யாழ்ப்பாணத்துக்கு வாருங்கள் - வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மன்மோகனுக்கு அழைப்பு
யாழ்ப்பாணத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்து பார்வையிடவேண்டும் என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை பிரதமர் மன்மோகனுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தத்தின்கீழ் வடக்கு மாகாண தேர்தலை நடத்திட இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போருக்கு களமாக அமைந்த இந்த மாகாணத்தில் நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது என்று விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கொழும்புக்கும் வடக்கு மாகாண தலைநகரான யாழ்ப்பாணத்துக்கும் மன்மோகன் வருகை தந்து சம்பந்தப்பட்ட வர்களுடன் பேச வேண்டும் என்றே விக்னேஸ்வரன் விரும்புவதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
சமரசம், அரசியல் அதிகாரப் பகிர்வு, சொந்த இடங்களை விட்டு வேற்றிடம் பெயர்ந்த தமிழர்களை மறு குடியமர்த்துவது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் இந்தியா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என இலங்கை தமிழ் சமுதாயம் எதிர்பார்க்கிறது என்பதையே விக்னேஸ்வரனின் இந்த அழைப்பு பிரதிபலிப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
முன்னதாக, அக்டோபர் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திங்கள்கிழமை கடிதம் மூலமாக அழைப்பு விடுத்துள்ளார் விக்னேஸ்வரன்.
வடக்கு மாகாணத்துக்கு கூடுதல் அரசியல் அதிகாரம் வழங்கவேண்டும் என்று இலங்கைக்கு நெருக்குதல் கொடுத்து வரும் இந்தியா, வாழ்வாதாரம் இழந்து வாடும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுப்பணி, மறு குடியமர்வுப்பணி ஆகிய நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நடைபெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் புகார்கள், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற பிரச்சினைகளை முன்வைத்து, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவேண்டும் என்றதொரு தீர்மானத்தை தமிழக அரசு அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.
இத்தகைய சூழ்நிலையில் இது பற்றி கருத்துக் கூறிய சல்மான் குர்ஷித், இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் அதனால் இந்தியாவுக்குத்தான் இழப்பு. கொழும்புடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் இந்தியா என்ன சாதிக்க முடியும் என்றார்.
கூடுதல் அரசியல் அதிகாரம் கிடைக்க கொழும்புடன் பேச்சுவார்த்தை நடத்திட வடக்கு மாகாண சபை அரசுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் கருதுகின்றனர். இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் இந்தியாவில் முரண்பாடான அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மீனவர் பிரச்சினையில் தலையிடும்படி தமிழக அரசிடம் இருந்து கிட்டத்தட்ட அன்றாடம் மத்திய அரசுக்கு கோரிக்கை வந்தபடி உள்ளது. அதேவேளையில் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டாம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
உணர்ச்சி கொந்தளிப்புகளுக்கு இடம்தந்து உறவை முறித்துக்கொள்வது சரியானதாக இருக்காது. இந்த பிராந்தியத்தில் நெருக்கடியான கால கட்டம் இது. இந்தியாவின் ராணுவ, பாதுகாப்பு நலன்களுக்கும் தேசிய நலன்களுக்கும் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும், இலங்கை யில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தால் மற்றவர்களுக்கு இடம் கொடுப்பது போலாகி விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தி இந்து, 03-11-2013
0 comments:
Post a Comment