தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் வவ்வால்கள் அச்சமடையும் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், பட்டாசே வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கழுப்பெரும்பாக்கத்தில் உள்ள அரசமரம் ஆயிரக்கணக்கான வவ்வால்களின் வாழ்விடமாக உள்ளது. இந்த வவ்வால்களை கிராம மக்கள் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகின்றனர்.
அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் கலைச் செல்வி கிருபாநந்தன் இதுகுறித்துக் கூறும்போது, “எங்கள் கிராமத் தின் பெருமையே இந்த வவ்வால் கள்தான். இரண்டு, மூன்று தலை முறைகளாக இந்த அரசமரத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசிக்கின்றன. முதலில் புளியமரங்க ளில் குடியிருந்த வவ்வால்கள் பின்பு அரச மரத்துக்கு குடியேறின. வவ்வால்களை நாங்கள் நேசிப்பதால், குரங்குகள்கூட மரத்தில் ஏறாமல் பாதுகாத்துவருகிறோம். முக்கியமாக, தீபாவளியன்று இங்கு யாரும் பட்டாசு வெடிப்பதில்லை. தலைதீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைகளிடம் இந்த விஷயம் குறித்து முன்கூட்டியே சொல்லிவிடுகிறோம். அவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.
குழந்தைகள் பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டால் 2 கிலோமீட்டர் தள்ளி அழைத்துச் சென்று அவர்களின் ஆசையை நிறைவேற்றுகிறோம். துக்க நிகழ்வு நடந்தாலும் வவ்வால்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், வெடிச்சத்தம் கேட்காத தொலைவில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது” என்றார்.
இரக்கமுள்ள கிராமத்து மனிதர்கள் வாழும் பகுதிகளைத் தேர்வு செய்து, அந்த கிராமங்களில் குடியேறுகின்றன போலும் இந்த புத்திசாலி வவ்வால்கள்.
தி இந்து - 01-11-2013
0 comments:
Post a Comment