Home » » இறந்த பின்னும் வாழலாம்; எல்லோருக்கும் இது புரியணும் - ஆசிரியர் கோவிந்தராஜ்

இறந்த பின்னும் வாழலாம்; எல்லோருக்கும் இது புரியணும் - ஆசிரியர் கோவிந்தராஜ்



இறந்த பின்னும் வாழலாம்; எல்லோருக்கும் இது புரியணும் - கண் தான பிரச்சாரம் செய்யும் கோவிந்தராஜ்

கண் தானம் குறித்து பிரச்சாரம் செய்து வரும் ஆசிரியர் கோவிந்தராஜ்.

 கடவுளுக்கே தனது கண்களைக் கொடுத்தவர் என்று கண்ணப்ப நாயனாரைப் பற்றிச் சொல்வார்கள். அவரது பெயரில் கண் தானம் குறித்த ஒரு இயக்கமே நடத்திக்கொண்டிருக்கிறார் புதுக் கோட்டை ஆசிரியர் கோவிந்தராஜ்.

அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கோவிந்தராஜ். கல்யாணம், காதுகுத்து, கொண்டாட்டங்கள், இசைவிழா என எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் மொய் கவர் இருக்கிறதோ இல்லையோ.. கோவிந்தராஜின் கையில், கண் தானம் செய்வதற்கான உறுதிமொழிப் படிவங்கள் கொத்தாக இருக்கும். கிடைக்கும் அந்தச் சிறு இடைவெளியிலும் நான்கு பேரிடம் கண் தானம் குறித்து நயமாக பேசி, அதில் இரண்டு பேரையாவது கண் தான உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்து போட வைத்துவிடுவார் கோவிந்தராஜ். இப்படி இதுவரை சுமார் 8500 பேரிடம் கண் தான உறுதிமொழிப் படிவங்களை வாங்கி இருக்கிறார்.

இப்படி ஒரு இயக்கத்தை நடத்த வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு எப்படி ஏற்பட்டது? அவரே சொல்கிறார்..

1959-ல் புதுக்கோட்டை நகராட்சிப் பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடங்கினேன். அப்போதே, கலைநிகழ்ச்சிகள் மீது அதிக ஆர்வம். வகுப்பில்கூட கலைகளோடு ஒப்பிட்டுத்தான் மாணவர்களுக்கு பாடம் நடத்துவேன். அரசு சார்பில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு முதல் ஆளா போயிருவேன். ஒருமுறை, கண் தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு போயிருந்தேன். ‘விபத்து, நோய், உயிர்ச்சத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் பார்வையிழப்பு ஏற்படுகிறது. கண்களில் உள்ள கார்னியா என்ற பகுதி பாதிக்கப்படுவதால் பார்வை இழப்பு ஏற்படுகிறது. கண்தானம் மூலமாக கிடைக்கும் கார்னியாவைப் பொருத்தி, பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்யலாம். ஒருவர் இறந்த பிறகும் அவரது கண்கள் 6 மணி நேரத்துக்கு உயிருடன் இருக்கும். அதற்குள்ளாக அந்தக் கண்களை எடுத்து பார்வையற்றவர்களுக்கு பொருத்திவிடலாம். வீணாக மண்ணில் புதைந்து மக்கும் கண்களை தானமாக தரலாம். இதற்கு மக்கள் மத்தியில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு வரணும்’னு சொன்னாங்க.

அந்தப் பிரச்சாரத்தை கேட்டுட்டு வீட்டுக்கு வந்ததும், கண்ணை மூடிக்கிட்டு நடந்து பார்த்தேன். அஞ்சு நொடிக்குள்ள நாலு இடத்துல முட்டிக்கிட்டேன். அப்பத்தான் கண் தெரியாதவங்களோட கஷ்டம் தெரிஞ்சுது. அன்னைக்கு மனசுல உதிச்ச யோசனைதான் இன்னைக்கி ‘கண்ணப்ப நாயனார் கண்தான பிரசார மையம்’ங்கற பேர்ல வளர்ந்து நிக்குது… கண் தான மையம் வந்தக் கதையை சொல்லி முடித்த கோவிந்தராஜ், தொடர்ந்து பேசினார்.

ஆசிரியர் பணியில இருந்து 1994-ல் ஓய்வு பெற்றதுமே இந்த இயக்கத்தை தொடங்கிட்டேன். ஆரம்பத்துல இந்த அமைப்பை எல்லோரும் வேடிக்கையாத்தான் பார்த்தாங்க. சிலர் கேலியா சிரிச்சாங்க. அதுக்காக சோர்ந்து போயிடல. கோயில் திருவிழா, நவராத்திரி விழா, உழவர்சந்தை, ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், கல்லூரி, பேருந்து நிலையம் என அத்தனை இடங்களிலும் கண் தானம் குறித்து பிரச்சாரம் செய்யறேன். கண் தான உறுதிமொழிப் படிவங்கள்ல கையெழுத்தும் வாங்க ஆரம்பிச்சேன். முன்னெல்லாம் அம்பது பேரு என் பிரச்சாரத்தைக் கேட்டாங்கன்னா, அதுல ரெண்டு பேராவது கண்களை தானம் செய்ய முன்வருவாங்க. இப்ப நிலைமை எவ்வளவோ மாறிடுச்சு. பலபேரு அவங்களாவே என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு வலிய வந்து கண் தான உறுதிமொழிப் படிவத்துல கையெழுத்துப் போட்டுக் குடுத்துட்டுப் போறாங்க. திருமண விழாக்கள்ல என்னோட பிரச்சாரத்தைக் கேட்டு மணமக்களேகூட கண் தானம் பண்ணியிருக்காங்க. உறுதிமொழிப் படிவங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல வந்ததுமே கலெக்டர்கிட்ட கொண்டுபோய் குடுத்துட்டு வந்துடுவேன்.

மனுஷனா பொறந்த எல்லோருக்கும் இறப்புங்குறது நிச்சயம். ஆனா, கண் தானம் குடுக்குறவங்க. யாரோ ஒருவரோட பார்வை மூலமா இறந்த பிறகும் இந்த உலகத்துல வாழறாங்க. இந்த உண்மையை உணராதவங்க கண் தானம் செய்யத் தயங்குறாங்க. அதனால, விலைமதிப்பில்லாத கண்களை மண்ணுக்குக் குடுத்துட்டு இருக்காங்க. இந்த நிலைமை மாறணும். எல்லாரும் கண் தானம் குடுக்க முன்வரணும். இறுதி மூச்சு இருக்கும் வரை என்னுடைய இந்தப் பிரசாரம் தொடர்ந்துக்கிட்டே இருக்கும்… அழுத்தம் திருத்தமாய் சொன்னார் கோவிந்தராஜ்.

தி இந்து - 30 - 10 -2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger