Home » » பார்வை ஒன்றே போதுமே...: தேசிய கண்தானம் தினம் -08-09-2013

பார்வை ஒன்றே போதுமே...: தேசிய கண்தானம் தினம் -08-09-2013


 இந்த உலகில் நாள்தோறும் பல விதமான அற்புதங்கள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்து, ரசிக்க வேண்டும் எனில், கண் வேண்டும். அது இல்லையெனில் உலகமே இருளாக தோன்றும். கண் பார்வை இல்லாததால், உலகை காண முடியாத லட்சக்கணக்கானோருக்கு, ஒளி ஏற்றும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அதுதான் கண் தானம்.

மறைந்த பின்னும், உயிருடன் இருப்பவை கண்கள். இதை தானம் அளிப்பதன் மூலம், பார்வையற்ற 2 பேருடைய வாழ்வில் ஒளி ஏற்றலாம். மறைந்த பிறகும் நாம், இவ்வுலகைக் காண வழி கிடைக்கிறது. கண் தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தானம் செய்வோரை பாராட்டும் விதத்திலும் செப்.,8ம் தேதி, தேசிய கண்தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகில் 3 கோடியே 70 லட்சம் பேர் பார்வையற்றோராக உள்ளனர். இதில் 1 கோடியே 50 லட்சம் பேர் மட்டும் இந்தியாவில் உள்ளனர். 26 சதவீதம் பேர் குழந்தைகள். பார்வை இழப்பில் 75 சதவீதம் தடுக்கக் கூடியது. போதிய கண்தானம் செய்வோர் இல்லாததால், இதை குறைக்க முடியவில்லை.


கார்னியா குறைபாடு அதிகம்: @@கண்ணின் முக்கிய உறுப்பாக விளங்கும் கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப்படுகிறது. விழித்திரையில் பிம்பம் படியாததால், பார்வை தெரிவதில்லை. தொற்று நோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாடு காரணமாக சிலருக்கு பிறவியிலேயோ, பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து, மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.


நீங்கள் தரலாமா: @@அனைவரும் கண் தானம் செய்யலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா, டிபி, ரத்தக்கொதிப்பு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கண்தானம் செய்யலாம். தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, வெறி நாய்க்கடி, எய்ட்ஸ் போன்றவை இருந்தால் மட்டுமே கண் தானம் தர முடியாது.

ஆறு மணி நேரத்துக்குள்:@@ கண் தானம் செய்ய விரும்புவோர், அருகிலுள்ள கண்தான வங்கியை தொடர்பு கொள்ளலாம். ஒருவர் இறந்து விட்டால், கண்களை மூடி விட்டு, கண்ணின் மீது ஐஸ் கட்டி அல்லது ஈர பஞ்சை வைக்க வேண்டும். இது கார்னியா, குளிர்ச்சியாக இருக்க உதவும். தலையை உயர்த்தி வைக்க வேண்டும். தலைக்கு மேல் இருக்கும் மின் விசிறியை அணைக்க செய்ய வேண்டும். டாக்டர்கள் வரும் வரை, இரண்டு கண்களிலும் ஆன்டிபயாடிக் சொட்டு மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் ஊற்ற வேண்டும். ஒருவர் இறந்ததும் ஆறு மணி நேரத்துக்குள், கண்களை அகற்ற வேண்டும். கண்தானம் செய்ய விரும்புவோர், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் – ஞா, 8 செப்., 2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger