நலங்கிள்ளி
“மெல்லத் தமிழ் இனிச் சாகும்
என்றொரு பேதைச் சொன்னான்’’
என்று மனம் குமறிப் பாடினான் பாரதி. ஆனால் இன்று மெல்லத் தமிழ் இனிச் சாக
திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் சில மேதைகள்.
அரசு அலுவகங்களிலிருந்தும், வழக்காடு மன்றங்களிலிருந்தும், வழிப்பாட்டு
இடங்களிலிருந்தும், இசை மன்றங்களிலிருந்தும்
தள்ளிவைக்கப்பட்டிருக்கும் தமிழ். அது புழங்கும் ஒரே இடமாக இருக்கும் அரசுப்
பள்ளிகளிலிருந்தும் வெளியேற்றப்படும் நிலைக்கு உள்ளாகி இருக்கிறது.
கடந்த ஆட்சியில் மாநகராட்சிப் பள்ளிகளில் ஆறாம் வகுப்புகளிலிருந்து ஆங்கில
வழிப்பாடப் பிரிவை கொண்டு வந்தார்கள். எந்தப் பிரச்சினை ஆனாலும் தி.மு.கவுக்கு
எதிரான நிலை எடுக்கும் அ.தி.மு.க இந்த ஆங்கிலவழி கல்வி சிக்கலில், திமுக
நிலைப்பாட்டை மேலும் வலுபடுத்தும்விதமாக, இந்த
கல்வி ஆண்டு முதல் 3500 அரசு தொடக்கப் பள்ளி களில் முதல்
வகுப்பிலிருந்து ஆங்கிலவழி கல்விப் பிரிவை
நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
“இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என்ற முழக்கங்களோடு களம் புகுந்து நஞ்சுண்டு
தீக்கிரையாகி, துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி மொழி காத்த தமிழ்ச் சமூகத்தை இன்று தமிழ்
ஒழிக, ஆங்கில வாழ்க
என்ற மன நிலைக்கு மாற்றிய சூழல் எது என்ற வினாவைக் தொடுக்கும் நேரத்தில் அதற்கான
விடையை தக்கச் சான்றுகளோடு விரிவாக அளிக்கிறார் தோழர் நலங்கிள்ளி. தமது “ஆங்கில மாயை’’ என்ற நூலில்.
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் ஆங்கிலத்தின் முற்போக்கு பகுத்தறிவா? மூட நம்பிக்கையா? என்ற தலைப்பில் 12 இதழ்களுக்கு
எழுதிய தொடர் கட்டுரையின் விரிவாக்கமே இந்நூல்
.
.
இந்நூல் குறிப்பாக, 1960 பிப்ரவரி 15 அன்று விடுதலை இதழில் ஆங்கில வழிக் கல்வி ஏன்
தேவை என்பதை வலியுறுத்தி பெரியார் எழுதிய கட்டுரை யையும். தோழர் ஆனைமுத்து அவர்கள்
தொகுத்த பெரியார் சிந்தனைகள் பக்கம் 1777 இல் உள்ள ஒரு பத்தியையும் ஆய்வுக்கு எடுத்துக்
கொள்கிறது.
தனது தரப்பு வாதங்களை நிலைநாட்டுவதற்கு நூலாசிரியர் எடுத்தாளும் தரவுகளைப்
பார்க்கும் பொழுது மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கும் வைரத்தை வெட்டி எடுக்கத்
தேவைப்படும் கடின உழைப்பு இதிலே செலுத்தப்படுவதை உணரலாம்
.
.
ஆங்கிலம், அறிவியல் மொழி, ஆங்கிலம் பகுத்தறிவு மொழி என்று சொல்லப்பட்ட
கருத்துகளுக்கு மறுமொழி சொல்லப்புகுந்த ஆசிரியரின் தேடல் தவிர்க்க முடியாமல்
ஆங்கில மொழி ஆக்கம், அதன் தன்மை, அதன் வரலாறு என்று நீண்டு தனக்குள் இருந்த
ஆங்கில மாயை தகர்ந்து போகும் அளவுக்கு எண்ணற்ற தகவல்களை அளித்திருக்கிறது.
என்பதை ஆசிரியரே குறிப்பிடுகிறார்.
இந்நூல் பகுத்தறிவாளர்கள்., குறிப்பாகப் பெரியார் போன்றவர்கள் தமிழ்மொழிக்கு
எதிராக, ஆங்கில மொழிக்கு
ஆதரவாக சொன்ன கருத்துகளுக்கு மறுமொழியாக வாதங்களை எடுத்துரைக்கிறது.
தமிழைத் தாழ்த்தியும் ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்தும் தொடர்ந்து
கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருந்தவர் தந்தை பெரியார் அவர்கள். தொலை நோக்குத்
திட்டம் இல்லாமல் உடனடித் தேவைகளை நிறை வேற்றும் பொருட்டு பார்ப்பனர் அல்லாதாரும், ஆட்சியில் பங்கு
பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கிலவழி கல்விக்கு ஆதரவு நிலை எடுத்தார்
என்றாலும் தமிழ் மொழிக்குறித்து அவருக்கிருந்த குறையுடைய பார்வையும் அதற்கு வலு
சேர்த்தது எனலாம்
நல்லாசிரியர் நலங்கிள்ளி அவர்கள் தமது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட விடுதலை
கட்டுரையைக் காண்போம்.
1960 பிப்ரவரி 13 அன்று விடுதலை இதழில் எழுதிய கட்டுரையில்
பெரியார் கூறுகிறார்.
1.ஒருவன் ஆங்கில மொழியை சுலபமாக கற்றுக் கொள்ள
முடியும்
2.ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்த
கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்ப இயலும்
3.ஆங்கில மொழியானது அறிவைத்தூண்டும் உணர்ச்சியை
ஏற்படுத்தி இருக்கிறதே தவிர அது சுதந்திரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு
விலங்கிட்டதாக ஒரு போதும் கிடையாது.
4.இன்றைய உலகச் சூழ்நிலைக்கு ஏற்ப விரிவான
முன்னேற்றத்துக்கு ஏற்ப எந்த காரியத்தை எடுத்துக் கொண்டாலும் இங்கிலீசைத் தவிர
வேறு எந்த மொழியிலாவது நாடோ, மனிதனோ முன்னேறுவதற்கு ஏற்ற வசதியோ வாய்ப்போ
இருக்கிறதா? (பெரியார் சிந்தனைகள் பக்கம்: 1777)
முதல் கருத்தாகிய “ஒருவன் ஆங்கில மொழியை சுலபமாக கற்றுக் கொள்ள
முடியும்” என்ற கருத்துக்கு
மாற்றாக தனது கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, மொழியியல் அறிஞர்களின் கருத்தையும், மொழி ஒலிப்பியல்
அறிஞர்களின் கருத்துக்களையும் நலங்கிள்ளி எடுத்தாளுகிறார்.
“ஒரு மொழியில் ஓர் எழுத்து தனியாக
வெளிப்படுத்தும் ஒலிப்பும், அந்த எழுத்து ஒரு சொல்லில் இடம் பெறும் போது
வெளிப்படுத்தும் ஒலிப்பும் எந்தளவுக்குச் சீர்மையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த
மொழியைப் பேசிப் பழகுவது எளிது” என்ற ஒலிப்பியல் அறிஞர்களின் கருத்தை பதிவு
செய்கிறார்.
ஆங்கிலத்தில் உச்சரிப்புக் கேடு என்பது கடுமையான விமர்சிக்கப் படுவதுண்டு.
அவ்வாறு விமர்சித்த அறிஞர்களுள் நாடக ஆசிரியரும், ஆங்கில மொழி அறிஞருமான பெர்னாட்ஷா அவர்களும்
ஒருவர்.
ஆங்கில உச்சரிப்புக் கேடு குறித்து ஒரு நாடகம் எழுதி, அதற்கு ஆஸ்கர் விருதினையும் பெற்றார் என்ற
செய்தியையும் அந்நாடகத்துக்கு பெர்னாட்சா எழுதிய முன்னுரையில் ஆங்கில உச்சரிப்பு, ஆங்கிலேயருக்கே
கூட கற்பதற்கு கடினமானது என்று குறிப்பிட்ட செய்தியையும் மேற்கோள் காட்டி, ஆங்கில மொழி கற்பதற்கு எளிமையான மொழி அல்ல. அது
கடினமானது என்ற கருத்தைப் பதிவு செய்கிறார்.
அடுத்து ஆங்கிலம் தெரிந்தால் உலகின் எந்த கோடிக்கும் சென்று அறிவைப்பெற்று
திரும்ப முடியும் என்ற இரண்டாவது கருத்து தவறு எனக் காட்டுவதற்குச் சாதாரணச்
செய்திகளே போதுமானவை.
ருசியா, சப்பான், பிரான்சு என எந்த நாட்டுக்கும் சென்று உயர்கல்வி பெற விரும்பும் மாணவர் எவரும்
அந்த நாட்டு மொழியைப் பயின்ற பிறகுதான் அந்த நாட்டுக் கல்வி நிறுவனங்களில் கால்
பதிக்க முடியுமே தவிர ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு அங்கு ஒரு புத்தகத்தையும் புரட்ட
முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்’’ என்று பதிலளிக்கிறார்.
ஆங்கிலத்தின் தேவைக்குப் பெரியார் மூன்றாவதாகச் சொல்லும் காரணத்தைப்
பார்ப்போம். ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே
தவிர அது சுதந்திரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒரு போதும்
கிடையாது என்கிறார்.
இந்தக் கருத்துக்கான பதிலை
1.தமிழைப் போல் மனிதரிடத்து உயர்வு தாழ்வு
கற்பிக்காத சனநாயக மொழியா?
2.தமிழைப் போல் மனிதரிடத்து ஆண் பெண் பாலின
வேறுபாடு கற்பிக்காத பெண்ணிய மொழியா ஆங்கிலம்?
3.தமிழ் போல் மூட நம்பிக்கைகள் ஏது மற்ற அறிவியல்
மொழியா ஆங்கிலம்?
என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்து, புத்தகத்தின் 8ஆம் பக்கத்திலிருந்து 117ஆம் பக்கம் வரை கிட்டதட்ட 109 பகுதிகளில்
படங்களுடன் கருத்துகளை வலுவாக முன்
வைக்கிறார் நூலாசிரியர் நலங்கிள்ளி.
நிறத்தின் அடிப்படையில் அங்கே ஏற்றத் தாழ்வு கற்பிக்கப்படுகிறது. என்றும்
கருப்பின மக்களை ஆங்கிலேயர்கள் அவர்களின் உருவ அமைப்பை, மூக்கமைப்பை, உதட்டமைப்பை வைத்து எள்ளி நகையாடும் போக்கு
சாதாரண மக்களிடமிருந்து உயர் பதவியில் உள்ளவர்களிடம் வரை இருக்கிறது என்றும்
சான்றுகளுடன் விளக்குகிறார்.
பெண்ணடிமைத்தன கருத்துகள் அவர்களின் வேத நூலாகிய ஆதி யாகமம் தொடங்கி, ஆங்கில
இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப் படும் ஜெப்ரிசாசர் இங்லாந்தின் தேசியக்கவி என்று
பாராட்டப்படும் வில்லியம் சேக்ஸ்பியர் முதலானவர்களின்
இலக்கியப் படைப்புகளில் எவ்வாறு விரவிக் கிடக்கின்றன என்பதையும் இன்றளவும்
அப்பெண்ணிடிமைக் கருத்துகள் அரசியல் தலைவர்களிடம் மேலோங்கி இருப்பதையும் சான்றுகளுடன்
விளக்குகிறார்.
பெண்களை இழிவுப்படுத்தும் வசைச் சொற்களையும் குறிப்பிட்டு இந்தப் போக்குக்கு
எதிராக போர்கொடி ஏந்தியிருக்கும் பெண்ணியவாதிகளையும் அவர்களின் முயற்சியால் ஆண்களை
முன்னிறுத்தி சூட்டப்பட்ட தொழிற்பெயர்கள் இப்போது பொதுப் பெயர்களில் எவ்வாறு
அழைக்கப்படுகின்றன என்ற செய்திகளையும் பதிவு செய்கிறார்
.
.
தமிழ்போல் மூட நம்பிக்கைகள் ஏதுமற்ற அறிவியல் மொழி ஆங்கிலம் என்னும்
பகுத்தறிவுவாதிகளின் கருத்தை பல எடுத்துக்காட்டுகளுடன் மறுக்கிறார்.
ஆங்கிலப் புத்தாண்டு என அழைக்கப்படுவது உண்மையில் ஆங்கில புத்தாண்டு அல்ல அது
ரோமனிய புத்தாண்டு அல்லது கிரேகாரியன் புத்தாண்டு என்று அழைக்கப்பட வேண்டும்
என்றும் அதற்கு காரணம்,
ஆங்கில மாதங்களில்
பெயர்கள் மூடநம்பிக்கைகளும் ஆபாசங்களும் நிறைந்த கிரேக்க, ரோமனிய புராணங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும், மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பெயர்களும் கிரேக்கப் பெயர்களே என்றும்
எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி ஆங்கிலம் மூட நம்பிக்கையற்ற மொழி அல்ல என்பதை உறுதிபட
நிறுவுகிறார்.
ஆங்கிலம் என்பது ஜெர்மனி, பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் முதலான மொழிகளின் கலப்பே என்றும், ஆங்கிலம் தனித்த மொழி அல்ல என்றும் விளக்கி, அந்த ஆங்கில மொழி இலத்தீன் மொழி ஆதிக்கத்துக்கு எதிராக நடத்திய மொழிப்போரையும்
பதிவு செய்திருக்கிறார்.
பெரியார் போன்ற பகுத்தறிவுவாதிகளிடம் மட்டுமல்லாமல் தலித்திய
சிந்தனையாளர்களிடையேயும், ஆங்கில ஆதரவு
போக்கு மேலோங்கி இருப்பதனை குறிப்பிடுகிறார். தமிழ் உட்பட இந்திய மொழிகளில்
சாதிகறை படிந்திருக்கிறது என்றும், சமூக வளர்ச்சிக்கு
போதிய அறிவு வட்டார மொழிகளில் இல்லை என்றும், ஆங்கில அம்மனை வழிப்பட்டால் நாம் வாழ்க்கையில் முன்னேறலாம் என்றும், புதிய ஆங்கில அம்மனை கணினிப் பீடத்தில்
நிறுத்தி வழிபடும் போக்கு இப்பொழுது வடபுலத்தில் தலித்து மக்களிடையே
தலைதூக்குகின்ற செய்தியையும் இந்நூலில் குறிப்பிடுகிறார்.
தந்தை பெரியாரின் அளப்பரிய சமூகப் பங்களிப்பை போற்றிப் பாராட்டும் அதே
வேளையில் அவர் இடறி விழுந்த இடம், ஆங்கில ஆதரவுப்
போக்கு இடம் தான் என்று சுட்டிக்காட்டும் ஆங்கிலமாயை என்ற இந்நூல் உண்மையிலேயே
ஆங்கிலமாயை தகர்த்தெறியும் ஆற்றல் உடையது.
தமிழ் மொழி, வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் உள்ள இன்றைய
நிலையில் தமிழன் வேரிழந்து, மண்ணிழந்து முகவரி
இழந்து தமிழ்நாட்டிலேயே ஏதிலியாகும் நிலைக்கு தள்ளப்படும் ஆபத்தை நெருங்கிக்
கொண்டிருக்கும் இவ்வேளையில் வந்திருக்கும் இந்நூல் மொழிப்போரிலே தமிழ் இனத்திற்கு
சிறந்த அறிவுக் கருவியாகப் பயன்படும் என்பது உறுதி.
angila_mayai.jpg |
விஜயா பதிப்பகம்,
20 ராஜ வீதி,
கோவை - 641 001,
தொலைபேசி - 0422 - 2382614, 2385614
0 comments:
Post a Comment