செவ்வ்வாய் கிரகத்தில் செட்டிலாகி விட, 20, 000 இந்தியர்கள் முன்பதிவு
வாஷிங்டன்:இந்த பூமி கிரகத்தை விட்டு, ஒரேயடியாக செவ்வாய் கிரகத்தில் செட்டிலாகி விட, 20 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் இந்தியா உலக அளவில் 2ம் இடத்தை பிடித்துள்ளது.மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2023ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, செவ்வாய் கிரகம் செல்ல விரும்புபவர்களை அழைத்து செல்ல எங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்து¢கொள்ளலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் செவ்வாய் கிரகம் செல்ல விருப்பம் தெரிவித்து முன்பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக இந்த திட்டத்திற்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த 5 மாதத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் இருந்து செவ்வாய் கிரகம் செல்வதற்காக 2 லட்சத்து 2,586 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் செல்வதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக மார்ஸ் ஒன் நிறுவனத்தின் தேர்வு குழு கடந்த 5 மாதமாக இடைவிடாது ஆய்வு செய்து முதல் கட்டமாக பட்டியலை அறிவித்துள்ளது.
இதில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது. 47 ஆயிரத்து 654 அமெரிக்கர்களை செவ்வாய் கிரகத்துக்கு அழைத்து செல்ல மார்ஸ் ஒன் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 20 ஆயிரத்து 747 இந்தியர்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். 13 ஆயிரத்து 176 சீனர்கள், 10 ஆயிரத்து 289 பிரேசிலியர்கள், 8,497 பிரிட்டிஷ்காரர்கள், 8241 கனடாக்காரர்கள், 8,197 ரஷ்யர்கள் மற்றும் மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் நாட்டினரும் இந்த பட்டியலில் முதல் பத்து இடத்தில் உள்ளனர்.
இன்னும் 2 ஆண்டுகளுக்கு பல்வேறு சுற்றுகளில் தேர்வு குழுவினர் ஆய்வு செய்து செவ்வாய் கிரகத்துக்கு செல்ல தகுதியானவர்களை இந்நிறுவனம் தேர்வு செய்ய உள்ளது. அதன்பின்னர் 2015ம் ஆண்டு முதல் அவர்களுக்கு முழு நேர பயிற்சி அளிக்கப்படும். 2023ல் இந்த குழுவில் இருந்து சிலர் முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
ஆட்களை தேர்வு செய்வதற்கான 2ம் சுற்று நேர்காணல் 2014ம் ஆண்டில் தொடக்கத்தில் நடைபெறும். இதில் விண்ணப்பதாரர்களை தேர்வு குழுவினர் நேரில் பேட்டி கண்டு தேர்வு செய்வார்கள் என்று மார்ஸ் ஒன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி:- தமிழ்முரசு, 10-09-2013
0 comments:
Post a Comment