தேவாரமும் திருவருட்பாவும்
தமிழகத்தில் பற்பல சிவநெறிச் செல்வர்கள் காலந்தோறும் அவதரித்து சைவத்தை பரப்புவதில் தலைசிறந்து நின்றார்கள். சிவபெருமான் மீது பக்திபூண்டு வாழ்ந்ததோடு சிவனடியார்களுக்கும் தொண்டு செய்து வாழ்ந்தார்கள்.
திருநாவுக்கரசர் தேவாரத்தில் ஒரு பாடல்:
"சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார்க் கவர்செல்வம் மதிப்போமல்லோம்;
மாதேவர்க் கேகாந்த ரல்லாராகில்
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக் கரந்தார்க் கன்பராகில்
அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே''.
சைவ சமயத்தின் புனிதமான முக்கியக் கோட்பாடு புலால் உண்ணாமை.
மேற்காணும் பாடலின் கருத்து எளிதில் விளங்கும். ""அழுகிப் போன தொழுநோயரானாலும் இறைச்சியை உண்பவரானாலும் சிவபெருமான் மீது பற்று வைத்த பேரன்பராகில் அவரையே யாம் கடவுளாகத் தொழுவோம்'' என்கிறார்.
சிவபக்தி பூண்டவரின் உன்னதமான சிறப்பை இப்பாடல் சிறப்புறக் கூறுகின்றது.
வடலூர் இராமலிங்க வள்ளலாரை அறியாதவர் இலர். சிவபக்தி பூண்ட உன்னத சீலர்.
அவர், தெய்வங்களின் பெயரால் உயிர்க்கொலை செய்வதைக் கண்டு சகிக்காமல் பாடிய ஒரு பாடல் இதோ.
"மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில்
கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை
எழுப்புகின்ற உறுவனேனும்
கருவானை உறவிரங்கா துயிருடம்பைக்
கடிந்துண்ணும் கருத்தனேல் எம்
குருவாணை எமது சிவக்கொழுந்தாணை
ஞானியெனக் கூறொனாதே''
"ஆணைப் பெண்ணாக்கி பெண்ணை ஆணாக்கும் சக்தி பெற்று இறந்தாரை எழுப்பும் சித்து வேலை தெரிந்தவரானாலும் புலால் உண்ணும் குணத்தராகில் அவரை ஞானியெனக் கூற மாட்டேன்'' என்று சிவபெருமான் மீதும் தம் குருவின் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறார்.
திருவருட்பா முழுவதிலும் இந்தக் கொல்லாமைத் தத்துவமும் ஜீவகாருண்யமும்தான் மிகுதியாகப் பாடப்பட்டிருக்கிறது.
மேற்காணும் தேவாரப் பாடலுக்கும் திருவருட்பா பாடலுக்கும் எவ்வளவு வேறுபாடு?
இங்கே முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். இருவரின் கருத்தும் சிவநெறிக் கோட்பாடுதான். ஆனால், அவரவரின் முக்கியமான கருத்தின்படி அவரவர்க்குரிய நெறியில் பாடி மக்களைப் பண்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்பதே உண்மை என்பதை மட்டும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
வெள்ளிமணி, தினமணி
0 comments:
Post a Comment