Home » » 1909-iஇல் கண்ணம்பாடி கிருஷ்ணராஜசாகர் அணை உருவாக்கப்பட்ட கதை ! - அ.குமார்

1909-iஇல் கண்ணம்பாடி கிருஷ்ணராஜசாகர் அணை உருவாக்கப்பட்ட கதை ! - அ.குமார்


நூறாண்டுகளுக்கு முன்பு கர்நாடகத்தில் அணைக்கட்டு ஏதும் இல்லாததால் விவசாயமின்றி விவசாயிகள் பரிதவித்தபோது அப்போதைய மைசூர் மன்னர் நான்காம் கிருஷ்ணராஜ உடையார், காவிரி உற்பத்தியாகும் பகுதியில் குறுக்காக அணை கட்ட நினைத்தார். 1900-ஆம் ஆண்டுகளில் கிருஷ்ணராஜ உடையார் அப்போதைய பம்பாய் நகரில் தங்கம், வெள்ளி நாணயங்களை மொத்தமாக விற்பனை செய்து வந்தார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து அணையைக் கட்டத் திட்டமிட்டார். அணையைக் கட்ட பம்பாயில் என்ஜினீயராகப் பணியாற்றி வந்த விசுவேஸ்வரய்யாவை 1909-ஆம் ஆண்டில் கிருஷ்ணராஜ உடையார் மைசூருக்கு அழைத்து வந்து அணையைக் கட்டும் பொறுப்பை ஒப்படைத்ததோடு முதன்மை என்ஜினீயராகவும் அமர்த்தினார். இவருக்கு உதவியாக கற்பூர சீனிவாசராவ், எச்.பி.கிப்ஸ், கடாம்பி, கிருஷ்ண ஐயங்கார், சீனிவாச ஐயர், ஜான் போர் ஆகியோர் அமர்த்தப்பட்டனர்.

 மைசூரிலிருந்து 12 மைல் தொலைவிலும் ஸ்ரீரங்கபட்டினத்திலிருந்து 9 மைல் தொலைவிலும் இருந்த கண்ணம்பாடி என்ற கிராமத்தில் அணை கட்டுவதென தீர்மானித்தனர். கண்ணம்பாடி தற்போது சிற்றூராக இருந்தாலும் அந்தக் காலத்தில் அது தொட்டபிரபு என்கிற பாளையக்காரன் வசம் இருந்தது. 1600-ஆம் ஆண்டிலேயே முதலாம் கிருஷ்ணராஜ உடையார் அந்தக் கிராமத்தைக் கைப்பற்றி மைசூர் ராஜ்யத்துடன் இணைத்திருந்தார்.

 கண்ணம்பாடியில் அணை கட்டுவதென முடிவு செய்தபோது 25 கிராமங்கள், 9,250 நீர் நிலைகள், 13,293 ஏக்கர் தரிசு நிலங்கள், 8,500 ஏக்கர் அரசு நிலங்கள் நீரில் மூழ்குமென மதிப்பிடப்பட்டது. அணையைக் கட்ட 95 லட்ச ரூபாய் தேவைப்படுமென்றும் 97 அடி உயரத்திற்கு அணையைக் கட்டி அதில் 80 அடி வரை தண்ணீரைத் தேக்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது. இது குறித்த அறிக்கை 1911-ஆம் ஆண்டு மே மாதம் 15-ஆம் தேதி மைசூர் அரசிடம் "கண்ணம்பாடி அணைக்கட்டு நிர்மாணத் திட்டம்' என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு ஏராளமான பணம் செலவாகும் என்பதோடு அப்போதைய மெட்ராஸ் அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அப்போது மைசூர் திவானாக இருந்த ஆனந்தராவ் இத் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதனால் விஸ்வேஸ்வரய்யா மனமுடைந்தார்.

  ஆனால் நான்காவது கிருஷ்ணராஜ உடையார் அணை கட்ட வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தார். விஸ்வேஸ்வரய்யாவை அழைத்து தன்னிடமுள்ள தங்கம், வெள்ளி நாணயங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் 80 லட்சம் ரூபாயைத் தருவதாகவும் கட்டும் பணியைத் தொடங்கும்படியும் கூறினார். அதன்படி 1911-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி அணை கட்டும் பணிகளைத் தொடங்குவதென முடிவு செய்யப்பட்டது. அணை கட்டும் பணிகள் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு முதல் கட்டத்தில் அணை கட்டுவது, இரண்டாம் கட்டத்தில் கால்வாய்கள் கட்டுவது, மூன்றாம் கட்டத்தில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைப்பதென தீர்மானித்தனர். 1912-ஆம் ஆண்டில் விஸ்வேஸ்வரய்யா மைசூர் சமஸ்தானத்தின் திவான் பொறுப்பையும் ஏற்றார்.

 இந்த அணைக்கட்டு திட்டத்தில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 1915-ஆம் ஆண்டு சுமார் 65 அடி உயரம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 1919-ஆம் ஆண்டில் 107 அடியாக உயர்ந்தது. இதற்கு சுமார் 1.55 கோடி ரூபாய் செலவாகியது. முதல் கட்டப்பணிகள் 1921-ஆம் ஆண்டில் முடிவடைந்தபோது 2.11 கோடி ரூபாய் செலவானதாகக் கூறப்பட்டது. 1924-ஆம் ஆண்டில் அணைக் கட்டுடன் கால்வாய் கட்டும் பணிகள் தொடங்கியது. 1928-ஆம் ஆண்டில் அணையின் உயரம் முதலில் திட்டமிட்டதை விட அதிகப்படியாக 130 அடியாக உயர்த்தப்பட்டது. இதற்காக 111 அடி ஆழம் அடித்தளம் அமைக்கப்பட்டது.

 1911-ஆம் ஆண்டில் தொடங்கிய அணை கட்டும் பணிகள் 1932-ஆம் ஆண்டில் முடிவடைந்தது. அணை கட்டி முடித்தபோது 3 கோடியே 23 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவாகியிருந்தது. கடல் மட்டத்திலிருந்து 2,344 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அணையில் 48.33 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கலாம். 8,600 அடி அகலமுள்ள இந்த அணை தரை மட்டத்திலிருந்து சுமார் 140 அடி உயரம் கொண்டதாகும். அணையின் மேற்பகுதியில் 14.5 அடி அகலம் கொண்ட சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் 1995-ஆம் ஆண்டு வரை வாகனப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. அணையின் நீளத்திற்கேற்ப 171 இரும்பு கதவுகள் அமைந்துள்ளன. அணைக்கட்டு தண்ணீரின் சராசரி நீளம் 25 மைல்களாகும். அகலம் 5 மைல்.

 ஆரம்பத்தில் கண்ணம்பாடி அணைக்கட்டு என்று குறிப்பிடப்பட்டு வந்த இந்த அணைக்கு மைசூர் மக்கள் நலனில் மிகவும் அக்கறை காட்டி வந்த நான்காம் கிருஷ்ணராஜ உடையாருக்கு கௌரவமளிக்கும் வகையில் 1917-ஆம் ஆண்டில் கிருஷ்ணராஜ சாகர் என்ற பெயர் சூட்டப்பட்டது. கண்ணம்பாடி, கிருஷ்ணராஜ சாகர் என்ற பெயர்களைவிட தற்போது கேஆர்எஸ் என்று சுருக்கப்பட்ட பெயரே பிரபலமாகி நிற்கிறது.

 கண்ணம்பாடி கிராமத்தில் அணை கட்டும்போது நிலத்தையும் கிராமங்களையும் இழந்தவர்களுக்கு அரசு நிலமும் வீடும் அளிக்க முன்வந்தபோது பழைய நினைவுகளுடன் காவிரிக் கரையிலேயே இருக்க விரும்பிய கிராம மக்கள் புதிய ஊரை அமைத்து அதற்கு "கண்ணம்பாடி' என்றே பெயரிட்டனர். அணைக்குள் மூழ்கவிருந்த கோவில்களில் இருந்த கடவுள் சிலைகளைக் கொண்டு வந்து புதிய ஊரில் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்தனர்.

கிருஷ்ணராஜ சாகருக்கு மூன்று முக்கிய கால்வாய்கள் உள்ளன. 45 கி.மீ. நீளமுள்ள விஸ்வேஸ்வரா கால்வாய் இதில் முக்கியமானதாகும். மேலும் 32 கி.மீ. நீளமுள்ள வலது கரை மற்றும் 21 கி.மீ. நீளமுள்ள இடது கரை கால்வாய்களும் உள்ளன. 130 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் 124 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.

பின்னர் மைசூர் திவானாகப் பதவியேற்ற சர்.மிர்சா இஸ்மாயில் காஷ்மீர் ஷாலிமார் தோட்டத்தை பிரதிபலிப்பதுபோல் அணைக்கட்டையொட்டி பிருந்தாவன் கார்டனை அமைத்த பின்னரே கிருஷ்ணராஜசாகர் அணை சுற்றுலாத் தலமாக மாறியது. இந்த பிருந்தாவனம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதோடு பல்வேறு நீரூற்றுகளும் சங்கீத நீரூற்றும்
சுற்றுலாப் பயணிகள் மனதைக்
கொள்ளை கொள்ளும் வகையில்
அமைக்கப்பட்டன.     

தினமணி கதிர், தினமணி, 27 - 10 -2013             

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger