புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலர், தமிழ் சார்ந்த அமைப்புகளை ஏற்படுத்தி தமிழ்ப் பணியும், இறைப்பணியும் ஆற்றி வருகின்றனர்.
இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட "லண்டன் மெய்கண்டார் ஆதீனம்' அதுபோன்ற பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இலங்கை யாழ்ப்பாணம் அலவெட்டி பகுதியைப் பூர்விகமாகக் கொண்ட ஞானசூரியன் என்பவர், "லண்டன் மெய்கண்டார் ஆதீன'த்தின் நிறுவனர். சிவநந்தி அடிகளாக தனது பெயரை மாற்றி இறைச் சேவையில் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
ஆன்மிகம் தொடர்பான பல நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி வெளியிட்டவர். அவர் மறைந்துவிட்ட போதிலும் அந்த ஆதீனத்தின் தலைவராக இருந்து தமிழ்ப்பணி, ஆன்மிகப் பணியாற்றி வருகிறார் யாழ்ப்பாணத் தமிழரான பற்குணராஜா எனும் யோகானந்த அடிகள்.
லண்டன் மெய்கண்டார் ஆதீனத்தை சிவநந்தி பவுண்டேஷன் எனும் அமைப்பாக மாற்றி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடத்தி வருவதாகக் கூறுகிறார் இவர்.
அண்மையில் தில்லியில் தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாவை தில்லித் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து லண்டன் மெய்கண்டார் ஆதீனம் நடத்தியது. இந்த விழாவுக்காகத் தில்லி வந்திருந்த யோகானந்த அடிகள் நம்மிடம் பேசியதிலிருந்து..
..
லண்டன் மெய்கண்டார் ஆதீனம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் நிறுவனரான சிவநந்தி அடிகள் "மனிதப் பிறவி என்பது முக்தி இன்பம் பெறுவதற்காகவே' எனும் இந்து சமயத்தின் நோக்கத்தின் அடிப்படையில் வாழ்ந்தவர். தனது 60-ஆவது வயதில் சன்னியாசம் பெற்றார். தொடக்கத்தில் பிரிட்டிஷ் சைவ சித்தாந்த மையத்தை ஏற்படுத்தினார். அதுதான் பிறகு லண்டன் மெய்கண்டார் ஆதீனமாக உருமாற்றம் பெற்றது.
தமிழகத்தில் இருந்து குன்றக்குடி அடிகள் போன்றோரை லண்டனுக்கு அழைத்துச் சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்தச் செய்தார். லண்டன் ஆலயங்களில் திருமுறை பாட ஓதுவாரையும் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம், திருக்குறள் போன்றவற்றில் போட்டிகளையும் நடத்தினார்.
லண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் ஒரு பிரிவாக "உலக சைவப் பேரவை' சென்னையில் 29.2.1992-இல் உருவாக்கப்பட்டது. சைவர்கள் உலகில் வாழும் எல்லாப் பகுதிகளிலும் கிளைகளையும், லண்டனில் தலைமையகத்தையும் கொண்டு செயல்படும் வகையில் இந்தப் பேரவை ஏற்படுத்தப்பட்டது.
இந்தச் சைவப் பேரவைக்கு கனடா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் அமெரிக்கா, இலங்கை, தென் அமெரிக்கா, மலேசியா ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. சென்னையில் முதலாவது உலக சைவப் பேரவை மாநாடு நடத்தப்பட்டது. இதுவரை 12 மாநாடுகள் நடத்தப்பட்டன. கடைசி மாநாடு சிதம்பரத்தில் நடைபெற்றது.
உலக சைவப் பேரவை தொடங்கிய பிறகுதான் மாநாடுகள் நடத்தப்பட்டன. மாநாடுகள் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தியுள்ளோம். இந்தியாவில் தஞ்சையிலும், சிதம்பரத்திலும் நடத்தியுள்ளோம். 13-ஆவது மாநாடு எங்கே நடத்துவது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை. எதிர்காலத்தில் இந்தியாவின் தலைநகரிலோ அல்லது வேறு இடத்திலோ நடத்த இடம் தேர்வு செய்யலாமா என்று திட்டமிட்டு வருகிறோம்.
சிவனை முழு முதற் கடவுளாக கொண்டு வழிபடுவது சைவமாகும். சைவத்தின் வளர்ச்சிக்கு நாயன்மார்கள் பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக நால்வர்கள் எனப் போற்றப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் போற்றத்தக்க பங்களிப்பை நல்கியுள்ளனர்.
அவர்கள் பாடிய அனுபூதி பெற்ற பாடல்களால் தமிழகத்தில் சைவம் தழைத்தோங்கியது. அவர்களது காலத்திற்குப் பிறகு மெய்கண்டார் காலத்தில்தான் திருமறைகள் மீதான விழிப்புணர்வு ஏற்பட்டது.
ஸ்ரீ ஆதிசங்கரரின் வேதாந்தத்தைப் போல சைவ சித்தாந்த தத்துவத்திற்கு வரைவிலக்கணம் கொடுத்தவர் மெய்கண்டார். அவருடைய நினைவாகவே லண்டன் மெய்கண்டார் ஆதீனம் உருவாக்கப்பட்டது.
தமிழர்கள் ஆரம்ப காலக்கட்டத்தில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் சென்றபோது லண்டன் தவிர பிற நாடுகளில் இந்து ஆலயங்கள் அவ்வளவாக இல்லாத நிலை இருந்தது.
லண்டன்வாழ் தமிழர்கள் திருக்குறள் சமய நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியிட்டனர். "லண்டன் முரசு' போன்ற பத்திரிகைளில் இவை வெளிவந்தன. பிறகு சிறு, சிறு தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு இசை, நடனம் போன்ற கலைகள் தொடங்கப்பட்டன.
2003-இல் சிவநந்தி அடிகள் காலமானார். அதன்பிறகு லண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் தலைவராக இருந்து வருகிறேன். தமிழ்ப் பணியுடன், சைவ சித்தாந்த கருத்துகளைத் தமிழர்களிடம் எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டு வருகிறோம். சிவநந்தி அடிகள் மறைவுக்குப் பிறகு லண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு மாற்றப்பட்டது. மேலும், சிவநந்தி பவுண்டேஷன் என்ற பெயராகவும் மாற்றப்பட்டு பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நான் மருந்துக் கம்பெனியில் பணியாற்றி வருகிறேன். எனினும், தமிழ்ப் பணியையும், சமயப் பணியையும் மேற்கொள்வதை முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளேன்.
இங்கிலாந்தைச் சேர்ந்த அலஸ்டர் மெக்லஸன் என்ற கிறிஸ்தவப் பாதிரியார், இறைப் பணிக்காக தமிழகம் வந்தபோது, சேக்கிழாரின் பெரிய புராணத்தில் வரும் கண்ணப்ப நாயனார் கதையைக் கேட்டு ஈர்க்கப்பட்டார். இங்கிலாந்து திரும்பிச் சென்றதும் சேக்கிழாரின் பெரியபுராணத்தை "தி ஹிஸ்டரி ஆஃப் தி ஹோலி சர்வன்ட்ஸ் ஆஃப் தி லார்டு சிவா' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
அவரைக் கௌரவிக்கும் விதமாக "சிவ தொண்டன்' எனும் பட்டம் அவருக்கு 2007-இல் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சைவப் பேரவையின் 11-ஆவது மாநாட்டின் போது வழங்கப்பட்டது.
ஐரோப்பாவில் உள்ள 25- 40 வயதுடைய இளைஞர்களில் பலரும் இந்தியப் பண்பாட்டையும், யோகா, தியானம் உள்ளிட்டவற்றையும் விரும்புகின்றனர். தமிழ் மொழி, கலை, கலாசாரம், சமயம் தொடர்பான பல்வேறு பணிகளை சிவநந்தி பவுண்டேஷன் மூலம் மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகிறோம்''
என்றார் அவர்.
செய்தி: வே.சுந்தரேஸ்வரன்
படம்: டி.ராமகிருஷ்ணன்
நன்றி :-ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 18 -08-2013
0 comments:
Post a Comment