Home » » வ.உ.சிதம்பரனார் தாம் எழுதிய திருக்குறள் உரையில் செய்துள்ள மாற்றங்கள்

வ.உ.சிதம்பரனார் தாம் எழுதிய திருக்குறள் உரையில் செய்துள்ள மாற்றங்கள்

வ.உ.சிதம்பரனார் அவர்கள் எழுதிய திருக்குறள் அறப்பால் விருத்தியுரை மட்டும் காகிதம், மை, கட்டுநூல் முதலியனவெல்லாம் சுதேசியமே என்ற அடைமொழியுடன் 1935-இல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின் அவர் எழுதிய பொருட்பால், இன்பப்பால் ஆகியவற்றின் உரை கையெழுத்துப் பிரதியாக, அவரது மகன், திரு.சுப்பிரமணியம் மூலமாக பாரி நிலையத்தாரிடம் அளிக்கப்பட்டது. பல காரணங்களால் அச்சிடப்ப்டாமலே இருந்து வந்தது. அவ்வை துரைசாமிப் பிள்ளையின் மருமகர் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இரா.குமரவேலர் கடுமையாக உழைத்து பல குறிப்புரைகளுடன் மிகச் சிறப்பான பதிப்புரைதனை அளித்துள்ளார்கள்.
2008-இல் முதற்பதிப்பு வெளிவந்தது. 2010-இல் தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளது.

திருக்குறள் - அறப்பால் - முன்னுரை - வ.உ.சிதம்பரம் பிள்ளை - தூத்துக்குடி - 09-02-1935 - முன்னுரையில் ஒரு பகுதி.

அறப்பாலில் 76 குறள்களில் என் உரை பரிமேலழகர் உரைக்கு வேறுபடுகின்றது. 12 குறள்களில் என்னுரை அவர் உரையை வெளிப்படையாக மறுக்கிறது. 5 குறள்களில் என் உரை அவர் உரையை வெளிப்படையாகவே ஆமோதிக்கிறது. மீதக் குறள்களில் என் உரையும் அவர் உரையும் ஒத்திருத்தல் கூடும்.

அறப்பாலில் பரிமேலழகர் கொண்டுள்ள மூல பாடங்களுக்கு வேறாக 151 மூல பாடங்களை மணக்குடவரும் மற்றும் மூன்று உரையாசிரியர்களும் கொண்டுள்ளார்கள். பரிமேலழகர் கொண்டுள்ள மூல பாடல்களுக்கு வேறாக 74 மூல பாடல்களை யான் கொண்டுள்ளேன். அவற்றில் 30 பாடல்கள் முந்திய உரையாசிரியர்கள் கொண்டுள்ள பாடங்கள். மீதம் 44 பாடங்கள்தான் யானாகக் கொண்டுள்ள பாடங்கள். அப்பாடங்களை யான் கொண்டதற்குரிய காரணம், அப்பரிமேலழகர் பாடங்கள் ஏடு பெயர்த்தெழுதியோரால் நேர்ந்த பிழைப் பாடங்கள் என யான் கருதியதே.

ஒவ்வொரு புரூபும் என்னால் மூன்று முறையும், மதுர ஆசிரியர் திரு. க. ரா. இராதாகிருஷ்ணையர், பிரசங்க ரத்தினம் திரு.மு. பொன்னம்பலம் பிள்ளை ஆகியோரால் இரண்டு முறையும் படிக்கப்பட்டது. விளைவு “ பிழை திருத்தம்” என்னும் ஒரு பக்கத்தக் கவர்ந்துவிட்டன.

புதுக்கோட்டை மிட்டாதார்-பெரிய நிலச் சுவான்தாரும், அதி தனவந்தரும்,, திருநெல்வேலி டிஸ்டிரிக்டு போர்டு அங்கத்தினரும், திருச்செந்தூர் திரு. சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான கெளரவ தருமகருத்தருமாகிய திரு.அ.செ.சு.கந்தசுவாமி ரெட்டியாரவர்களும், அவர்களது அவிபக்த அருமை மைத்துனரும், திருநெல்வேலி டிஸ்டிரிக்டு போர்டு அங்கத்தினரும், தூத்துக்குடி ஸர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி வைஸ்பிரசிடெண்டுமாகிய திரு. அ.செ. சு. முத்தையா ரெட்டியார் ஆகியோரது பொருளுதவியால்தான் திருக்குறள்- அறப்பால் நூலினை வெளியிட முடிந்தது  (என்பதை நன்றியோடு குறிப்பிடுகின்றார்.)

திருக்குறள் - உரைப்பாயிரம் - உரையாசிரியன் - தூத்துக்குடி  ( ஒரு பகுதி ) 
09-01-1935   

திருக்குறட் சுவடிகளில் பாயிரத்தின் முதல் மூன்று அதிகாரங்களாகக் காணப்படும், “கடவுள் வாழ்த்து”, “வான் சிறப்பு”, ”நீத்தார் பெருமை”  என்னும் மூன்று அதிகாரப் பாக்களும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டவையல்ல என்றும், அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக் காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப்பட்டவை என்றும் நான் கருதுகின்றேன்.
( காரணங்களையும் விளக்குகின்றார். தனிப் பதிவில் காண்க. ).

நம்மவர்களில் பலர் அம்மூன்று அதிகாரங்களும் திருவள்ளுவராலே இயற்றப்பட்டவை என்றே கருதி வருகின்றமையால், அவர் மனம் நோகும்படியாக அம்மூன்று அதிகாரங்களையும் திருக்குறளிலிருந்து நீக்கிவிட யான் விரும்பாதவனாய், அவை இடைக்காலத்தில் வந்து சேர்ந்த பாயிரமென்று யாவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு, அவற்றிற்கு “இடைப்பாயிரம்” என்னும் தலைப்பெயர் கொடுத்துள்ளேன்.

திருக்குறளுக்கு உரை சொல்லியவர்களும் எல்லை மிகுந்தும் எல்லை குறைந்தும் உரை எழுதியவர்களும் பலர் என்பதும், எல்லை மிகாதும் எல்லை குறையாதும் எல்லைப்படி உரை எழுதியவர்கள் பதின்மர் என்பதும்,
“ தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்; பரிமேலழகர், பரிதி, திருமலையர்
மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் வள்ளுவர் நூற்; கெல்லை,யுரையெழுதி னோர்”  என்னும் வெண்பாவால் விளங்கும்.

இவ்வெல்லை உரைகளுள் பரிமேலழகருரையும், மணக்குடவருரையும் அச்சாகித் தமிழ் நாட்டில் நிலவுகின்றன. இவை தவிர , வேறு மூன்று உரைகளும் கையெழுத்துப் பிரதிகளாகத் தமிழ் நாட்டில் சென்னை அரசாங்கக் கையெழுத்துப் புத்தகசாலை முதலிய சிற்சில இடங்களில் காணப்படுகின்றன. அவற்றிற் காணப்படும் சமயக் கோட்பாடு, தமிழ் நடை முதலியவற்றைப் பார்த்து, யான் அவற்றைத் தருமருரை, தாமத்தருரை, நச்சருரை எனக் கருதுகிறேன்.( இவற்றுடன் வ.உ.சி. உரையையும்) சேர்த்து ஐந்து உரைகளிலும் திருக்குறளின் சில அதிகாரப் பெயர்களும் வரிசைகளும் அதிகாரக் குறள்களின் வரிசைகளும் வெவ்வேறாயிருக்கின்றன.

 ( பரிமேலழகர் பதினேழாவது அதிகாரமாக அமைத்தது ’அழுக்காறாமை’ என்பது. இதனை மணக்குடவரும் நச்சரும் அங்கனமே அமைக்க, தருமர் ”அழுக்கறாமை’ என்றும் கொண்டனர். வ.உ.சி. தருமரைப் பின்பற்றி “அழுக்கறாமை” என்னும் தலைப்பினையே தேர்ந்தனர் )

பரிமேலழகருரை அச்சுப் புத்தகத்தின் இல்லறவியலுள் காணப்படுகின்ற ’வெஃகாமை’, ‘பயனில சொல்லாமை’ என்னும் இரண்டு அதிகாரங்களையும் துறவியலுள் சேர்த்தும், 

துறவறவியலுள் காணப்படுகின்ற ‘வாய்மை’, ’கள்ளாமை’ என்னும் இரண்டு அதிகாரங்களையும் இல்லறவியலுள் சேர்த்தும் இருக்கிறேன்.

இஃதன்றியும், நேரிய பொருள் கோடலுக்கு இடையூறாக வரிசையொழுங்கு தவறிக்கிடந்த சிற்சில குறள்களின் வரிசையை ஒழுங்குபடுத்தியுள்ளேன். 

