வரலாற்றுரீதியாக டார்ஜிலிங், மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்று கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜி.ஜே.எம்.) தலைவர் பிமல் கரங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜி.ஜே.எம். தலைவர் பிமல் கரங், ஃபேஸ்புக் இணையதளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
கோர்காலாந்து மாநிலத்தை உருவாக்குவது என்பது மேற்கு வங்கத்தைப் பிரிக்கும் நடவடிக்கை அல்ல. ஏனெனில், வரலாற்று ரீதியாக டார்ஜிலிங், மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. அப்பகுதி முந்தைய சிக்கிம் அரசிடம் இருந்து பிரிட்டிஷாருக்கு 1835இல் குத்தகைக்குத் தரப்பட்டது.
டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள காலிம்பாங்கும், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள தோ ஆர்ஸ் பகுதியும் 1865இல் பூட்டானில் இருந்து பிரிக்கப்பட்டு, ஒன்றிணைக்கப்பட்டன. கோர்காலாந்து மாநிலம் உருவாவதை எதிர்ப்பவர்கள் எங்களை வெளிநாட்டவர் என்று குற்றம் சாட்டுகின்றனர். இது தனி மாநில இயக்கத்துக்கே மேலும் வலுசேர்க்கும். எங்களது இப்போதைய இயக்கம், இந்தியா மீது எங்களுக்கு இருக்கும் தேசபக்தியை தொடர்ந்து உறுதிப்படுத்தி வந்துள்ளது. "ஜெய் ஹிந்த், ஜெய் கோர்கா' என்பதே எங்கள் கோஷமாகும் என்று பிமல் கரங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜி.ஜே.எம். உள்ளிட்ட கோர்கா ஆதரவு அமைப்புகள் வெள்ளிக்கிழமை புதிய குழு ஒன்றை அமைத்தன. அவை, தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதம் 19ஆம் தேதி முதல் மக்கள் வீடுகளில் இருந்தபடி உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துமாறு அழைப்பு விடுத்தன
நன்றி :-தினமணி, 18 - 08 - 2013
0 comments:
Post a Comment