‘சுதேச சீர்திருத்தமென வெளிவந்திருக்கும் இந்துக்கள் ஜாதி பேதத்தை நீக்கிவிட்டு ஒற்றுமையாக வேண்டும் என வீண்புரளி செய்கிறார்களே ஒழிய நிச்சயமாக ஜாதி பேதத்தை நீக்க பிரயத்தனப்படுபவர்களாக இல்லை. அவர்கள் முக்கியமாக ஜாதி பேதம் விட்டுவிட வேண்டும் என பிரசிங்கிப்பதெல்லாம் பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களாகிய நாலு வர்ணத்தார்கள் மாத்திரம் சேர்ந்து கொள்ளவேதான்.மற்ற தாழ்ந்தவர்கள் என சொல்வோர்களிடம் சமயத்திற்கு மட்டுமே சேர்ந்து போரில் வெற்றிபெற்று சுய ஆதினம் பெற வேண்டும். பிறகு முன்போல தாழ்ந்தவர்களாக அந்த நாலு வர்ணத்துடன் சேர முடியாது என்பது எல்லா சுதேச சீர்த்திருத்தக்காரர்களுடைய கொள்கையேயாம்’’…‘‘தமிழன்’’ பத்திரிகை ஆசிரியர் பண்டிதர் க.அயோத்திதாசர்
1. தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக போராடியது யார்?
திராவிட
இயக்கத்தவர்கள் நீதிக்கட்சியைப் பற்றி எழுதும்பொழுது ‘‘ நீதிக்கட்சி
பதினாறு ஆண்டுகள் இடைவிடாது ஆட்சி நடத்தாமல் இருந்திருந்தால் அந்த
ஆட்சிக்கு 1925 முதல் தம் முழு ஒத்துழைப்பைப் பெரியார் தராமல்
இருந்திருந்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் தலை
எடுத்திருக்கவே முடியாது. வளர்ச்சி அடைந்திருக்கவே மாட்டார்கள்’’
(அடிக்குறிப்பு 1) என்றும் -
‘‘அந்த கால அளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் பலராக இல்லை. தாழ்த்தப்பட்டவருள் அரசியல் அறிவு வாய்க்கப்பெற்றிருந்த ஓரிருவர் நீதிக்கட்சியில் சேர்ந்திருந்தனர்.
தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள்
நீதிக்கட்சி கொடியின் கீழ் அணிவகுத்து நின்றனர். நீதிக்கட்சி
தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக போராடிற்று….நீதிக்கட்சி உயர்ந்த சாதி
இந்துக்களின் பெண்களை பறையர்களுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புவதாக
இடைவிடாது பார்ப்பனர் பிரசாரம் செய்தனர்.
நீதிக்கட்சிக்கு ஆதரவு அளித்து
வந்த உயர்சாதி இந்துக்களிடையே இந்தப் பொறாமைப் பிரசாரம் ஒரு பயன்தராத
நிலையை உருவாக்க முயன்றது. எனினும் பொருட்படுத்தாது நீதிக்கட்சி
தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்தது.
(அடிக்குறிப்பு 2) தாழ்த்தப்பட்டவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட
வேண்டுமென்றும்,போராடுவதற்காகவும் நீதிக்கட்சி உருவாகிற்று.’’
(அடிக்குறிப்பு 3)
தாழ்த்தப்பட்டவர்கள்
பிற சமுதாயத்தினர்க்கு ஒப்ப எல்லா உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என்ற
குறிக்கோளுடன் பிறந்தது நீதிக்கட்சி. நீதிக்கட்சி தோன்றிய காலத்தில்
தாழ்த்தப்பட்டவர் பட்ட துன்பங்களையும் அவர்கள் அடைந்த இன்னல்களையும்
அவர்கள் பெற்ற அவமானங்களையும் எழுதுவதென்றால் அவை இந்நாட்டின் ஒரு அவல
வரலாறாகவே அமைந்துவிடும். அவர்கள் குரலற்றவர்களாகவும் செயலற்றவர்களாகவும்
அப்போது இருந்தார்கள். அவர்களுக்காகப் பேச செயல்பட ஒரே இயக்கமாக
நீதிக்கட்சி தென்னகத்தில் உருவாயிற்று. (அடிக்குறிப்பு 4)
- என்றும் குறிப்பிடுகிறார்கள்.
தாழ்த்தப்பட்டவர்கள்
முன்னேற்றம் குறித்து எழுதவும் பேசவும் பொழுதெல்லாம் ‘நீதிக்கட்சி’ என்ற
அரசை குறித்துத் திராவிடக் கழகத்தவர் முதல் பல எழுத்தாளர்கள் வரை பெருமைப்
பொங்கக் கூறுகிறார்கள்.
இவர்கள் இவ்வாறு எழுதுவதின் நோக்கமென்ன?
தாழ்த்தப்பட்டோர்
சிந்தனையற்றவர்களாவும் செயலற்றவர்களாகவும் இருந்தார்கள் என்றும்,
தாழ்த்தப்பட்டவரிடையே அரசியல் அனுபவமுள்ளவர்களே ஒரு சிலரே என்றும்,
தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமையையும் முன்னேற்றத்தையும் பார்ப்பனரல்லாத
உயர்சாதி இந்துக்களால் வழிநடத்தப்பட்ட நீதிக்கட்சி மற்றும் ஈ.வே.ராமசாமி
நாயக்கராலேயே செய்ய முடிந்தது என்று தாழ்த்தப்பட்டோர்கள் நம்ப வேண்டும்
என்பதே அவர்களுடைய நோக்கமாகும்.
‘‘
பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியினர் தாழ்ந்த சாதியினர் எனப் பாராது
அனைவர்க்கும் இடம் தரும் ‘திராவிடர் ஹோம்’ பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த
சாதியராகிய சி. நடேச முதலியாரால் உருவாக்கப்பட்டது என்பதும் அறிகிறோம்.
உரிமைகள்
தமக்கும் உண்டு என்பது கூட அறியாராய்த் தமது உரிமைகள் எவை என்பதை
அறியாராய் வாழ்ந்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர் உரிமைகளுக்காக இலண்டன்
மாநகரத்தில் திராவிடச் சங்கம் சார்பில் சான்றுரை பகர்ந்தவர்
பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியராகிய சர். ஏ. இராமசாமி முதலியார்
என்பதையும் அறிகிறோம்.(அடிக்குறிப்பு 5)”
இப்படிக் கூறுவதன் நோக்கமென்ன?
இப்படிக் கூறுவதன் நோக்கமென்ன?
பார்ப்பனரல்லாதாரில்
உயர்ந்த சாதியைச் சார்ந்தவர்கள் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்காக
போராடியவர்கள் என்பதை தெரியப்படுத்துவதற்குத்தான்.
ஆனால் உண்மை என்ன?
உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடத்தான் தோன்றியதா?
நீதிக்கட்சி
இல்லாத போது சிந்தனையற்றும் செயலற்றும், உரிமைகள் தமக்கும் உண்டு என்பது
கூட அறியாராய்த் தமது உரிமைகள் எவை என்பதை அறியாராய் வாழ்ந்து
கொண்டிருந்தனரா தாழ்த்தப்பட்டவர்கள்?
தாழ்த்தப்பட்டோரிடையே அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இல்லாது இருந்தார்களா?
நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததா?
நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த சாதனைதான் என்ன?
இந்தக் கேள்விகள் மிக மிக முக்கியமானவைகள். இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றையும் மிக விரிவாகவே நாம் ஆராய்வோம்.
விருப்பு
வெறுப்பு இல்லாமல் ஓர் ஆராய்ச்சி முறையில் நாம் நீதிக்கட்சிப் பற்றியும்,
தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை பற்றியும் இவர்கள் கூறியிருக்கின்ற
கருத்துக்களை ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால் நிச்சயமாகவே இவர்கள்
கூறியிருக்கின்ற கருத்துகள் அப்பட்டமான வரலாற்றுப் பொய்கள் என்பது
புலப்படும்.
தாழ்த்தப்பட்டவர்களின் அரசியல்
தாழ்த்தப்பட்டவர்கள்
எப்பொழுதுமே தங்கள் உரிமைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு
வந்திருக்கின்றனர் என்பதைத்தான் சரித்திரம் நமக்கு சான்று பகர்கின்றது.
1779
– இல் சென்னை நகரத்தின் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கருகில் இருந்த தங்களின்
குடிசைகளை அப்புறப்படுத்துவதை எதிர்த்துக் கிழக்கிந்தியக்
கம்பெனியாருக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு விண்ணப்பம் அளித்தனர்.
1810
– இல் அந்தக் காலத்தில் ‘பறச்சேரி’ என வழங்கிய பகுதியிலிருந்த தங்களின்
குடிசைகளுக்கு விதிக்கப்பட்ட உரிமைத் துறப்பு வரிவிதிப்பை எதிர்த்து
செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த பிரிட்டிஷ் நிர்வாகத்தாருக்கு மனு
அளித்தனர். பிற்காலத்தில் இந்த இடம் ‘பிளாக் டவுன்’ என்று ஆனது.
1870
– இல் ‘ ஆதிதிராவிட மகாஜன சபை’ என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்திக்
கொண்டனர். அது பதிவு செய்யப்படாதது. பின்பு 1892ல் அது பதிவு
செய்யப்பட்டது.
1917
– இல் இந்தியாவுக்கு வந்த மாண்டேகு – செம்ஸ்போர்டு தூது குழுவினரிடம் ஒரு
மகஜரைக் கொடுத்துத் தங்களை ‘ஆதிதிராவிடர்’ என்று குறிப்பிட வேண்டும் என்று
கேட்டுக் கொண்டனர். இந்த மகாஜன சபைவின் செயலாளர் எம்.சி.ராஜா, 1922 – இல்
அப்போதைய ஆளுநர் வெலிங்டன் பிரபுவால் சட்டமன்ற உறுப்பினராக நியமனம்
பெற்றபோது ‘ஆதிதிராவிடர்’ என்ற பெயரைச் சட்டபூர்வமாக ஏற்கச் செய்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்த தீண்டாதோர் ‘ஆதிதிராவிடர்’
எனப்படலாயினர். பின்னர் ஆந்திரம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் இருந்த
தீண்டாதார் முறையே ‘ஆதிஆந்திரர்’, ‘ஆதி கர்நாடகர்’ எனப்பட்டனர்.
1891
– இல் ‘திராவிட மகாஜன சபா’ என்ற பெயரில் ஒரு சங்கத்தை ஏற்படுத்தினர். அதன்
சார்பில் 1-12-1891 – இல் உதக மண்டலத்தில் மாநாடு நடந்தது. அந்த
மாநாட்டில் செட்யூல்டு வகுப்பாருக்கு அரசியல் உரிமைகள், அரசு பணிகளில்
வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், கல்விச் சலுகைகள், சிவில் உரிமைகள்
ஆகியவற்றைப் பெறுவது பற்றிப் பேசப்பட்டது. பின்வரும் பத்து கோரிக்கைகளை
வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.
தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதற்காக ‘பறையன்’ என்று அழைப்பதையும்,
அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதையும் தடுப்பதற்குரிய வகையில் கடுமையான
தண்டனை விதிப்பதற்கு வகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டும்.
2.
தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் காண்பதற்குக் கல்வி மிக அவசியமாகும்.எனவே,
கிராமங்கள் தோறும் தாழ்த்தப்பட்டோரை ஆசிரியர்களாகக் கொண்ட தனியான
பள்ளிகளைத் தாழ்த்தப்பட்டோர் வாழும் கிராமங்கள் தோறும் தொடங்க வேண்டும்.
3.
மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களில் மூவரைத் தேர்ந்தெடுத்து
பட்டப்படிப்புப் படிப்பதற்காக உதவித் தொகை வழங்க வேண்டும்.
4. மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெறுவோர் அனைவருக்கும் அரசு அலுவலகங்களில் வேலை கொடுத்து உதவ வேண்டும்.
5. கல்விக்கும், நன்னடத்தைக்கும் தக்கவாறு அரசாங்க அலுவலகங்களில் நியமனம் அளிப்பதற்கு எவ்வகையான தடையும் இருக்கக் கூடாது.
6.
மாவட்டங்கள் தோறும் நகராட்சிகளிலும், கிராமப் பஞ்சாயத்துகளிலும்
தாழ்த்தப்பட்ட மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வதற்காகத் தாழ்த்தப்பட்ட
மக்கள் சார்பில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு
நியமிக்கப்படுவோர் வரி செலுத்துவோராக இருக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தாமல் கல்வித் தகுதி, நன்னடத்தை ஆகியவற்றைக் கருதி நியமிக்கப்பட
வேண்டும். நகராட்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தில் தாழ்த்தப்பட்டோர்
சார்பில் நியமனம் பெற்ற உறுப்பினர் மற்ற உறுப்பினர்களுக்கு சமமாகவும்
மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும்.
7.
சிறைச்சாலை விதிகள் 464ன் படி சிறைச்சாலைகளில் ‘பறையர்கள்’ இழிந்த
வேலைகளைச் செய்ய வேண்டும் என்று விதித்திருப்பதை நீக்க வேண்டும்.
8.
தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக்கிணறுகள், குளங்கள் ஆகியவற்றில் எவ்வித
தடையும் இன்றித் தண்ணீர் எடுத்து அருந்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
9.
நீதிமன்றங்கள், அரசாங்க அலுவலகங்கள் ஆகிய இடங்களில் மற்ற இந்துக்களோடு
தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லவும், சமமாக உட்காரவும் தற்போதுள்ள
கட்டுப்பாடுகளை ஒழிக்க வேண்டும்.
10.
நன்னடத்தையுள்ள தாழ்த்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டோர் பெரும்பான்மையினராக
உள்ள கிராமங்களில் கிராம ‘முன்சீப்’ பதவியிலும், மணியக்காரர் பதவியிலும்
அமர்த்தப்பட வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கிராமங்களுக்குப்
பார்வையிடப் போகும் போது தாழ்த்தப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து
அவர்களின் குறைகளை கேட்டு நியாயம் வழங்க வேண்டும்.
இந்தத்
தீர்மானங்களையும் கோரிக்கைகளையும் அப்போதைய காங்கிரஸ் கட்சியின்
செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் இவற்றைப் பெற்றுக் கொண்டதற்கு
அத்தாட்சி ரசீது பெறப்பட்டது. ஆயினும், காங்கிரஸ் கட்சியின் சார்பில்
இதற்கான பதில் எதுவும் திராவிட மகாஜன சபாவுக்கு அனுப்பப்படவில்லை.
முஸ்லீம்களின் சங்கமும் இதற்கான பதிலெதுவும் அளிக்க முன்
வரவில்லை.இதைக்குறிப்பிட்டு அந்தக்காலத்தில் பெயர் பெற்ற செட்யூல்டு
வகுப்பு மக்களின் தலைவர் அயோத்திதாசப் பண்டிதர், ‘பிராமணர் காங்கிரஸ்’
என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார், அவ்வாறே முகம்மதியர் சங்கத்தையும்
அவர் கண்டனம் செய்திருக்கிறார்.
1891
– இல் சென்னையிலிருந்த செடியூல்டு வகுப்பாரின் தலைவர்கள் ‘ஆதிதிராவிட
மகாஜன சபா’ என்று இன்னொரு சங்கத்தை ஏற்படுத்தினர். இந்தச் சங்கமும்,
செட்யூல்டு வகுப்பாரின் நலன்களுக்காகப் பாடுபட்டது.
1892
– இல் சென்னை அரசாங்கம் அப்போது பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த
எஸ்.ராகவ ஐயங்காரைச் சென்னை மாகாணத்தில் செடியூல்டு வகுப்பாரின்
முன்னேற்றம் பற்றி விசாரிப்பதற்கு நியமித்தது.
1892
– இல் நடந்த சாதி இந்துக்களின் மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட அயோத்திதாசப்
பண்டிதரும் மற்றும் செடியூல்டு வகுப்பைச் சார்ந்த தலைவர்களும், செடியூல்டு
வகுப்பைச் சார்ந்த பிள்ளைகள் படிப்பதற்குக் கிராமங்களில் பள்ளிக்கூடங்களைத்
திறக்க வேண்டுமென்றும், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் புறம்போக்கு
நிலங்களை ஆங்காங்கே உள்ள செடியூல்டு வகுப்பாருக்கு ஒதுக்கித் தர வேண்டும்
என்றும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினர். சாதி
இந்துக்களின் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மேற்படி தீர்மானங்களை ராவ்
பகதூர் இரட்டைமலை சீனிவாசன் ஒரு மாநாட்டைக் கூட்டி மீண்டும் நிறைவேற்றி
அனுப்பினார். அப்போதைய சென்னை அரசாங்கம் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கோண்டு,
நிலமில்லாத செடியூல்டு வகுப்பாருக்கும் முன்னாள் படை வீரர்களுக்கும்
நிலங்களை ஒதுக்கி அளிக்கவும், பள்ளிகளைத் தொடங்கவும் உத்தரவு பிறப்பித்தது.
