வாஷிங்டன்,
பிரபல சிலை கடத்தல் மன்னனின் சகோதரியிடம் இருந்து ரூ.1½ கோடி மதிப்பிலான இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு வந்த 4 சிலைகள் அமெரிக்க போலீசார் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
சிலை கடத்தல் மன்னன்
இந்தியாவில் புராதான கோவில்களில் இருந்து பஞ்சலோக சிலைகளை கடத்தி வெளிநாடுகளில் விற்பனை செய்து வந்த பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர். இவனை பிடிக்க சர்வதேச போலீஸ் வாரண்ட் பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் அவனை போலீசார் கைது செய்தனர். அவன் தற்போது சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கடத்தல் மன்னனின் கூட்டாளி
பிரபல கடத்தல் மன்னன் கபூரின் மகள் மம்தா சாகர் அமெரிக்காவில் கலைக்கூடம் என்ற பெயரில் தொழில் செய்து வருகிறார். அவருடன் இணைந்து கடத்தல் மன்னனின் சகோதரி சுஷ்மா சரீன் (வயது 60) வேலை பார்த்து வந்தார். அவரது நடவடிக்கைகளை அமெரிக்க போலீசார் உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். அப்போது சிலை கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள தனது சகோதரர் கபூரைப்போன்று அவரும் சிலை கடத்தலில் ஈடுபட்டு வந்ததை கண்டு பிடித்தனர்.
அவர் தனது சகோதரனைப்போன்று இந்தியாவுக்கு சென்று சிலை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சரீனிடம் நடத்திய சோதனையில் 4 சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர் அந்த சிலைகளை மிகவும் பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டதையும் அவற்றை கப்பல் மூலம் கடத்த முயற்சித்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அரியலூர் கோவில் சிலைகள்
சரீனிடம் இருந்து 12–ம் நூற்றாண்டு சோழர் மன்னர் காலத்திலான ரூ.35 லட்சம் மதிப்பிலான சிவா சிலையும், ரூ. 50 லட்சம் மதிப்பிலான நடராஜர் சிலையும், ரூ.25 லட்சம் மதிப்பிலான உமா பரமேஸ்வரி சிலையும் மற்றும் ரூ.35 லட்சம் உமா பார்வதி சிலையும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 சிலைகளின் மொத்த மதிப்பு ரூ.1½ கோடி ஆகும்.
இந்த சிலைகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள அரியலூரில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து திருடப்பட்டதாகும்.
4 சிலை வழக்கில் சிக்கிய சரீன் தற்போது ஜாமீனில் உள்ளார். அவர் மீதான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு (2014) ஜனவரி மாதம் விசாரணைக்கு வருகிறது.
தினத்தந்தி - 29 - 10 -2013
0 comments:
Post a Comment