்பிரகாசம்.
வடலூர் சத்தியஞான சபைக்கு வரு வோருக்கு வள்ளலார் சித்தி பெற்ற இடமான மேட்டுக்குப்பம் திருமாளிகையை நன்கு தெரிந்திருக்கும். இங்குதான் ‘ராமலிங்க வள்ளலார் சர்வ தேச தரும பரிபாலன அறக்கட்டளை’யை நிறுவி, வாழ்க்கையில் புறந்தள்ளப்பட்ட ஜீவன்களுக்கு ஜீவாதாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிவப்பிரகாசம்.
அவரைத் தேடிப் போனபோது, படுக்கையில் படுத்த நிலையிலேயே நம்மிடம் பேசினார். “தம்பி.. பல்லடம் தான் எனக்கு சொந்த ஊரு. பெத்தவங்க வைச்ச பேரு கணேசன். படிச்சது ஒன்பதாம் வகுப்புதான். அதுக்கப்புறம் ஆன்மிகத்துல நாட்டமாகிருச்சு. 19 வயசுல காஞ்சி தொண்டை மண்டல ஆதீன மடத்துல சேர்ந்து சமய இலக்கியங்களை படிச்சேன். படிச்சத வைச்சு சமய சொற்பொழிவுகளுக்கு போக ஆரம்பிச்சேன். அங்க இருந்தப்ப தான் வள்ளலாரின் சன்மார்க்க நெறிப்படி ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. சொற்பொழிவுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைச்சு 1989-ல் இந்த அறக்கட்டளையை தொடங்கினேன்.
சின்னதா ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளை, இப்போது முதியோர், சிறுவர்கள், மனநலம் பாதித்தவர்கள் என சுமார் 100 பேருக்கு நிழலா இருக்கு. 2004-ல் சாலை விபத்தில் சிக்கி எனக்கு முதுகுத் தண்டுவடம் பாதிச்சிருச்சு. அதுக்கப்புறம் எந்திரிச்சு நிக்கவே முடியல; படுத்த படுக்கையாகிட்டேன். அதுக்காக, எங்களை நம்பி வந்த ஆதரவற்ற ஜீவன்களை கைவிட முடியாதே. படுத்த நிலையிலும் சொற்பொழிவுகளுக்கு போய்க்கிட்டு இருக்கேன். எங்களுடைய நிலைமையைப் பார்த்து, பொள்ளாச்சி மகாலிங்கம், கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் கௌரி சங்கர், நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள்.. என இத்தனை நல்ல உள்ளங்களும் அவங்களாவே எங்களது இல்லத்துக்கு உதவி செஞ்சுகிட்டு இருக்காங்க. அதனால் இந்தப் பிள்ளைகளும் பெரியவங்களும் சிரிச்ச முகம் வாடாம இருக்காங்க’’ நிம்மதிப் பெருமூச்சு விட்டவர் தொடர்ந்து பேசினார்.
இங்கு வளர்ந்த பெண் குழந்தைகளை படிக்க வைத்து திருமணமும் செஞ்சு குடுத்துருக்கோம். அவங்க கணவன், குழந்தைகளோட அடிக்கடி எங்கள வந்து பாக்குறப்ப மனசு லேசாகிப் போகும். சொந்த பந்தங்கள் யாரும் இல்லாம இந்த இல்லம் மட்டுமே சொந்தம்னு நினைச்சிட்டு இருந்த அவங்களுக்கும் புதுசா உறவுகள் கிடைச்ச ஒரு சந்தோஷம்.
என்.எல்.சி. ஊழியர்கள் தங்களோட திருமண நாள், பிறந்த நாளுக்கு இங்கே வந்து இந்தக் குழந்தைகளோடும் பெரியவங்களோடும் மணிக்கணக்கா இருந்துட்டு, அவங்களுக்கு சாப்பாடு குடுத்துட்டுப் போவாங்க. அன்னைக்கி முழுக்க இந்தக் குழந்தைகள் முகத்துல அத்தனை சந்தோஷம். என்.எல்.சி. நிர்வாகம் அடிக்கடி இங்கே மருத்துவ முகாம்களை நடத்தி, குழந்தைகளையும் பெரியவங்களையும் கண்ணும் கருத்துமா பாத்துக்கிறாங்க.
இவங்கள பாத்துக்கிறதுக்கு இவ்வளவு பேரு இருக்கிறதால அரசாங்கத்தோட உதவியை நாங்க எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமில்லாம, அரசாங்கம் உள்ள வந்தா அதைத் தொடர்ந்து ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளும் வரும். அதனால நாங்க அரசாங்கத்தை மூவ் பண்ணவே இல்லை. இங்கிருக்கிற பெரியவங்களுக்கு காலம் கடந்துருச்சு. ஆனா, இந்தக் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சுக் குடுக்கணும். இவங்க அத்தனை பேரும் வள்ளலாரின் சன்மார்க்க நெறியைக் கடைபிடிக்கத் தொடங்கிட்டாங்கன்னா போதும்; நிச்சயம் இவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்… நம்பிக்கையுடன் சொன்னார் சிவப்பிரகாசம்.
தி இந்து 22 - 10 -2013
0 comments:
Post a Comment