தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், பாட்னா குண்டு வெடிப்பின் எதிரொலி காரணமாகவும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், அரக்கோணம், கோவை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணிப்பபு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. நுழைவு வாயில்களில் 5 இடங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.
சந்தேகத்துக்கிடமாக ஏதேனும் பொருள்கள் ரயில் நிலையத்தில் இருந்தால் அது குறித்து உடனடியாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் போலீஸார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலைப் பயன்படுத்திப் பெண்களிடம் செயின் பறிக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும் பிக்பாக்கெட் கொள்ளையர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பட்டாசுக்குத் தடை: ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி யாராவது பட்டாசு பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை தடுப்பதற்காக பயணிகள் கொண்டு வரும் பைகள் ஸ்கேன் செய்த பின்னரே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் 300–க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.
சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரயில்களிலும், கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களிலும் போலீஸார் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து தமிழக ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் கயல்விழி கூறியதாவது:
ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தீபாவளியையொட்டி நவம்பர் 3-ம் தேதி வரை ரயில்களில் 24 மணி நேரமும் சோதனை நடைபெறும்.
இதற்காக சுமார் 1200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் நிகழும் குற்றங்களை தடுக்க பயணிகள் அனைவரையும் வீடியோ மூலம் படம்பிடிக்கப்படும்.
பயணிகள் அனைவரின் உடமையும் தீவிர சோதனைக்கு பின்பே ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்படும். எனவே பயணிகள் பட்டாசு மற்றும் இதர தீபிடிக்கும் பொருள்களை எடுத்து செல்லாமல் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி - 29 - 10 - 2013
0 comments:
Post a Comment