Home » » தனி மாநிலம் கோரி கர்பி அங்லாங்கில் போராட்டம் தீவிரம் தினமணி

தனி மாநிலம் கோரி கர்பி அங்லாங்கில் போராட்டம் தீவிரம் தினமணி


அசாம் மாநிலத்திலிருந்து கர்பி அங்லாங்கை தனி மாநிலமாகப் பிரித்துத் தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்பி அங்லாங் கோரிக்கையை வலியுறுத்தி திபு மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவ அலுவலகம், நீர்ப்பாசனத்துறை, விவசாயத்துறை, குழந்தைகள் மேம்பாட்டு சேவை மையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை இரவு தீ வைத்தனர்.
திபு மற்றும் டால்டாலி ரயில் நிலையங்களுக்கு இடையேயுள்ள ரயில் தண்டவாளங்களை தகர்த்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து முழுவதுமாக பாதிப்படைந்தது.

மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு சனிக்கிழமையும் தொடர்ந்தது.

திபு நகரில் இந்த உத்தரவு காலை 8 மணி முதல் மூன்று மணி நேரம் தளர்த்தப்பட்டது. அப்பகுதியில் ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தினர்.

உடன்பாடு கிழிப்பு: கர்பி அங்லாங் மாவட்டத்தில் அமைதியைக் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு மற்றும் அசாம் மாநில அரசுடன் ஐக்கிய மக்கள் ஜனநாயக அமைப்பு முத்தரப்பு ஒப்பந்தத்தில் 2011-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தத்தை மக்கள் ஜனநாயக அமைப்பினர் சனிக்கிழமை கிழித்தெறிந்தனர். அமைதி ஒப்பந்தத்துக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, கர்பி அங்லாங் பகுதியில் நிலைமையின் தீவிரத்தை ஆராயவும், அமைதியை திரும்பக் கொண்டு வரவும் மாநில அமைச்சர்கள் பிருத்வி மாஜி மற்றும் ராஜீவ் லோகன் பெகு ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.

நன்றி :- தினமணி, 04-08-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger