Home » » டார்ஜிலிங்கில் காலவரையற்ற வேலைநிறுத்தம் - தினமணி

டார்ஜிலிங்கில் காலவரையற்ற வேலைநிறுத்தம் - தினமணி

ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மலைப்பகுதியைப் பிரித்து கோர்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா அழைப்பு விடுத்திருந்தது.

இதையடுத்து சனிக்கிழமை டார்ஜிலிங்கில் உள்ள கடைகள், மார்க்கெட்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் ஆகியன மூடப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் நடைபெறவில்லை.

டார்ஜிலிங் நகரம் முழுவதும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டார்ஜிலிங் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டப் பணிகள் வழக்கம்போல் நடைபெற்றன.

கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் டார்ஜிலிங்குக்கு சிலிகுரியில் இருந்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை உடனடியாக அனுப்பி வைக்கக் கோரி டார்ஜிலிங் அருகே உள்ள ராமம் மற்றும் ரிம்பிக் நிப்பான் நீர் மின் உற்பத்தி நிலையத்தில் புகுந்து மின் உற்பத்தியை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் 6 பேர் கொண்ட கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த குழு புதுதில்லியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களை சந்தித்து கோர்காலாந்து தனி மாநிலத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

மேலும் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அம்பிகா சோனியை சந்தித்து ஆதரவு கேட்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் டார்ஜிலிங் அருகே கோர்கா ஜன முக்தி மோர்ச்சா அமைப்பின் வர்த்தகப் பிரிவு தலைவர் சரோஜ் தமங் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார். இதுபற்றி அக்கட்சியின் உதவிப் பொதுச்செயலாளர் பினய் தமங் கூறும்போது,சரோஜ் தமங் கொலைக்கு திரிணமூல் காங்கிரஸ்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் , டார்ஜிலிங் பகுதியில் கோர்கா ஜன முக்தி மோர்ச்சா பெயருக்கு களங்கம் விளைவிக்கவே திரிணமூல் காங்கிரஸ் இது போன்ற செயலில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

திரிணமூல் காங்கிரஸ் டார்ஜிலிங் நகரத் தலைவர் ராஜன் முக்கியா கூறும்போது, எங்கள் கட்சி எப்போதும் டார்ஜிலிங் மலைப்பகுதியில் வன்முறையை கட்டவிழ்த்து விடாது. நாங்கள் அமைதியை கடைபிடிக்கவே விரும்புகிறோம் என்றார்.                                                                                                            

நன்றி :- தினமணி,  04-08-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger