Home » » பொம்மலாட்டத்தில் 30 வகைக் கூத்துக்கள் இருந்தாலும் இன்றும் நல்லதங்காளுக்கே மவுசு !

பொம்மலாட்டத்தில் 30 வகைக் கூத்துக்கள் இருந்தாலும் இன்றும் நல்லதங்காளுக்கே மவுசு !

""அம்மா ராமலிங்க வரத்தினாலே
 அம்மா நல்லதங்காள் பிறந்தேன்
 இந்திராணி ஈன்றெடுத்த
 சுந்தர வதன ரூபி'' -

என்று பெருங்குரலெடுத்துப் பாடுகிறார் கோவிந்தராஜ். 50 வயதாகும் இவர் தனது 13ஆம் வயதிலிருந்து பொம்மலாட்டக் கூத்தை பல்வேறு கிராமங்களுக்கும் சென்று நடத்திக்கொண்டிருக்கிறார். சமீபத்தில்கூட தர்மபுரி, பென்னாகரம் அருகே கட்டபொம்மலாட்டம்,


 நல்லதங்காள் கூத்து ஆகியவற்றை நிகழ்த்தி பார்வையாளர்களைக் கவர்ந்தார். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கொங்குப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அவரிடம் பேசினோம்:


 ""முதலில் எனது தாத்தா பொம்மலாட்டக் கூத்தை நடத்தினார். அதன் பிறகு எனது தந்தை இந்தக் கூத்தை கிராமம் கிராமாக சென்று நடத்தி மக்களை மகிழ்வித்தார். அவரின் மூலம் எனக்கு இந்தக் கூத்து பரிச்சயமானது. எங்கள் ஊரில் மாரியம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. அதில் எங்கள் குடும்பத்தினர் பூசாரியாகப் பணிபுரிய வேண்டும். எனது தந்தை பொம்மலாட்டத்திற்கு வெளியில் சென்று விட நான் ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்துவிட்டு பூசாரியாக இருந்தேன்.

ஆனால் எனக்கும் பொம்மலாட்டக் கலையில் சிறக்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. எனவே 13 வயதிலிருந்து எனது தந்தையின் பின்னால் அவர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். அதன்பிறகுதான் பொம்மலாட்டக் கூத்தை அறிந்துகொண்டேன். இந்த பொம்மலாட்டக் கூத்தில் மொத்தம் 30 வகைகள் இருக்கின்றன.

ராமாயணத்தை எடுத்துக்கொண்டால் லவகுசா, வனவாசம், வாலி மோட்சம், மகா பாரதத்தில் திரௌபதி திருமணம், துகிலுரிதல் போன்றவற்றை பொம்மலாட்டம் மூலம் மக்களுக்கு சொல்லிக் காட்டி மகிழ வைக்கிறோம். இதுதவிர குறவஞ்சி நாடகம், சித்திர சேனன் சண்டை, கந்தர்வன் கர்வ பங்கம் போன்றவையும் எனது பொம்மலாட்ட நிகழ்ச்சிகளில் உண்டு.


 "ராமகிருஷ்ணா கட்டபொம்மலாட்ட கம்பெனி' என்பது எனது குழுவின் பெயர். தர்மபுரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஊர்த் தலைவர்களின் அனுமதியோடு பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்துகிறோம். ஒரு வெட்ட வெளியில் டெண்ட் அமைத்து நிகழ்ச்சி நடக்கும். இதற்காக எங்களின் செலவில் போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்கிறோம். சைக்கிளில் ரேடியோ கட்டிக்கொண்டு அறிவிக்கிறோம்.

முன்பெல்லாம் 30 நாட்கள் வரை பொம்மலாட்டம் நடத்துவோம். இப்போது தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பால் 15 நாட்கள் நடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது. எனது தந்தையின் காலத்தில் 25 பைசா டிக்கெட் கொடுத்துப் பார்த்தார்கள். இப்போது 15 ரூபாய். ஆனால் அதுவே சிலர் கொடுப்பதில்லை.

சில சமயங்களில் சிலர் குடித்துவிட்டு எங்கள் பொம்மலாட்டக் கூத்து நடக்கும்போது அதைக் கிண்டல் செய்து பிரச்னை செய்வதும் நடக்கிறது. அதையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. எது எப்படியென்றாலும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் "நல்லதங்காள்' கூத்துக்கே அதிக கூட்டம் வருகிறது. மற்ற கூத்துக்களுக்கு அவ்வளவு கூட்டம் வருவதில்லை.


 முன்பு இந்த சுற்று வட்டாரத்தில் எங்களைப் போன்று 15 குழுக்கள் இருந்தன. இப்போது எங்கள் குழுவும், இன்னும் ஒரு சில குழுக்களும் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனது குழுவில் 12 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இதே வருமானம்தான். இந்தக் கலையில் கை தேர்ந்த மூத்தக் கலைஞர்கள் எல்லாம் தற்போது இறந்துவிட்டார்கள். புதிதாக யாரும் கற்றுக் கொள்ள வருவதில்லை. எனவே இந்தக் கலை இன்னும் எவ்வளவு நாள் உயிரோடு இருக்கும் என்று நினைக்கும்போதே அச்சமாக இருக்கிறது. வருடத்தில் எல்லா நாட்களும் பொம்மலாட்டக் கூத்துகள் நடத்த வாய்ப்புக்
கிடைப்பதில்லை.

வருடத்தில் பாதி நாட்களை நாங்கள் வறுமையில்தான் கழிக்க வேண்டியிருக்கிறது'' என்ற கோவிந்தராஜ் மேலே சொன்ன பாடலை மீண்டும் பாடிக் காண்பித்தார். ஏதோ ஒருவித சோகம் நம்மைக் கவ்விக்கொண்டது.


 - பா. சரவணகுமரன்

 படம் : ஆழி. வெங்கடேசன்                 

தினமணி, 20 - 10 - 2013

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Winmani Template | winmani Template
Copyright © 2013. பார்த்ததும் படித்ததும் - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger