ஆற்றுப்படை இலக்கியங்கள் வரிசையில், 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றியதுதான் மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை. பாடியவர் நாகூர் தர்கா வித்துவானும், மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவருமான குலாம்காதிறு நாவலர் என்ற ஓர் இஸ்லாமியர்.
இவர், திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றவர். 1901-ஆம் ஆண்டு பாண்டித்துரைத் தேவருடன் இணைந்து மதுரையில் நான்காவது தமிழ்ச் சங்கம் அமைத்தவர். அச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்ட "மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை' இன்றும் இஸ்லாமியரின் தமிழ்ப்பணிக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இவர் "நான்காம் தமிழ்ச்சங்கத்து நக்கீரர்' என்றும் போற்றப்படுகிறார்.
÷பரிசில் பெற்ற புலவர் ஒருவர், வழியில் கண்ட புலவரிடம், பாண்டித்துரைத் தேவர் கூடலம்பதியில் தோற்றுவித்த நான்காம் தமிழ்ச் சங்கத்திற்குப் போக வழிவகைகளைக் கூறி, பாண்டித்துரைத் தேவரிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இப்புலவராற்றுப்படை. 220 அடிகளைக் கொண்டது. இந்நூலுக்குப் பெரும் புலவரான திருமயிலை சண்முகம்பிள்ளை சிறப்புப் பாயிரம் பாடிப் பெருமை சேர்த்துள்ளார்.
÷நூறாண்டிற்கு முன்னர் நான்காவது மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்நூல் தற்போது கிடைக்கப் பெறவில்லை.
ஆனால், சென்னை ஆவணக் காப்பகத்தில், ஆற்றுப்படை பாடலும் குறிப்பும், ஒரு மேற்கோள் பாடலாக உள்ளது.
நன்றி :-தமிழ்மணி, தினமணி.
0 comments:
Post a Comment