வீடு, இல்வாழ்வார் துறந்தார் ஆகிய இரு திறத்தார்க்கும் உரியதாகலானும், அறத்துப்பாலில் ’வீட்டியல்’ என ஓர் இயல் உண்டென்று யான் கேட்டிருக்கின்றமையானும், 

நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவா அறுத்தல் அகிய நான்கு அதிகாரங்களும் வீட்டியிலிற்குரியனவாகலானும், அவற்றை ’வீட்டியல்’ என்று ஓர் இயலாக அமைத்துள்ளேன்.

என்னுரையில் பொருள் என்னும் சொல்லோடு தொடங்கிப் பதவுரை எழுதியுள்ளேன்; அவ்வுரையில் வருவிக்கப்பட்ட சொற்களை (  ) இவ்வடையாளங்களுள் அமைத்துள்ளேன்; அகலம் என்னும் சொல்லோடு தொடங்கி இலக்கணக் குறிப்பு,வினா - விடை, மேற்கோள், பாட பேதம் முதலியவற்றைக் குறித்துள்ளேன்; கருத்து என்னும் சொல்லோடு தொடங்கிக் கருத்தினைக் கூறியுள்ளேன்.

என் உரையைப் படிக்கத் தொடங்குபவர்களில் முன் இலக்கண ஆராய்ச்சி இல்லாதார், முதன் முறை படிக்கும் போது பொருளையும் கருத்தையும் மாத்திரம் படிக்குமாறும், நூல் முழுவதையும் ஒருமுறை படித்து முடித்து நூலை இரண்டாம் முறை படிக்கும்போது அகலத்தையும் சேர்த்துப் படிக்குமாறும் வேண்டுகிறேன்.

"ஓரா தெழுதினே னாயினு மொண்பொருளை.
ஆராய்ந்து கொள்க வறிவுடைடார் சீராய்ந்து,
குற்றங் களைந்து குறை பெய்து வாசித்தல்,
கற்றறிந்த மாந்தர் கடன்” என்பதும்,


‘அருந்ததிக் கற்பினாள் தோளும் திருந்திய,
தொல்குடியில் மாண்டார் தொடர்ச்சியும் - நூலின்,
அரிலகற்றுங் கேள்வியார் நட்புமிம் மூன்றும்,
திரிகடுகம் போலு மருந்து”

என்பதும் முந்திய உரையாசிரியர்கள்  சில குறள்களில் வேறு வேறு பாடங்கள் கொண்டிருப்பதும், திருக்குறளின்  மூல பாடங்களில் புகுந்திருந்த எழுத்துப் பிழைகளையும் சொற்பிழைகளையும் திருத்தும்படியான துணிவை எனக்குத் தந்தன.

திருச்செந்தூர்த் திருமுருகப் பெருமான் சந்நிதியில் திருக்குறள் உரை நூலை அரங்கேற்றிய அரிய தகவலையும் உரைப்பாயிரத்தில் உரைத்துள்ளார், வ.உ.சி. அவர்கள்.

வ.உ.சி. தோற்றம் ;- 05-09-1872           மறைவு :- 18-11-1936

1935-இல், வ.உசி. எழுதிய திருக்குறள் உரை 2008-இல்தான் அச்சுக்கு வந்தது என்பது தமிழர்களின் வினைப்பயனே. இருப்பினும் கைப்பிரதிகளைப் பாதுகாத்து வைத்திருந்த அவரது மகன் வ.உ.சி. சுப்பிரமணியன்,  பதிப்பிக்க முயற்சித்த பாரி செல்லப்பனார், பதிப்பித்த அவரது மகன் அமர்சோதி, பதிப்பாசிரியர் பணியைச் செவ்வனே செய்துள்ள முனைவர் இரா.குமாரவேலன் ஆகியோரை நன்றியுடன் நினைவு கொள்வோம்.

திருவள்ளுவர் இயற்றியது 1300 குறட்பாக்கள்தான் என்று  வ.உ.சி. கருதுவதற்குரிய காரணங்களையும் , அவர் அமைத்துள்ள  வரிசைமுறைகளையும் பிறிதொரு வலைப்பதிவில் காண்போம்.

பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை-108 தொலைபேசி 25270795

1 comments:

  1. இதுவரையிலும் வஉசி பற்றிய முக்கிய குறிப்புகளையும் பற்றிய விபரங்களையும் ஆவணமாக தொகுத்து எழுதவேண்டுகின்றேன்.

    ReplyDelete

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger