Home » » சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் ,கல்லங்குடியில் கம்பரின் முழு உருவச் சிலை ?

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் ,கல்லங்குடியில் கம்பரின் முழு உருவச் சிலை ?




சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கல்லங்குடி கிராமம் அருகில் உள்ள அடர்ந்த காட்டில், 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கம்பரின் முழு உருவச்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வூரின் வடமேற்கில், கல்வெட்டுகள் பலவற்றைக்கொண்ட பழைமையான சிவன் கோயில் ஒன்று சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இக்கோயிலில் உள்ள இறைவன் "உடம்புடையார்' என்றும், "உலகதீனமுடைய ஈசுவரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆனால், கல்வெட்டுகளில் "உலகமுழுதுடைய ஈசுவர முடையார்' என்ற குறிப்புள்ளது. அம்மன் திருப்பெயர் உலகாத்தாள்.

கல்லங்குடி கிராமத்தில் பூர்வீகக்குடிகளாக காராள வெள்ளாளர் அதிகமாக வாழ்ந்துள்ளனர். அவர்கள் கம்பரின் உறவினர்களாய் இருந்ததனால், கம்பர் சிலகாலம் இங்கு வாழ்ந்ததாகவும், ஏழு மைல் தொலைவிலுள்ள நாட்டரசன்கோட்டையில் சமாதி அடைந்ததாகவும் இவ்வூர் அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர்.

இக்கோயிலில் எட்டுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பழைமையானது, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி.1216-1238) கல்வெட்டாகும். இக்கல்வெட்டு, இம்மன்னனின் நான்காம் ஆட்சியில் (கி.பி.1220) இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட தானத்தைத் தெரிவிக்கிறது.

கல்வெட்டுகளின் மூலம், பிற்காலப் பாண்டிய மன்னர் மரபினர்களால் கி.பி.13-ஆம் நூற்றாண்டில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, இக்கோயில் கட்டப்பட்டது எனத் தெரியவருகிறது. உடைந்த நிலையில் விநாயகர், நந்தி, பைரவர் உருவச்சிலைகளுடன் கம்பரின் முழு உருவச்சிலையும் காணப்படுகிறது.

இங்குள்ள கல்வெட்டுகளையும், கம்பரின் முழு உருவச்சிலையையும் மேலும் ஆய்வு செய்து, இது கம்பரின் சிலைதான் என்பதைத் தொல்லியல்துறை உறுதியாக நிறுவ வேண்டும் என்பதும், இக்கோயிலை அரசு புதுப்பித்துத்தர வேண்டும் என்பதும் இங்குள்ள மக்களின் கோரிக்கையாகும்.

நன்றி :-  சூறாவளி பொ.இலட்சுமணன் ,தமிழ்மணி, தினமணி. 18-03-2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger