பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் அதிகாரப்பூர்வமாக யுஜிசி-யின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.
ஏஐசிடிஇ அதிகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், ஏஐசிடிஇ சட்டம் 1987 பிரிவு 2 (ஹெச்)-ன் படி, ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகள் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் என்ற வரையறைக்குள் வராது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கல்லூரிகள் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டின் கீழ்தான் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை யுஜிசி தயாரித்து, கடந்த ஜனவரி 10-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
இந்த வழிகாட்டுதல்களை மத்திய அரசின் அனுமதி பெறுவதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உடனடியாக யுஜிசி அனுப்பியது. இதற்கிடையே, இழந்த அதிகாரத்தை மீண்டும் பெற அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தீவிர முயற்சி மேற்கொண்டுவந்தது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் யுஜிசி அனுப்பிய வழிகாட்டுதலை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது.
இந்த தாமதம் காரணமாக, புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கவும், புதிய பாடங்களைத் தொடங்கவும் யாரிடம் விண்ணப்பிப்பது என்ற குழப்பம் பொறியியல் கல்லூரிகளிடையேயும், கல்வி அறக்கட்டளைகளிடையேயும் நீடித்து வந்தது.
பொறியியல் மாணவர் சேர்க்கையும் நெருங்கி வருவதால், பொறியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களும் உரிய வழிகாட்டுதல்களுக்காக எதிர்பார்த்திருந்தன. இந்நிலையில், யுஜிசி அவசரக் கூட்டத்தை தில்லியில் வியாழக்கிழமை (மார்ச் 13) கூட்டியிருந்தது.
இந்தக் கூட்டத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான யுஜிசி வழிகாட்டுதலுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவசரக் கூட்டத்துக்குப் பின்னர் யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் தொலைபேசி மூலம் "தினமணிக்கு'அளித்த பேட்டி: பொறியியல் கல்லூரிகளுக்கான யுஜிசி வழிகாட்டுதலுக்கு நீண்ட நாள் பரிசீலனைக்குப் பிறகு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்த விவரமும், இறுதி செய்யப்பட்ட யுஜிசி வழிகாட்டுதலும் ஓரிரு நாளில் யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்படும். இதுபோல் மத்திய அரசின் அரசிதழிலும் ஓரிரு நாளில் வெளியிடப்பட்டு விடும்.
மத்திய அரசின் இந்த ஒப்புதல் மூலம், நாடு முழுவதும் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் யுஜிசி-யின் கீழ் வந்துள்ளன என்றார் தேவராஜ்.
ஏற்கெனவே, கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் யுஜிசி-யின் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி
0 comments:
Post a Comment