http://kulasaivaralaru.blogspot.in/2013/10/blog-post_8288.htm
Sunday, October 27, 2013
வளைகுடா நாடுகளில் இவர்கள் வாழும் சூழல் ரெம்ப கொடுமையான ஒன்று. தங்கியிருக்கும் ரூம்களில் இவர்களுக்கு சொந்தம் என்று சொல்லும் இடம் ஒரு கட்டில் போடுவதற்கான இடம் தான். அந்த கட்டிலில் தான் இவர்களின் வாழ்க்கையே முடிகிறது. அந்த கட்டிலின் தலை பகுதியில் ஒரு சிறிய ஷெல்ப் இருக்கிறது. அதில் அவருக்கு தேவையான சில அத்தியாவசிய பொருட்கள் இருக்கின்றன. அத்துடன் ஒரு தொலைகாட்சி பெட்டியும் இருக்கிறது.
தங்களுடைய ஆடைகள் அனைத்தும் கட்டிலின் அடியில் அட்டை பெட்டியில் வைத்து கொள்கிறார்கள். தனியாக தட்டு, டம்ளர், போன்ற பொருட்களும் இருக்கின்றன். இதே போல் ஐந்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் ஒவ்வொரு அறையிலும் காணப்படுகின்றன. பக்கத்தில் ஒரு சமையல் அறையும் இருக்கின்றது.
அவரவர் கம்பெனிகளை பொறுத்து வேலை நேரம் இருக்கிறது. குறைந்தது பத்தில் இருந்து பனிரெண்டு மணி நேரம் வேலை செய்கிறார்கள். மாலையில் தான் தங்களுடைய அறைகளுக்கு வருகிறார்கள். வந்தவுடன் குளித்துவிட்டு தங்களுடைய சமையல் வேலைகளை பார்கிறார்கள். சில அறைகளில் தங்கியிருக்கும் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சமையல் செய்கிறார்கள். சில அறைகளில் இருப்பவர்கள் தனி தனியாக சமையல் செய்து தங்களில் ஷெல்பில் வைத்து கொள்கிறார்கள்.
சமையல் வேலைகள் முடிந்தவுடன் தங்களின் கட்டிலில் உள்ள தொலைகாட்சியில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகளை பார்கின்றனர். பார்த்து முடித்துவிட்டு அப்படியே அந்த கட்டிலில் படுத்து தூங்கி விடுகின்றனர்.
வாரத்தின் ஏழு நாட்களில் ஆறு நாட்கள் இப்படி தான் போகின்றது. வெள்ளி கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் சிலர் அன்றும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். சிலர் தனது நண்பர்கள அல்லது உறவினர்களின் அறைகளுக்கு சென்று அவர்களுடன் உறவாடி அன்றைய பொழுதை கழிக்கிறார்கள். இவ்வாறு தான் பெரும்பாலான குடும்ப தலைவர்களின் வாழ்க்கை கழிகின்றது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். தான் வெளிநாட்டில் படும் கஷ்டங்களை தனது மனைவியிடமும், குழந்தைகளிடமும் மறைக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு அப்பாவின் மேல் எந்தவித ஈடுபாடும் இருப்பது இல்லை. பண தேவைகளுக்கு மட்டும் அப்பாவை நாடுகின்றனர்.
அப்பாவின் கண்டிப்புகள் இல்லாததால் இவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வழியில் திசை மாறி விடுகிறார்கள். எங்கள் ஊரில் இது போல் நிறைய பேரை பார்க்க முடியும். தனது இளமைகளை வெளி நாட்டில் தொலைத்து விட்டு, இனிமேல் குழந்தைகள் தான் உலகம் என்று வரும் தந்தைகளுக்கு பெருத்த ஏமாற்றங்களே!!
உங்கள் உழைப்புகளை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள். பணத்தின் மதிப்பை அவர்களுக்கும் தெரிய படுத்துங்கள். காலம் கடந்த அறிவுரைகளும், படிப்பினைகளும் குப்பைகளில் தான். விழித்து கொள்ளுங்கள்!!!!
சமீபத்தில் நான் பணம் அனுப்புவதற்கு வங்கிக்கு சென்றிருந்தேன். அங்கு ஒருவர் தனது பணத்தை இரண்டு வங்கி கணக்குகளுக்கு அனுப்பி கொண்டிருந்தார். நான் அவரிடம் "ஏன் இரண்டு வங்கி கணக்குக்கு அனுப்புகிறீர்கள் ? ஒன்றில் அனுப்பினால் உங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் குறையுமே என்று கேட்டேன் " அதற்கு அவர் " ஒன்று என்னுடைய மனைவியின் வங்கி கணக்கு, மற்றொன்று என்னுடைய மகனுடையது, மகன் கல்லூரியில் படிக்கிறான். அம்மாவிடம் பணம் கேட்டால் அவன் அம்மா ஏன்? ஏதற்கு என்று கேட்பதால், இரண்டு பேருக்கும் அடிக்கடி தகறாறு வருகின்றது என்று என்னிடம் புலம்பினான். அதனால் தான் இரண்டு பேருக்கும் தனிதனியாக போடுகிறேன்" என்றார்.
அவருக்கு என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
0 comments:
Post a Comment