தலித் மக்களின் வீடுகளில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 83 குழந்தைகள் ஒரு வயது முடிவதற்குள் இறக்கின்றன. தலித் அல்லாதோர் வீடுகளில் இந்த விகிதாச்சாரம் 1,000: 61.
ஐந்து வயதுக்கு உட்பட்ட தலித் குழந்தைகள் 1,000-ல் 39 இறந்துவிடுகின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இந்த விகிதாச்சாரம் 1,000:22.
தலித் குழந்தைகளில் 75% நோஞ்சானாக இருக்கின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இது 49%.
2000 ஆண்டு கணக்குப்படி 66% தலித் குடும்பங்கள் நிலமில்லாதவை. தலித் அல்லாத குடும்பங்களில் இது 33%.
தலித் மக்களில் முக்கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளிகள். இதர சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே இந்த விகிதாச்சாரம் கால்வாசியாக உள்ளது.
- இந்திய சாதிய சமூகம் என்கிற ஒரு பானை சோற்றில், மேலே சொல்லப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒரு சோறு பதம்.
மொத்தப் பானையையும் நீங்கள் பார்வையிட வேண்டுமா? அதற்கு முதலில் பேராசிரியர் சுகதேவ் தோரட்டுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் தலைமையில் 11-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் (2007-12) மத்திய அரசு அமைத்த ‘பட்டியல் சாதியினர் திறன் வளர்ப்புக்கான பணிக் குழு’வின் ஆவணங்கள்தான் அந்தப் பானை.
கருவில் உருவாவது முதல் கல்லறை வரை தலித் மக்களின் வாழ்க்கைச் சூழல், மற்ற சாதியினரைவிடக் கூடுதல் வறுமையில் வாடுவதை இந்த ஆவணங்கள் படம்பிடிக்கின்றன.
பொதுவாக, இந்திய சமூகத்தில் சாதி ரீதியான பொருளாதார ஆய்வுகள் அதிகமாக வருவதில்லை. அத்தகைய கருத்துகள் விவாதிக்கப்படுவதைத் தவிர்க்கவே முயல்கின்றனர். அத்தகைய சூழலை மீறி வந்திருக்கும் இத்தகைய ஆதாரங்கள் இந்தியாவில் உள்ள வறுமை பழங்குடி வறுமை, தலித் வறுமை, பிற்படுத்தப்பட்டோர் வறுமை,உயர் சாதியினர் வறுமை எனப் படிநிலை ஏற்றத்தாழ்வோடு இருப்பதை வெளிப்படுத்துகின்றன.
அதிர்ஷ்டவசமாக, அம்பேத்கர் உருவாக்கி யதால் இந்திய அரசியல் சாசனம் இந்திய மக்களிடையே உள்ள படிநிலை ஏற்றத்தாழ்வை அக்கறையோடு பார்க்கிறது. அதனால்தான் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை ‘அனைத்துக் குடிமக்களுக்கும் சமூகரீதியிலான, பொருளாதாரரீதியிலான, அரசியல்ரீதியிலான நீதி வழங்குவது என்பதுதான் முதல் குறிக்கோள்’என்று கூறுகிறது. தலித் மக்களின் மீது பிற்படுத்தப்பட்ட நிலையும், சமூகரீதியான இயலாமையும் திணிக்கப்பட்டுள்ளதை அரசியல் சாசனம் இனம்கண்டிருக்கிறது. அதனால், அரசியல் சாசனத்தில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், அரசியல் சாசனத்தின் சமூகநீதி, அரசின் செயல்பாடுகளில் வர மாட்டேன் என்கிறது. அரசு இயந்திரத்தில் ஆதிக்க சாதி உணர்வுகள் ஆழமாக வேரோடியிருப்பதுதான் அதற்குக் காரணம். அதனால், தலித் மக்களுக்கான, நல்ல பயன்களைத் தரும் திட்டங்கள் நத்தையைத் தோற்கடிக்கும் வேகத்தில் நகர்கின்றன. அரசுக்கு வெளியே இருந்து வருகிற நெருக்குதல்களும் போதுமான அளவு வலுவானதாக இல்லை.
சாதி அடுக்குகளைத் தக்கவைத்துக்கொண்டே பொருளாதார வளர்ச்சி அடைய இந்திய சமூகம் முயல்கிறது. சாதிய மேல் அடுக்கில் உள்ளவர்களுக்கு மேலும் மேலும் சிறந்த வாய்ப்புகள் கிடைத்து முன்னேறிச் செல்லும்போது, அவர்களால் கைவிடப்படுகிற இடங்களைப் பிடித்து தலித் மக்கள் முன்னேறலாம். அதனால் பிரச்சினை வராது. ஆனால், மேல்தட்டில் உள்ளோருக்குச் சமமாக முன்னேற முயன்றாலோ, அது சாதியின் படிநிலையை மீறுவதாகக் கருதி, தலித் மக்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பது பொதுவான போக்காக இருக்கிறது.
சமூகத்தில் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தலித் மக்கள் உள்ளனர். எனவே, அவர்களுக்கு மற்றவர்களைவிடக் கூடுதல் பயன்கள் அளிக்கப்பட வேண்டும். முதலில் அவர்களின் வறுமை மற்றவர்களின் வறுமையோடு சமப்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகுதான் வறுமை ஒழிப்பைப் பற்றிய விவாதம் அர்த்தமுள்ளதாக இருக்கும். இது தலித் மக்களின் பிரச்சினை அல்ல. இந்திய சமூகத்தின் ஜனநாயகப் பிரச்சினை.
த. நீதிராஜன் - தொடர்புக்கு: neethi88@gmail.com
தி இந்து - 24 - 10 -2013
0 comments:
Post a Comment