பெரு தலைநகர் லிமாவில் நடைபெற்ற இந்தியா-பெரு உயரதிகாரிகள் சந்திப்பில்
பெரு துணை அதிபர் மரிசோல் எஸ்பினோசாவுடன் (வலமிருந்து இரண்டாவது) குடியரசு
துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு பெரு நாடு ஆதரவு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்பட நான்கு முக்கிய ஒப்பந்தங்களில் திங்கள்கிழமை கையெழுத்திட்டபோது, இந்த வாக்குறுதி வழங்கப்பட்டது.
இந்தியாவுக்கும், லத்தீன் அமெரிக்க நாடான பெருவுக்கும் இடையே தூதரக உறவு தொடங்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி இந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, அந்நாட்டுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்தார்.
அவரது பயணத்தின் இறுதி நாளான திங்கள்கிழமை, இரு நாடுகளுக்கும் இடையே கல்வி, கலாச்சாரம் உள்பட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் அவரது முன்னிலையில் கையெழுத்தாயின.
இந்தியாவின் சார்பில் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசன்னா, பெரு நாட்டுக்கான இந்தியத் தூதர் மன்பிரீத் வோரா, கலாச்சாரத்துறை அமைச்சரகச் செயலாளர் ரவீந்திர சிங் ஆகியோரும், பெரு நாட்டின் சார்பாக அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் இடா ரிவாஸ் பிராஞ்சினியும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இவற்றில், இரு நாட்டு மாணவர்களையும் பரிமாற்றம் செய்துகொள்வதற்கான ஒப்பந்தம், கலாச்சாரத் துறையில் ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம், இருதரப்பு உறவை பலப்படுத்துவதற்காக கூட்டுக் குழு ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஆகியவை அடங்கும்.
நிகழ்ச்சியின்போது, பெரு மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை சிறப்பாக செயல்படுவதற்கு உதவும் வகையில் இந்திய வர்த்தகர் சங்கத்தை (இன்சாம்) ஹமீத் அன்சாரி தொடங்கிவைத்தார்.
பெரு வெளியுறவுத்துறை அமைச்சர் இடா ரிவாஸ் பிராஞ்சினி கூறுகையில், ""உலகின் அதிமுக்கியமான பொருளாதார சக்திகளில் இந்தியாவும் ஒன்று. பல்வேறு துறைகளிலும், குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா பெற்றிருக்கும் வளர்ச்சி பாராட்டுக்குரியது'' என்று தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே, தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை (எப்.டி.ஏ) மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் இருதரப்புமே ஆர்வம் காட்டின.
முன்னதாக, திங்கள்கிழமை இருநாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ""இரு நாடுகளில் வசிக்கும் மக்களின் நன்மைக்கு எப்.டி.ஏ. வழிவகுக்கும் என்பதை இருதரப்பும் உணர்ந்துள்ளன. இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இந்தியா எடுத்துவரும் முன்முயற்சிகளை பெரு வரவேற்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிக அதிக அளவில் வெள்ளி உற்பத்தி செய்யும் பெரு நாடு, செம்பு மற்றும் துத்தநாக உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. தங்க உற்பத்தியில் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு இது. இந்நாட்டில் 15 லட்சம் கோடி கன அடி எரிவாயு இருப்பு உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
அதிக அளவில் தாதுவளம் கொண்டுள்ளதால், பெரு நாட்டுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.
பெரு அதிபருடன் சந்திப்பு: முன்னதாக, பெரு அதிபர் ஆலண்டா ஹுமாலா டஸ்úஸாவை சந்தித்துப் பேசிய ஹமீத் அன்சாரி, அவரை இந்தியாவுக்கு வரும்படி அழைத்தார். ஆலண்டா அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
கியூபா பயணம்: பெரு நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, செவ்வாய்க்கிழமை கியூபா நாட்டுக்கு ஹமீத் அன்சாரி அரசுமுறைப் பயணமாகப் புறப்பட்டார்.
தினமணி - 30 - 10 - 2013
0 comments:
Post a Comment