( அரசாணை எண்:1010 – வருவாய்த்துறை-நாள்:30.9.1892)
( அரசாணை எண்:1010 அ – வருவாய்த்துறை-நாள்:30.9.1892)
( அரசாணை எண்: (சென்னை) 68 – கல்வித்துறை-நாள்:1.12.1893)
1891
– ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல மாநாடுகளையும் கூட்டங்களையும் செடியூல்டு
வகுப்பு மக்கள் தொடர்ந்து நடத்தி இருக்கிறார்கள். (1891ஆம் ஆண்டில்தான்
ஈவேரா காசிக்குப் புனித பயணம் மேற்கொண்டார்)
தாழ்த்தப்பட்டவர்கள்
தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய கூட்டங்கள், மாநாடுகள் பற்றிய
விபரங்கள் பெரியவர் டி.பி.கமலநாதன் அவர்கள் எழுதிய Mr.K.Veeramani,
M.A,B.L. is Refuted and the Historical Facts about the Schedule Caste’s
Struggle for Emancipation in South India என்ற நூலிலும், பெரியவர் அன்பு
பொன்னோவியம் அவர்கள் எழுதிய உணவில் ஒளிந்திருக்கும் சாதி என்ற நூலிலும் பல
விபரங்கள் விரவிக்கிடக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களின் போராட்டங்களைப் பற்றி
அறிய விரும்புகிறவர்கள் அப்புத்தகங்களைப் படிக்கவும்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக பல பத்திரிகைகளையும் தாழ்த்தப்பட்டவர்கள் நடத்தி இருக்கிறார்கள்.
1869 – சூரியோதயம், 1900 – பூலோக வியாசன்,
1871 – பஞ்சமன்
1877 – சுகிர்த வசனி
1885 – திராவிட பாண்டியன் – ஆசிரியர் : ஜான் ரத்தினம்
1885 – திராவிட மித்திரன்
1886 – ஆன்றோர் மித்திரன் – ஆசிரியர் : வேலூர் முனிசாமி பண்டிதர்
1888 – மகாவிகட தூதன் – ஆசிரியர் : டி.ஐ.சுவாமிக்கண்ணு புலவர்
1893 – பறையன் – ஆசிரியர் : இரட்டைமலை சீனிவாசன்
1898 – இல்லற ஒழுக்கம்
1900 – பூலோக வியாசன் – ஆசிரியர் : தசாவதானம் பூஞ்சோலை முத்துவீரப்புலவர்
1907 – தமிழன் – ஆசிரியர் : க.அயோத்திதாசப் பண்டிதர்
1907 – திராவிட கோகிலம் – சென்னை, செடியூல்டு வகுப்பு மதம் மாறிய கிறிஸ்தவச்சங்கத்தார் வெளியீடு.
1916 – தமிழ்ப் பெண் – ஆசிரியர் : சொப்பன சுந்தரியம்மாள் (அடிக்குறிப்பு 6)
இந்த
இதழ்கள் சாதிக்கொடுமையையும், தீண்டாமையையும் எதிர்த்துப் போராடி
வந்துள்ளன. தமிழன் வார இதழ் இந்த எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆற்றிய பணி
குறிப்பிடத்தக்கது.
இதனால்
செடியூல்டு வகுப்பு மக்கள், குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, வடாற்காடு,
தென்னாற்காடு மாவட்டங்களில் விழிப்புற்றனர். சிவில் உரிமைகளுக்கான
கோரிக்கைகள் எழுந்தன. இவற்றைப் பற்றிய விபரங்கள் செய்தி இதழ்களில்
வெளிவரலாயிற்று.
1902
ஆம் ஆண்டில் கிராம மேய்ச்சல் நிலத்தில் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கும்,
பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பதற்கும் இருந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து
அப்போதைய செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தைச் சேர்ந்த ஒரத்தூர்
கிராம மக்கள் சிவில் உரிமைப் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தை முன்
நின்று நடத்திய பண்டிதர் அயோத்திதாசர் இந்த மக்களின் குறையை அரசாங்கத்தின்
கவனத்திற்குக் கொண்டு வந்தார். தமிழன் இதழிலும் இதைப்பற்றி விரிவான
செய்திகளை வெளியிட்டார்.
ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக தொண்டுமனம் படைத்த தன்னலமில்லாத
பலர் கல்விக் கூடங்களையும், இரவுப் பள்ளிகளையும், மாணவர் விடுதிகளையும்
ஆரம்பித்தனர்.
சென்னை,
வெஸ்லியன் மிஷன் பள்ளியைச் சார்ந்த ஜான் ரத்தினம் பிள்ளை, சென்னை,
பிரம்மஞானச் சபையைச் சார்ந்த கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் துரை, தங்கவயல்
செல்லப்ப மேஸ்திரி, எம்.ஏ.முருகேசம், ஆர்.ஏ.தாஸ், சிதம்பரம் சாமி
சகஜானந்தா, பி.வி.சுப்பிரமணியம், இரத்தினம், திருச்சி வீராசாமி,
எல்.சி.குருசாமி, பி.எஸ்.மூர்த்தி, எம்.பழனிச்சாமி ஆகியோர் இவர்களில்
குறிப்பிடத்தக்க சிலராவர்.
1937ல்
அப்போதைய ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜமேதார் ஆதிமூலம்,
பி.எத்துராஜ், தம்பிசாமி மேஸ்திரி, டி.முனிசாமி பிள்ளை ஆகியோர் முயற்சியால்
வேலூரில் வட ஆற்காடு மாவட்ட ஆதிதிராவிடர் கல்வி அபிவிருத்தி சங்கம்
நிறுவப்பட்டது. 1938 இல் இந்தச் சங்கத்தின் சார்பில் தங்கவயல் ஆர்.ஏ.தாஸ்
அவர்களின் தந்தையார் ராமதாஸ் பெயரில் மாணவர் விடுதி ஒன்று ஏற்பட்டது.
ராணிப்பேட்டையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஜெயராமன், ஏ.சுந்தரம்,
வி.எல்.மோகனம், ஜி.ஜெகன்நாதன், ஜே.வி.ராகவன், கங்காதரன்,
ஆர்.டி.எஸ்.மூர்த்தி, கே.பி.ஆறுமுகம் ஆகியோரின் அரிய முயற்சியால் தாத்தா
இரட்டை மலை சீனிவாசன் மாணவர் விடுதி ஏற்பட்டது.
எம்.கிருஷ்ணசாமி,
ஜே.ஜே.தாஸ், கே.எம்.சாமி, வி.எஸ்.சுப்பையா, ஆதிமூலம், டாக்டர்
சுப்பிரமணியம் ஆகியோரும் பிறரும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக அயராது
பாடுபட்டவர்களாவர்.
இதுமட்டுமல்ல,
மாண்டேகு
குழுவின் அரசியல் சீர்திருத்தத்தைப்பற்றி தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர்கள்
பல கூட்டங்களில் தங்கள் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்து
கொண்டார்கள். நீதிக்கட்சியினர் அக்குழுவினரை சந்திப்பதற்கு முன்பே
ஆதிதிராவிட ஜன சபையார் சந்தித்து விட்டார்கள்.(அடிக்குறிப்பு 7)
நீதிக்கட்சியும்,
ஈவேராவும் தங்களின் உரிமைகளைப் பற்றி சிந்தனை செய்யுமுன்னே
தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி சிந்தித்து அதற்காகப்
போராடியுள்ளனர்.
தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காக தாங்களே போராடிய சரித்திர சான்று இப்படியிருக்க, நீதிக்கட்சி இல்லை என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊமைகளாய் இருந்திருப்பார்கள் என்று கூறுவது அப்பட்டமான பொய் அல்லவா!
தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காக தாங்களே போராடிய சரித்திர சான்று இப்படியிருக்க, நீதிக்கட்சி இல்லை என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊமைகளாய் இருந்திருப்பார்கள் என்று கூறுவது அப்பட்டமான பொய் அல்லவா!
(தொடரும்)
அடிக்குறிப்பு :
1 – 5: நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?, திராவிடர் கழக வெளியீடு
6 – 7: உணவில் ஒளிந்திருக்கும் சாதி, சித்தார்த்தா பதிப்பகம்
நன்றி :-http://www.tamilhindu.com/2010/04/the-other-face-of-justice-party-01/
1 – 5: நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?, திராவிடர் கழக வெளியீடு
6 – 7: உணவில் ஒளிந்திருக்கும் சாதி, சித்தார்த்தா பதிப்பகம்
நன்றி :-http://www.tamilhindu.com/2010/04/the-other-face-of-justice-party-01/
0 comments:
Post a Comment